இந்த லக்னத்தில் தோன்றியவர்களிடம் தேளின் குணம், நடை, பாவனை, தோற்றம், பார்வை, கம்பீரம் ஆகிய குணங்கள் அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.
இந்த விருச்சிக லக்னத்தில், காங்கிரஸ் கட்சியின் தந்தை என்று போற்றப்படும் தேசபந்து சித்தரஞ்சன்தாஸ், மூதறிஞர் ராஜாஜி, எகிப்து ஜனாதிபதி நாசர், இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி, ரஷ்ய பிரதமராக இருந்த கோசிஜின், பங்களாதேஷின் தந்தை ணேக் முஜிபுர் ரகிமான், கம்யூனிஸ்ட் கட்சியின் தந்தை லெனின் மத்திய அமைச்சர். சி. சுப்ரமணியம், ஹிந்து பத்ரிகை ஆசிரியராக இருந்த சீனிவாசன், பிரபல கதாகாலட்சேப உபன்யாசர் சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர், பிரபலமான கைரேகை நிபுணர் சீரோ திருக்கணித பஞ்சாங்க ஆசிரியர் சி.ஜி. ராஜன், திரைப்பட நட்சத்திரங்கள் ஏ. நாகேசுவரராவ், பானுமதி, சௌகர் ஜானகி போன்ற அறிஞர்களும், மேதைகளும், அரசியல் வாதிகளும் தோன்றி இருக்கிறார்கள்.
இந்த லக்னத்தில் தோன்றியவர்கள் நடுத்தர உயர முள்ளவராகவும், விரிந்து அகன்ற நெற்றியுடையவர்களாகவும் இருப்பார்கள். ஒல்லியாக காணப்பட்டாலும், எலும்பு வெளிப்புறத் தோற்றத்திற்கு தெரியாத வண்ணம் தசை மூடி சற்று உருண்டை சரீர அமைப்பை பெற்றிருப்பார்கள். மாநிறமுள்ளவரானாலும் பார்ப்பவர்க்கு பூனைபோல் எதையும் அறியாதவர் போல் தோற்றமளித்திடுவார்கள். மேல் புருவம் சற்று உயர்ந்தும், கண்களை மேல்புறமிருந்து சற்று மூடியவாறும் அமைந்திருக்கும். இவர்களுடன் நெருங்கிப் பழகுபவர்களுக்குத் தான் இவர்களுடைய சுயரூபம் தெளிவாக விளங்கும்.
நீங்கள் பேசும்போதும் பிறரைப்பற்றிய அபிப்ராயத்தை வெளியிடும் போதும், வேடிக்கையும், கிண்டலும், கேலியும், கண்டன்ம கலந்த நகைச்சுவையும் இவர்கள் பேசும் பேச்சில் பிரதிபலித்து காட்டும். வேடிக்கை வினோதங்களிலும் உல்லாச கேளிக்கைகளிலும் விளையாட்டுப் பந்தயங்களிலும், கலந்து கொள்வதுடன் தாமே முக்கிய பாத்திரங்களில் பங்கு கொள்வதில் அலாதி விருப்ப முடையவர்கள். பார்ப்பதற்கு ஒன்றும் தெரியாத வெகுளியைப் போல் தோற்றமளித்தாலு, விளையாட்டுகளிலும், பந்தயங்களிலும் ஈடுபடும் போதும் ‘பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி’ என்னும் அளவுக்கு இவர்கள் திறமை பளிச்சென்று எடுத்துக்காட்டும். வாக்கு-வாதங்களிலும் பேச்சுப் போட்டிகளிலும் சண்டபிரசண்டமாக வாதிக்கும் திறமை பெற்ற இவர்கள் ஆவேசமாகப் பேசி, கேட்பவர்களைத்தன் வசமாக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள். ªரும்பாலும் பழைய சம்பிரதாயங்களைக் கடைப் பிடிப்பவர்களாயினும் நவீன நாகரிக புதிய சம்பிரதாயங்களிலும் விருப்பம் கொண்டவர்கள். தான் ‘பிடித்த முயலுக்கு மூன்றே கால்’ என்ற பிடிவாதக் கொள்கையை கடைப்பிடிப்பவராதலால் இறுதிவரை இவர்களை மாற்றுவது கடினமாகும். தவிரவும் பிறருக்கு விட்டுக் கொடுக்கும் குணத்தையும் இவர்களிடத்தில் காண்பது அரிதாகும். இவர்களுக்கு மாறுபட்ட கருத்துடையவர்கள் இவர்களிடத்தில் சாமானியமாக பேசி வெற்றி பெறுவது அசாத்தியமாகும். இவர்கள் பெரும்பாலும் சுய நலக்காரர்கள் ஆனதால் குடும்பத்தில் இவர்களுடைய அன்புக்கு பாத்திரமுள்ளவர்களானாலும், தன்னுடைய அந்தரங்க நட்புக்குள்ளானவர்களானாலும், தான் எடுத்துக்கொண்டபின் மிஞ்சுவதைத் தான் மற்றவர்களுக்கு கொடுப்பார்கள். சங்கோச முடையவர்களானாலும் முன் கோபமுடையவர்களாதலால் உணர்ச்சிவசப்பட்டு எதையும் செய்திடுவார்கள். அறுசுவை உண்டிகளில் விருப்பம் உள்ளவர்களாதலால் உயர்ந்த வஸ்துக்களையே விரும்பி அடைந்திடுவார்கள். ஏற்கும் தொழிலைத் திறமையுடன் செய்து முடிக்கும் இவர்களை யாரும் எளிதில் ஏமாற்ற முடியாது. சிறந்த கல்விமானாக விளங்கும் இவர்கள் மூலை முடுக்குகளில் இருக்கும் பொருள்களையும் ஊடுருவிப் பார்ப்பவர்களாதலால் துப்பறியும் வேலைகளில் திறமையாக செயலாற்றுக் கூடியவர்கள். இவர்களுக்கு அந்தரங்க வியாதிகள் ஏற்படத்தக்கதாக அமைந்தாலும் தனக்கு நெருங்கியவர்கள் நெறி தவறும்போது வன்மையாகக் கண்டிப்பார்கள். சிறு வயதில் அனேக கஷ்ட-நஷ்டங்களுக்கு உள்ளானலும் வயது ஏறஏற அனுபவம் பெற்று பெரிய பதவிகளையும் வகிப்பார்கள். பிறருக்கு கடினமாகத் தோன்றும் வேலைகள் இவர்களுக்கு எளிதாகத் தோன்றும்.
தேளின் சுபாவ குணத்தை அதிகமாகப் பெற்ற இவர்களிடத்தில் குறும்புத்தனமும், விஷமத்தனமும் அதிகமிருக்கும்.
நெருங்கியவர்களாயினும், வேடிக்கை விளையாட்டுகளை அளவோடு வைத்திருக்காவிட்டால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதபடி விஷமத்தனம் செய்து பாடம் கற்பிப்பார்கள். பெரியவர்களிடத்தில் அதிக மரியாதை உடைய இவர்கள் சிறியவர்களை அடக்கியாளும் குணம் படைத்தவர்கள். தனக்குப் பிடிக்காதவர்களை அடிக்கடி கொட்டிக் கொண்டே இருப்பார்கள். குறும்புத்தனம் செய்தபிறகு, தேள் மறைவது போல் இவர்களும் மறைந்து விடுவார்கள். இவர்களிடத்தில் குற்றம் குறைகள் அதிகமாக இருப்பினும், மற்றவர் மாக்குவதில் தனி கவனம் செலுத்துவார்கள். ஆனாலும் இவர்களைத் துணை கொண்டால் எந்தக் காரியத்தையும் எளிதில் சாதித்து வெற்றி பெறலாம்.
விருச்சிக லக்ன ஜாதகர்கள் நியாயம் அநியாயங்களை தெள்ளத் தெளிவாக யாராக இருந்தாலும் பயமின்றி எடுத்துரைப்பார்கள். தவறானவற்றை ஆதார பூர்வமாகவும், சட்ட ரீதியாகவும் அடித்துப் பேசக்கூடிய ஆற்றலுடையவர். பெரியவர்களாயினும் அந்தஸ்து, அதிகாரம், பதவி, பட்டம் முதலிய அம்சங்களில் இவர்களுக்கு உயர்ந்தவர்களாயினும், தவறு செய்தாலும், தவறான அபிப்ராயத்தை வெளியிட்டாலும் தங்களுடைய கண்டனத்தைத் தெரிவிக்க அஞ்சமாட்டார்கள். அவ்வாறு தெரிவிப்பதால் ஏற்படும் சாதக-பாதக விளைவுகளைப் பற்றி அச்சமும், பயமும் இவர்களுக்கு ஏற்படாது. அப்படி முன்பின் யோசிக்காமல் தூக்கியெறிந்து பேசிவிட்டு விலகி விடுவார்கள். ஓர் இடத்தில் கண்டால் அவரை மறுபடி அந்த இடத்தில் காண முடியாது.
இந்த லக்னத்தில் தோன்றியவர்கள் தங்களுடைய குடும்பத்தைப் பற்றியும், நிதி நிலைமை வசதிபற்றியும் தம்மை நாடி வந்தவர்களின் எதிர்கால பலனையும் நிர்ணயித்துக் கூறும் அளவுக்கு தீர்க்க தரிசனம் படைத்தவர்கள். இவர்களுடைய சொல்லுக்கு நல்ல மதிப்பு இருந்தாலும் தங்கள் கருத்தை லேசில் வெளியிட மாட்டார்கள். இவர்கள் வெளியிடும் கருத்துகள் உண்மைக்கு மாறாக இருக்காது என்பதால் இவர்கள் கருத்தின்படி செயலாற்றுபவர்கள், தம்முடைய வாழ்க்கையில் நல்ல பலனைக் காண்பார்கள். இவர்கள் கண்டிப்பாக பேசினாலும், இவர்களுடைய பேச்சில் மறைமுகமான உண்மை விளங்கும். குடும்ப அமைப்பு ஏற்படுவதில் இவர்கள் பாக்கியசாலிகளே. குடும்பம் வாழ்க்கை வசதிகளுடன் சிறப்புடன் அமைந்து மனைவி மக்கள்-குடும்பத்தினர் யாவரும் ஒற்றுமையுடன் பேணிக் காத்திடுவார்கள்.
பண வசதியைப் பார்க்கும்போது, இவர்களுக்குத் தேவையானபோது, தேவையான அளவுக்குத்தான் பணவசதி அமையுமே தவிர-நிதி தேங்கி முடங்கிவிடக் கூடிய அளவுக்கு நிதி வசதி அமையாது. தேவையான சமயத்துக்கு தேவையான அளவு பணவரவு ஏற்படுவதால் இவர்களுக்கு பற்றாக்குறையோ அல்லது பணமுடையோ ஏற்படுவதில்லை. எவருடைய பணமாகிலும் இவர்கள் கையில் தேவையான போது இருந்து கொண்டே இருக்கும். நியாயமான செலவுகளுக்கல்லாமல் மற்ற வகையில் அனாவசியமான செலவுகளை அளவு மீறி செலவு செய்ய மாட்டார்கள். ஒரு சிலர் ஆடம்பர வசதிகளுக்காகவும், உயரிய ஆடை ஆபரணங்களுக்காகவும், வாழ்க்கையில் சுகம்
குறையாதிருக்கவும், நல்ல உணவுகளை உட்கொள்ளவும் செலவு செய்திடுவார்கள். சுயசம்பாதனையில் பிரியமுள்ள இவர்கள் புராதன சொத்துக்களை விற்று பணமாக்கியோ அல்லது அவற்றின் மூலம் பெறும வருமானத்தைக் கொண்டோ தங்கள் வாழ்க்கைச் செலவுகளை செய்து கொள்ள வேண்டும் என்ற நாட்டம் கொண்டவர் களல்லர். அடிமைத் தொழில் புரிந்தாவது, சுயமுயற்சியால் நேர்மையாக பாடுபட்டு செல்வம் சேர்த்துக்கொள்ளும் கொள்கை உடையவர்களே யல்லாது வேறு குறுக்கு வழிகளில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட மாட்டார்கள். ஆனால் எப்படியாவது தனது ஜீவனோ பாயத்தை உயர்த்திக் கொள்ள வேண்டுமென்ற பாடுபாயத்தை உயர்த்திக் கொள்ள வேண்டுமென்று பாடுபடுவார்கள். இளமைப் பருவத்தில் அரும்பாடுபட்டு கஷ்ட வாழ்க்கை நடத்தி பணத்தை சேர்க்கும் இவர்கள், நடுவயதில் நல்லபடி சம்பாதித்து வயோதிக காலத்தில் குன்றாத வசதியும், நிறைந்த செல்வமும் பெற்று வாழ்ந்திடுவார்கள்.
இயற்கையாகவே உடன்பிறந்த சகோதர-சகோதரிகள் நிறையப் பெற்றவராயினும், இவருக்கும் உடன் பிறந்தவர்களுக்கும் ஒற்றுமை நிலவுவது கடினமாகும், பரஸ்பர விரோதங்களோ அல்லது மனஸ்தாபங்களோ ஏற்படா விட்டாலும் பரஸ்பர ஒற்றுமை இருக்காது. எனவே, அவசியமான தருணத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பர உதவி அல்லது ஒற்றுமை ஏற்படாது.
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும், தளராது அயராது முயன்று பாடுபடுவார்கள். முயற்சிகள் தோல்வியுற்றாலும் கஷ்டங்கள் மேலும் மேலும் வந்தாலும் சுகம் குறைந்தாலும் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் சளைக்காமல் மேலும் முயன்று போராடி வெற்றி பெறுவார்கள். இவரை தடுத்து நிறுத்துபவர்கள் யாரானாலும் இவர்களுடைய கோபத்துக்கு உள்ளாவதைத் தடுக்க முடியாது. பல அறிஞர்கள் வகுத்துக் காட்டிய வழி நெறியையும், தனக்கென தனி வழியையும் வகுத்துக்கொண்டுள்ள இவர்கள் பிறர் போற்றும் அளவுக்கு செயலில் ஈடுபட்டு வெற்றி பெறுவார்கள். சிலர் கண்டனத்துக்குட்பட வேண்டியிருந்தாலும், பலருக்கு ஆதரவான காரியங்களானால் எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் ஈடுபட்டு வெற்றி பெற்றுக் காண்பிப்பார்கள். இவர் ஈடுபடும் காரியங்களில் மேலோர் கீழோர் என்ற பாகுபாடு இன்றி யாவருக்கும் ஒரே நெறியை வகுத்து செயல் புரிந்திடுவார்கள். யாவரும் போற்றும் அளவுக்கு மற்றவர் வியப்படையும் அளவுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் திறமை இவர்களுக்கே தனிச் சிறப்புடன் அமைந்ததாகும் என்று கூறினால் மிகையாகாது.
இவர்களுக்கு அன்னையின் ஆதரவி குறைந்தே காணப்படும். தாயாரின் உடல் நலக்குறைவு எப்பொழுதும் கவலையளித்துக் கொண்டிருக்கும். ஒரு சிலருக்கு சிறுவயதில் தாயாருக்கு கண்டம் ஏற்பட்டு வேறிடத்தில் மற்றவர்களால் வளர்க்கப்படும் சூழ்நிலை ஏற்படும். பெற்றோருடைய ஆதரவு இல்லாவிட்டாலும் சுயமாக உழைத்து முன்னேற்றம் பெறுவார்கள். பெற்றோர்கள் இருந்தாலும் அவர்களுடைய ஆதரவோ அல்லது சொத்தோ இவர்களுக்குப் பயன் தராது. அதுபோலவே உற்றார் உறவினர்களின் சகாயமும் இவர்களுக்கிருக்காது; ஆனால் அவர்களால் தொல்லை மிகுந்திருக்கும். நெருங்கிய உறவினர்களால்தான் இவர்களுக்கு அடிக்கடி தொல்லைகளும், கவலைகளும் ஏற்படும். அடிக்கடி இவர்களிடம் உதவியை நாடிப் பெறும் உறவினர்கள், எவ்வளவுக் கெவ்வளவு உதவிபெற்றாலும் போற்றுவதற்குப்பதிலாக மறைமுகமாகத் தூற்றிடவும் செய்வர்.
இந்த லக்னத்தில் தோன்றியவர்களுக்கு சுயமாக வாகன சேர்க்கையை சிறுவயதிலிருந்தே அமைத்துக்கொள்ளும் வாய்ப்பும் ஏற்படும். சொந்த வீடு இருந்தாலும் மிகவும் பழையதாகவும், பாழடைந்ததாகவும் இருக்கக் கூடும்; அல்லது மற்றவரது அனுபவத்தில் இருந்து வரும். எனவே இவர்கள் குடியிருப்பதற்கு வாடகை வீட்டில்தான் குடியிருக்க வேண்டியதிருக்கும். வயது கடந்தபிறகு தக்க பருவத்தில் சுயமாக வீடுமனை-வாகனம்-ஸ்திர சொத்து ஏற்பட்டு, வசதியுடன் அமைத்து குடியேறுவர். அப்படிக்கின்றி இளவயதிலேயே இந்த வசதி ஏற்படின் அதில் ஏதாவதொரு குறைபாடு இருந்தே தீரும், அல்லது கட்டிடம் அரைகுறையாக நிற்கும். வாகன வசதி முதலிய சௌகரியங்கள் இவர்களது வயது, அந்தஸ்து, பருவம் இவற்றுக்கேற்றவாறு அமையும், ஒரு சிலர் பசு, கன்று முதலியவற்றை வளர்ப்பதிலும் ஆவலுள்ளவராக இருப்பார்கள். ஆனால், விவசாயத் துறையில் இவர்களுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படுவதால் பயிரினங்கள் நல்ல பலிதத்தையளித்திடும். சில சமயங்களில் தண்ணீர் வறட்சியினால் கிணறுகளை ஆழப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் எற்படும்.
இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் புத்திக் கூர்மையுள்ளவர்களாதலால் அதிக சிரமமின்றி கல்விபயிற்சியில் தேறுவார்கள். இவர்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்ப கல்விப் பயிற்சி ஏற்படுமேயல்லாது உயர்தரக் கல்வி பெரும்பான்மையோர்க்கு ஏற்படுவதில்லை. படிப்பில் அக்கறை மிகுந்து காணப்பட்டாலும், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கல்வி தொடர்ந்து பெற வாய்ப்பு ஏற்படுவது இல்லை. சிறுவயதில் மற்றவர்கள் ஆதரவினால் கல்வியில் தேறும் இவர்கள் நல்ல புத்திக் கூர்மையும், திறமையும், அறிவாற்றலும் இருந்தும் மேல்படிப்பிற்கு ஆதரவு அளிக்கக் கூடியவர்கள் இல்லாததால் நடுவில் நிறுத்திக் கொள்ள நேரிடும். ஆனால் குறைந்த கல்வி பெற்றாலும் இவருடைய தொழில் முன்னேற்றம் எவ்விதத்திலும் பாதிப்படையாது என்பது மட்டும் உறுதி.
உங்களுக்கு கல்வியில் பெறும அறிவைவிட அனுபவ அறிவு சிறந்து விளங்கும். ஒரு சிலரே உயர்தரக் கல்வி பெற்று பட்டதாரி ஆகும் வாய்ப்பைப் பெறுவார்கள். ஆனாலும் உயர்தரக் கல்விப் பெற்ற பட்டதாரிகளும், தொழில் நுட்ப சாதனையில் உயர்தர படிப்பு பெற்றவர்களும்கூட ஆச்சரியப்படத் தக்க வகையில் உங்களுடைய ஆராய்ச்சித் திறனின் அரும்பெரும் சாதனைகள் சிறந்து விளங்கும். ஆகவே, உயர்தர படிப்பிற்காகவோ அல்லது தொழில் நுட்ப பயிற்சியில் உயர்தர படிப்பு பெறவோ அயல்நாடு செல்ல உங்களுக்கு சந்தர்ப்பங்கள் ஏற்படுவது இல்லை. ஆனால் நீங்கள் ஈடுபட்டுள்ள தொழிலின் நிமித்தம் ஒப்பந்தங்களை நிறைவேற்றவோ அல்லது மேற்பார்வையிடவோ உங்களுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்புகள் ஏற்படக்கூடும். இதனால் நீங்கள் சாதகமான பலனையே அடைவீர்
இந்த லக்னத்தில் தோன்றியவர்களுக்கு பெரும்பாலும் தெய்வீக அருள் பூரணமாக நிறைந்து காணப்படும். முற்பிறப்பில் செய்த நற்காரியங்களின் பயனாக இப்பிறவுயில் அப்பலன்களை அனுபவிக்கக்கூடிய வாய்ப்பு அமையப்பெற்ற பாக்கியசாலிகள். எத்தகைய சோதனைகளும், தொல்லைகளும், கஷ்டங்களும் ஏற்பட்ட போதிலும், தெய்வ அருளால் எத்தகைய துன்பங்களும், தொல்லைகளும் நீங்கி வறுமைகள் அகன்று வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவிடும். இவர்களுக்கு குறைந்த பிள்ளைகளும், பெண்களும் பிறந்தாலும் நல்லொழுக்கமும், நற்குணங்களும் உடையவர்களாகவே இருப்பார்கள். இவர்களுக்குப் பிறக்கும் மக்களால் இவர்களுக்குப் பெருமையே ஏற்படுவதால், பிள்ளைகளைப் பற்றிய கவலை இவர்களுக்கிருப்பதில்லை.
உங்களுக்கு சாதாரணமாக எந்த நோயும் ஏற்படுவதில்லை. அப்படி ஏற்பட்டாலும் உடனுக்குடன் நிவாரணம் அடையக் கூடியதாக இருக்கும். அடிக்கடி சரீரத்தில் காயமேற்படுதல், உஷ்ணக் கட்டிகள் அல்லது தீப்புண்கள் ஏற்படுவதால் தழும்புகள் ஏற்படுமேயல்லாது வேறு கவலை தரக்கூடிய வியாதிகளாக ஏற்படாது உங்களுடைய தேகம் உஷ்ணமானதாகையால் அதிக காரசாரமான உணவுப்பொருள்களை சாப்பிடுவதால் சீதபேதி, வயிற்றுக் கோளாறு ஆகிய நோய்கள் அடிக்கடி ஏற்பட ஏதுவாகும். ஒரு சிலர்க்கு விரைவாதம், இரணியா போன்ற நோய்களும் ஏற்படக்கூடும்.
கடன் வாங்குவதே பிடிக்காத இவர்கள் மற்றவர்களுக்கு கடன் கொடுக்கவும் தயங்குவர். குடும்பத்தின் பழைய கடன் சுமையை ஏற்க மறுப்பதால், குடும்பத்தில் இவர்களுக்கும், உடன் பிறந்த சகோதரர்களுக்கும் அடிக்கடி சச்சரவுகள் தோன்றிக் கொண்டே இருக்கும். இவர்கள் எந்த கவலைகள் ஏற்பட்டாலும் பொருட்படுத்த மாட்டார்கள். அதிக பொறுப்பான வேலைகளை ஏற்றுக் கொண்டால் கவலைகள் அதிகரிக்கும் என்பதால் பொறுப்புகளைத் தட்டிக்கழித்து சுயேச்சையாக இவர்கள் செயல்படுவார்கள். பெரும்பாலும் தங்களுடைய அந்தஸ்தையும் கௌரவத்தையும் உயர்த்திக் கொள்வதில் தங்களுடைய முழு கவனத்தையும் மனத்தையும் செலுத்துவதால் மற்ற துறைகளில் இவர்களுக்கு கவலைகள் ஏற்படுவதில்லை எனவே இந்த லக்ன ஜாதகர்கள் கவலையற்ற பாக்கியசாலிகள் என்றால் மிகையாகாது.
உங்களுக்கு எந்த துறையிலும் எதிர்ப்புகள் மலிந்து இருக்கும். எதிரிகள் உங்களுக்கு நேர்முகத் தொல்லைகளும் மறைமுக இடையூறுகளும் ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள். எந்தக் காரியத்தில் இறங்கினாலும் சுலபமாக நடந்தேற வேண்டியவைகூட, பலவித இடையூறுகள் ஏற்பட்டு போராட்டங்களுக்குப் பிறகுதான் வெற்றிகரமாக முடியும். எதிரிகளால் எத்தகைய எதிர்ப்புகளும், இடையூறகளும் ஏற்பட்டாலும் முடிவில் வெற்றி உங்களுடையதாகத்தான் இருக்கும். எதிரிகளின் எதிர்ப்பினால் உங்களுக்கு சாதகமான பலன்கள் தான் ஏற்படுமேயன்றி பாதகமாக ஒன்றும் நேராது. ஒரு சில சயங்ககளில் தங்கள் சகோதரர் பங்காளி வகையினருக்குள் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு தங்கள் உரிமையை நிலை நாட்டிக் கொள்ளவும், , தங்கள் உடைமைகளைப் பாதுகாத்துக்கொள்ளவும் வேண்டி நீதிமன்றங்களை நாடவேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படும்.
இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மனைவி வகையில் பொருள் சேர்க்கை ஏதும் ஏற்பட நியதியில்லை. ஏற்படக்கூடிய வாய்ப்பும் வசதியும் இருந்த போதிலும் திருமணத்துக்குப் பின் அந்த வாய்ப்புகள் குறைந்திடும். மனைவியின் மூலம் பொருளுதவி ஒரு சிலர்க்கே ஏற்படும். எப்படியிருந்தாலும் வாழ்க்கை வசதி நல்ல முறையில் அமைந்திடும். பதவி, அந்தஸ்து கௌரவம் முதலியன உயர்ந்திடும். இவர்கள் கருத்துக்கேற்றவாறு செயல்படும் மனைவி வாய்ப்பதால் இவர்கள் பாக்கியசாலிகளே. அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும் அவற்றைப் பொருட்படுத்தாது இவர்களுக்கு தக்கவாறு பணிவிடைகளை சுணக்கமில்லாமலும் வெறுப்படையாமலும் செய்வார்கள். இவர்களுடைய விருப்பு வெறுப்புகளை அனுசரித்து அவற்றிற்குத் தக்கவாறு செயலாற்றும் மனைவியே வாய்ப்பாள். இவர்களுடைய வருமானத்துக்கு தக்கவாறு சிக்கனமாக வாழ்க்கையை நடத்திச் செல்லக்கூடிய பெண்மணியே இவர்களுக்கு மனைவியாக அமைவாள்.
இவர்களுக்கு வாய்க்கும் மனைவி குடும்பத்தில் மூத்த பெண்ணாகவும் அதிக சகோதர-சகோதரிகளையும் பெற்றவராகவுமிருப்பாள். சகோதர-சகோதரிகளின் திருமணத்துக்குப் பின் தான் இவருடைய மனைவிக்கு பெற்றோரின் ஆதரவி கிட்டுவதால் மிகவும் நீண்ட காலமாகும். ஆனால் மாமியார் மாமனார் அவர்களுடைய ஆதரவு இவர்களுக்குக் கிட்டுதல் கடினம் ஆகும். இந்த லக்ன ஜாதகர்களுக்கும் திருமணம் ஆகும் வரையிலும் பெற்றோரின் ஆதரவி இருந்தாலும், திருமணத்திற்குப் பின் வெகு சீக்கிரத்தில் இவர்கள் குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இவர்களுடன் சிறப்பாக ஒத்துழைக்கக் கூடிய வாழ்க்கை துணைவி இவர்களுக்கு ஏற்படுவதால் குடும்பத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டாலும், அதன் சிரமங்களை இவர்கள் உணராதவாறு எல்லாவற்றையும் சமாளித்து இவர்களுக்கு வாய்க்கும் மனைவியே வெற்றிகரமாக நடத்திச் செல்வாள்.
எனவே, வாழ்க்கையைப் பொறுத்த வகையில் சிக்கல்களும், பொறுப்பும் குறைந்தாலும் மனைவி வர்க்கத்தாரால் சிறு சிறு செலவுகளை ஏற்நேரிடும். இவர்களுக்கு வாய்க்கும் கூட்டாளிகளும் இவர்களுடைய விருப்பத்துக்கேற்றவாறு செயல் புரிபவர்களாகவே அமைவார்கள். கூட்டாளிகளால் இவர்களுக்கு லாபம் ஏற்படுமேயல்லாது நஷ்டம் ஏற்படுவதற்கில்லை. இவர்களுக்கு வாய்க்கும் கூட்டாளிகள் இறுதிவரை விசுவாசத்துடன் இவர்களுடைய முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டு இவர்கள் உயர்ந்த நிலையை அடையப்பாடு படுவார்கள். அதே சமயம் தங்களுடைய செல்வாக்கையும் உயர்த்திக் கொள்வார்கள்.
இவர்களுக்கு மேஷம், ரிஷபம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, மீனம் இந்த லக்னம் அல்லது ராசிகளில் தோன்றியவர்கள் வாழ்க்கைத் துணைவியாகவோ அல்லது கூட்டாளியாகவோ அமைந்தால் சகல விதத்திலும் ஆதாயமிகுந்து நற்பலன்களே ஏற்படும். மிதுனம், கடகம், துலாம், மகரம் ஆகிய லக்னம் அல்லது ராசிகளில் தோன்றியவர்களுடன் தொடர்பு கொண்டால் வீண் அபிப்ராய பேதங்களும், கலகங்களும், நஷ்டமும் ஏற்படும்.
இந்த லக்னத்தில் உதித்தவர்கள் பொதுவாகவே தீர்க்காயுள் பெற்றவர்களாயினும், சிறுவயதில் அடிக்கடி கண்டங்கள் தோன்றி உயிருக்கே ஆபத்து என்ற அளவுக்கு ஏற்பட்டாலும் எல்லாவற்றிலும் தப்பி நெடு நாள் வரை வாழ்ந்திருப்பர். அறுபது வயதுக்கு மேலும் தளர்ச்சியுறாது வாலிப வயதினரைப் போல் இயங்கும் இவர்கள் அதற்கு மேலும் அரிய பெரிய காரியங்களை சாதித்துக் காட்டி புகழ்க்கொடி நாட்டிடுவார்கள். மறைவிட ஸ்தானத்தில் அந்தரங்கமான நோய்கள் ஏற்பட்டு அசதியளிக்கலாம். இவர்களுடைய வாழ்க்கையே எதிர்ப்புகள் நிறைந்ததாகையால் எந்த ஒரு காரியமும் பெருமுயற்சி எடுத்துத்தான் நிறைவேற்ற வேண்டிவரும். உற்றார்-உறவினர்களாலும், சகோதர-சகோதரிகளாலும், தாயாதிகளாலும், வேலையாட்களாலும் அடிக்கடி தொல்லைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். பண விவகாரத்தில் இவர் பிறரை நம்பாவிட்டாலும், ஒரு சிலர் இவரது நம்பிக்கைக்கு பாத்திரர்கள் ஆகி சிக்கல்களில் இவர்களை சம்பந்தப்படுத்தி விடுவார்கள். எனவே இவர்கள் பண விவகாரங்களில் யாரிடமும் அதிக நம்பிக்கை வைக்காமலிருப்பது நல்லது மேலும் இவர்களுக்கு பண விவகாரங்களில் அதிக பற்று ஏற்படுவதால் பிறர் அதை சாதகமாக்கிக் கொள்வர்.
சிறு வயதிலிருந்தே சமூகப் பற்றுடையவர்களாக சமூக சேவையில் ஈடுபட்டு எவ்வளவு இடையூறுகள் நேர்ந்தாலும் மனம் தளராது பாடுபடுவார்கள். எதிரிகள் தம்மைக் கண்டு நடுங்குவதையே குறிக்கோளாகக் கொண்ட இவர்கள் தாம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு அடங்கி நடக்கும் கூட்டம் ஒன்றை அமைத்துக் கொண்டு அதற்கு தலைவராகவும் விளங்குவார். இவர் கொள்கையை பின்பற்றுவோர் பலர் இருப்பார்கள். சமூக சேவையில் அதிக நாட்டம் கொண்ட இவர்கள் தமது கொள்கைக்கு விரோதமான சூழ்நிலை உருவானதால் தாமாகவே ஒதுங்கிக் கொண்டு விடுவார்கள். வெளிப்பார்வைக்கு இரக்கமற்ற கொடியவராக காட்சியளிக்கும் இவர்கள் உண்மையில் இரக்கமும், தயாள குணமும் நிரம்பியவர்கள். மேலோர்-கீழோர் என்ற வித்தியாசமின்றி மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டவர்களை கருத்துடன் கவனித்து தக்க பாதுகாப்பு அளித்திடுவர். தாழ்த்தப்பட்டவரிடத்தில் அன்பையும், பரிவையும், இரக்கத்தையும் காட்டும் இவர் மேலதிகாரத்தில் மரியாதையையும் வணக்கத்தையும் காட்டுவாரேயல்லாது பயந்து நடுங்கிக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் இவர்களிடத்தில் ஆதரவையும், சகாயத்தையும் பெற்றவர்கள். காரியம் முடிந்தபின் இவர்களைப் பாராட்டுவதற்குப் பதில் நன்றி மறந்து தூற்றுவார்கள். மறைமுகமான தொல்லைகளையும் கொடுத்து பல இடையூறுகளையும் உண்டாக்கி விடுவார்கள். வெளிபுறத்தில் மிகுந்த பக்திமான் போல வேஷம் போட்டுக் காட்டாவிட்டாலும் அந்தரங்கமான பக்தியுடையவர்களான இவர்கள் தகுந்த ஆசாரியரிடத்தில் உபதேசம் பெற்று அத்தகைய வழிகளில் ஆழ்ந்த சிந்தனையிலும், நெறியான தியானத்திலும் ஈடுபடுவார்கள். ஒரே முகமான கொள்கையுடைய இவர்களை மாற்றுவது எளிதாகாது.
இந்த லக்னத்தில் தோன்றிய ஒரு சிலருக்கு தகப்பனாரின் ஆதரவு குறைந்தே காணப்படும். ஒரு சிலர் சிறுவயதில் தகப்பனாரை விட்டு பிரிந்திருப்பதும், வேறிடத்தில் வளர்வதுமாக இருக்கும். ஒரு சிலர் தகப்பனாரை இழக்கவும் நேரிடலாம். ஆனால் பெரும்பாலோருக்கு தகப்பனாருடைய ஆதரவு வாழ்க்கையில் நன்கு அமையப்பெற்று இறுதிவரை தகப்பனாரின் உதவியும், சொத்தும் ஆஸ்தியும், சம்பாதனைகளும் இருந்து வரும். ஆனாலும் அடிக்கடி மன வேற்றுமைகளும் சில தொல்லைகளும், வாக்கு வாதங்களும், சோர்வுகளும் ஏற்படலாம். தகப்பனாருக்காக எவ்வளவு செலவு செய்தாலும் திருப்தியற்ற போக்கே காணப்படும். பொதுவாக விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கும், தகப்பனாருக்கும் ஒற்றுமை குறைந்தும் வேற்றுமை நிறைந்தும் காணப்படும். தகப்பனார் தீர்க்காயுள் படைத்தவராக இருந்தால், தான் சம்பாதித்த சொத்து முழுவதையும் அழித்துவிட்டு ஜாதகரின் பராமரிப்பில் வசிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் மூதாதையர் சொத்து என்று இவர்களுக்கு எதுவும் ஏற்படாவிட்டாலும் சுயமாக சம்பாதித்து சொத்து சேர்த்துக் கொள்வர்.
இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் கடமையுணர்ச்சியுடன் எல்லாக் காரியங்களிலும் ஈடுபடுவார்கள். தற்காலிக வேலைகளிலோ அல்லது ஊதியம் குறைந்த தொழில்களானாலும் இவர்கள் ஈடுபட மாட்டார்கள். எந்தக் காரியமானாலும் பிறருக்கு பயன்படத்தக்கதாகவும் பொறுப்பு மிகுந்ததாகவும், பொது சேவையாகவுமிருந்தால் மனமுவந்து ஏற்றுக் கொண்டு எதிர்ப்புகள் இடையூறுகள் ஏற்பட்டாலும் உற்சாகம் குறையாமல் திறமையுடனும், ஆற்றலுடனும் செயலாற்றி வெற்றியுடன் முடித்துக் காட்டுவார்கள். ஓரளவுக்கு
சுயநலவாதிகளானாலும் ஈடுபடும் காரியங்களில் தன்னலம் கருதாது ஆர்வத்துடன் இறுதி முடீவுவரை பாடுபடுவார்கள். இந்த லக்னத்தில் உதித்தவர்களுக்கு பெரும்பாலும் அரசாங்கத் தொழில் அமையும் இறுதி வரை பணியாற்றி வெகுநாள் வரை ஓய்வூதியம் பெறும் வாய்ப்பு பெற்றவர்கள். ஆரம்ப காலத்தில் சிறிய வேலையில் அமர்ந்தாலும், வயது வளர வளர பெரும் பதவிகளை திறமையுடன் வகித்துக் காட்டுவார்கள். ஒரு சிறுபகதிக்கு அதிகாரம் பெற்றவர்களானாலும், இறுதியில் ஒரு ராஜ்யத்துக்கே அதிகாரம் செலுத்தக்கூடிய வாய்ப்பைப் பெறுபவர்களாவார்கள். அரசாங்க வேலையில் வாய்ப்பு ஏற்படாவிடினும் சிறந்த அரசியல்வாதியாக விளங்கி சட்டசபை, பாராளுமன்றம் போன்றவைகளில் இடம் பெற்று இறுதியில் மந்திரி சபையில் அங்கம் வகிக்கும் வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். சட்டதிட்டங்களின் நுணுக்கங்களை ஆராய்ந்து பார்த்து வாதாடும் திறமையும் பெற்றிருப்பார்கள். நேர்மையே குறிக்கோளாகக் கொண்ட இவர்கள் நெறி தவறுபவர்களையும் நேர்மையற்றவர்களையும் வன்மையாகக் கண்டிப்பார்கள். சிக்கலான பிரச்னைகளுக்கு எளிதில் சீரிய முறையில் விளக்கமளித்திடும் ஆற்றல் பெற்றவர்கள். இவர்களுடைய உதவியும் ஆதரவும்தான் பிறருக்கு தேவைப்படுமேயன்றி இவர் எக்காலத்திலும் எவர் உதவியையும் ஆதரவையும் நாடமாட்டார்கள்.
அரசாங்க சேவையோ அல்லது அரசியல் துறையிலோ பணிபுரியும் வாய்ப்பு பெறாதவர்கள் சுயதொழில் புரிபவர்களாக இருந்தாலும் அரசாங்க சம்பந்தப்பட்டதாகவே அமையும். அரசாங்க ஆதரவுக்குட்பட்ட லைசென்ஸ், கோட்டா, போன்றவைகளிலும் அரசாங்க காண்டிராக்டுகளிலும் ஈடுபடுவார்கள். லாகிரி வஸ்துக்கள், ஸ்பிரிட், சாராயம், மிளகாய், காட்டுகுத்தகை, மருந்து, மூலிகை இரசாயனப் பொருள்கள் எண்ணெய், வாசனாதி திரவியங்கள், சந்தனம், தேன், கோதுமை முதலிய பொருள்களை கிரய-விக்கிரயம் செய்வதிலும் ஈடுபடுவார்கள். மற்றவர் குற்றம் குறைகளை நுட்பமாக அறியும் சாமர்த்தியம் பெற்ற இவர்கள் அரசாங்கத்தில் குற்றப் பிரிவில் வேவு பார்க்கும் அதிகாரிகளாகவும் அமைவார்கள். அரசாங்க அதிகாரிகளாகவும், மருத்துவ நிபுணர்களாகவும், இரசாயனப் பொருள் ஆராய்ச்சித் துறையில் புகழ் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். விலையுயர்ந்த ரத்தினங்களை பரிசீலித்து மதிப்பீடு செய்வதிலும், சாஸ்திர ஆராய்ச்சியில் நிபுணர்களாகவும் விளங்குவார்கள். மருத்துவத் துறையில் இருதயம், கண்கள், எலும்பு ஆகியவற்றில் நிபுணர்களாக விளங்குவார்கள்.
உணவு வகையில் அதிக கவனத்தை செலுத்திடும் இவர்கள் நல்ல பக்குவமான, சத்துப் பொருள் அடங்கிய உடல் நல வளர்ச்சிக்கு ஏற்றதான உணவுப் பொருள்களையே தேர்ந்தெடுப்பார்கள். கண்ட நேரத்தில் கண்ட படி சாப்பிடாமல் நேரம் தவறாமல் கூடுமான வரையில் குறித்த காலத்தில் தன் ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவுகளையே உட்கொள்வார்கள். கம்பீரமான உடைகளையும், உயர்தரமான ஆடைகளையும் அணிவதில் விருப்பமுள்ள இவர்கள் நவீன உடைகளுக்காக அதிகம் செலவிடுவார்கள்.
இந்த லக்னத்தில் பிறந்த மாதர்கள் பிடிவாத குணம் படைத்தவர்கள். தமக்கு பிடித்ததை எப்பாடு பட்டாவது, சாதித்தாவது பிடிவாதம் பிடித்தாவது அடைந்தே தீருவர். பிறரைப்பற்றிக் கோள் சொல்வதில் அதிக விருப்பம் கொண்டவர்கள். இயற்கையாக கவர்ச்சிகரமாகவும், வசீகதரத் தோற்றம் வைத்துக் கொண்டு அஷ்ட கோணலாக்கிக் கொள்வார்கள். தனக்கென்று மனமிருந்தால் பிறருக்கு வாரி வழங்கி சகாயங்கள் செய்வார்கள். ஆனால் அம்மாதிரி வாய்ப்புகள் ஏற்படுவது மிகவும் அபூர்வமாகும். இவர்களுக்கு சகிப்புத் தன்மையும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் ஏற்படுவதில்லை. கலைகளிலும், கல்வியிலும் நல்ல தேர்ச்சி பெறவேண்டுமென்று பாடுபடுவார்கள். இந்த லக்னத்தில் உதித்தவர்களுக்கு பெரும்பாலும் அரசாங்கத் தொழில் அமையும். இறுதிவரை பணியாற்றி வெகு நாள்வரை ஓய்வூதியம் பெறும் ஆவல் கொண்டு, பாடுபட்டு தேர்ச்சியும் பெற்றிடுவார்கள். சுதந்திரப் பிரியர்களானாலும் மற்றவர்கள் தமக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமென்ற கொள்கையுடையவர்கள். இன்சுவைகளில் விருப்பமும், ஆடம்பர வசதிகளை நன்றாக அனுபவிக்க வேண்டுமென்ற ஆசையும் உடையவர்களாவர். நல்லவர்களிடத்தில் மிக இணக்கமாக நடந்திடும் இவர்கள் ஏறுக்கு மாறாக நடப்பவர்களை தாட்சண்யம் பாராமல் கண்டிப்பார்கள். சமூக வளர்ச்சிக்காக பாடுபடுவதில் நாட்டம் உடையவர்கள் தனக்கென வருமானம் இருக்கவேண்டுமெனக் கருதி சொந்தமாக தொழில் அமைத்துக்கொள்ளும் வாய்ப்பை பெறுவார்கள். உற்றார்-உறவினர்களிடம் அபிமானம் மிக்கவரானாலும் வரம்பு-மீறி எந்த உதவியும் செய்யமாட்டார்கள். வழவழா கொழ கொழாவென்ற பேச்சே இராமல் மிகவும் கண்டிப்பான குணம் படைத்தவர்கள்.
தாம்பத்திய வாழ்க்கை இவர்களது விருப்பம்போல அமையும்.
கணவன்-மனைவி வாழ்க்கையில் இணை பிரியாது புதுத் தம்பதிபோல் வாழ்ந்திடுவர். குழந்தைகளின் மீது பாசமும் அன்பும் பெற்ற இவர் கணவரை தம் அன்புப் பிடியினால் தன் வசம் ஈர்த்துக்கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள். வாழ்க்கையில் வருமானத்துக்குத் தக்கவாறு செலவுகளை சாமர்த்தியமாக அமைத்துக் கொண்டு சகல வசதிகளையும் அமைத்துக்கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள். குடும்பத்தை வெற்றிகரமாக நடத்திச் சென்று புகழாரம் சூட்டிக் கொள்வதும் இவர்களே.
நன்றி:-
ஜோதிடர்-அரிச்சந்திரன்
"பிரம்மகுரு ஜோதிட ஆராய்ச்சிமையம்"
http://hari1970.blogspot.com/
கருத்துகள்
இதெல்லாம் உண்மையாத்
இதெல்லாம் உண்மையாத் தோழி............







