kannan.s's படம்

 விடியலைத் தேடி

ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் என்பது புது அனுபவம் தான் என்றாலும்,ஆண் தன் வீட்டிலேயே தொடர்ந்து இருக்கிறான். பெண் நாற்றங்காளிலிருந்து பிடுங்கி நட்ட செடி போல வேறு வீட்டில் முற்றிலும் புதிய மனிதர்களுடன் புதிய சூழ‌லில் வாழப்போகிறாள். இது பற்றி நம் சமூகத்தில் போதிய கவனம் இதுவரை எற்படவில்லை. ஏன் அவள் மட்டும் இடம் பெயர்ந்து செல்லவேண்டும் என்று நாம் யாரும் கேள்வி கேட்பதேயில்லை. பல நூற்றாண்டுகளாக பழகிவிட்டதால் அது சகஜமான விஷயமாக அது நமக்கு தோன்றுகிறது. இருக்கிற வீட்டிலேயே ஒரு நாளைக்கு இடம் மாறிப் படுத்தாலே நமக்கு தூக்கம் வருவதில்லை. ஆனால் பெண்களை நினைத்துப்பாருங்கள்!

பெண் பிறப்பதில்லை

உருவாக்கப்படுகிறாள் என்பார்கள். மதங்களும், குடும்பங்களும், அரசியல், கலாச்சார நிறுவனங்களும் வரலாற்று ரீதியாகப் பெண்ணை இப்படியாக இருக்க வேண்டும் எனத் தயாரிக்கின்றன. அதற்குத்தக பெண்களை வெறும் உடம்பாக பார்க்கும் பார்வை நாம்மிடம் ஆழமாக வேர் கொண்டுள்ளது. அந்த உடம்பும் அவளுடைய கட்டுப்பாட்டில் இல்லை திருமணமாகி விட்டால் அவள் உடலுக்குரியவன் கணவன் என்றாகிறது. எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற முடிவு எடுக்கும் உரிமை அவள் மாமனார், மாமியார், கணவன் இவர்களே தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர்.ஆனால் காலம் மாறிக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிவதையே நம் சமூகம் ஏற்காமல் தானே இருந்தது. ஆனால் இப்பொழுது தனிக்குடித்தனம் ரொம்ப இயல்பான ஒன்றாக ஆகிவிட்டது. இதைப் போல பெண் இன்று இருக்கும் நிலையும் மாறும்.

குரங்கிலிருந்து பிறந்த மனிதன் துவக்கத்தில் தாய்வழிச் சமூகமாகத்தான் இருந்தான்.அதாவது பெண்தான் சமூகத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தாள். அப்போது அநாகரிக காலகட்டத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கலாச்சாரமெல்லாம் வந்திருக்கவில்லை. எந்த ஆணும் எந்த பெண்ணோடும் உறவு கொள்ளும் கட்டற்ற பாலுறவுமுறை இருந்தது. பின்னர் அது இனக்குழுவுக்குள்ளேயே ரத்த உறவுக்குள் பால் உறவு கூடாது என்று வில‌க்கம் பெற்றது. அப்போதும் தாய்தான் தெரியும் தாய் தான் இரைதேடிக்கொண்டுவந்து ஊட்டி வளர்த்தாள். மண உறவுகள் விலக்கப்பட்டு விலக்கப்பட்டு இன்று இருக்கும் ஒருதார மணமுறைக்கு வந்து சேர்ந்துள்ளோம். காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலம் முடிந்து, மனிதகுலம் நாகரிகம் பெற்றபோது ஆடுமாடுகளை மேய்த்துத் திரியும் மேய்ச்சல் காலம் வந்தது. ஆடுமாடுகள் மனிதன் சொத்தாயின. பிரசவம் போன்ற காரணங்களால் குகைகளில் தங்கிய பெண்கள் அந்த கால்நடைகளின் மீது கொண்ட உரிமையை விட அவற்றை மேய்த்து வந்த ஆண்கள் அச்சொத்தின் கூடுதல் உரிமையைப் பெற்றனர். என் சொத்து எனக்கு மட்டுமே பிறந்த பிள்ளைக்கே போய்ச் சேரவேண்டும்.
என்கிற சிந்தனையின் செயல்வடிவமாக பெண்ணின் பாலுறவுச் சுதந்திரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அவள் உடம்பின் மீது அவள் கொண்டிருந்த உரிமை விலக்கப்பட்டது. அவள் ஒருவனுக்கு உடமையக்கப்பட்டாள். சமூகம் பெண் வழிச் சமூகமாக இயங்கியது முடிவுக்கு வந்தது. ஆணாதிக்க சமூகமாக மாறியது, ஆணாளும் சமூகமாக மாறியது, ஆண்களும் பெண்களும் சேர்ந்த நம் சமூகம் ஆணாதிக்க சமூகமாக‌
தன்னை மாற்றிக் கொண்டது.
உலகைக் குலுக்கிய பிரெஞ்சுப் புரட்சி சுதந்திரம்-சமத்துவம்-சகோதரத்துவம் என்கிற முழுக்கதை மக்கள் மனங்களில் பதிந்து சென்றது நாடாளுமன்றதுக்கு முதன் முதலாக பிரெஞ்சுப் பெண் போட்டியிட்டனர். அவரை பிரெஞ்சு சமூகம் பழித்தது. ஒரு பெண் எப்படி அரசியல் வேலை செய்ய முடியும்? என்று ஏசினர். அப்பெண்மணியோ அமைதியாகக் கேட்டார் "பெண்ணாகிய நான் பயன்படுத்த முடியாத, எந்த ஆணின் உறுப்பைக் கொண்டு அரசியல் வேலை நடக்கிறது என்பதை விளக்குங்கள், நான் ஒதுங்கிக்கொள்கிறேன்" பிரெஞ்சு சமூகம் இக்கேள்வியால் வாயடைத்து போய் நின்றது. இருபதாம் நூற்றாண்டு பெண்கள் உரக்கப்பேசிய நூற்றாண்டாக மலர்ந்தது. மனித உரிமைப் பிரகடனம் பெண் சமத்துவத்தை எற்றது.
வரலாறு எத்தனையோ துயரங்களைக் கடந்து வந்தாலும் நம் வீடுகளில் மாற்றங்கள் வந்து சேர்ந்த பாடில்லை. பெண் ஆணைப் போல வெளியே வேலைக்குப் போனாலும் கூடுதலாக வீட்டு சுமையையும் அவதான் சுமக்க வேண்டியிருக்கறது ஏன்? ஆண்களால் 'பார்க்கப்படுகிற' ஒரு கவர்ச்சிப்பொருளாக பெண் இருக்கிறாள்? சிறு பெண் குழந்தைகள் கூட பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது ஏன்? அதே பெண் திருமணம் என்று வரும்போது வரதட்சனையோடு வந்தால் மட்டுமே அதே ஆணால் விரும்பப்படுபவளாக மாறுவது எதனால்? பத்தினி தெய்வமாகப் பெண் இருக்க வேண்டும். ஆனால் ஆண் கொஞ்சம் அப்படி இப்படி இருந்துவிட்டால் கூட பரவாயில்லை என்கிற சமூக ஒப்புதலை எப்படி உடைப்பது? ஆணுக்குச் சமமாக பல சமயம் கூடுதலாகவே பெண் படித்து வேலைக்கு போய் சம்பாத்தியம் செய்தாலும் பெண்ணுக்கே உரிய கடமைகளிலிருந்து அவளுக்கு விடுதலை இல்லையே ஏன்? இதற்க்கு தீர்வுதான் என்ன?

ஆண் பெண் சமத்துவத்தின் அடிப்படையில் அறிவியல் பூர்வமான வேலை பிரிவினையோடு கூடியதாக நமது குடும்பங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். கணவன் மனைவி இருவருக்கும் இடையிலான காதலே குடும்பத்தின் அடிதளமாக அமைய வேண்டும் அந்த காதல் சுதந்திரமானதாக, பெருந்தன்மை மிக்கதாக, எந்த நிர்பந்தமும் இல்லாததாக முழு மனதோடு கூடியதாக இருந்தாக வேண்டும். உணர்ச்சிகரமானவையாகவும் சோறு பொங்கிச் சாப்பிட்டு டி.வி பார்த்துத் தூங்கும் இடங்களாக மட்டுமே இருக்கும் நம் குடும்பங்கள் இனி அறிவு வளரும் இடங்களாகவும் மாறவேண்டும் புத்தகங்களும், வாசிப்பும் குடும்ப வாழ்வின் அன்றாடமாக வேண்டும். இப்படியான குடும்பதை உருவாக்குவதிலும் பெண்களே முன்னிற்க வேண்டும். ஆண்கள் மனமாற்றம் பெற பெண்களின் முயற்சியும் போராட்டமும் அடிப்படையாக அமைய வேண்டும்.

"நமது லட்சியம் சின்னஞ்சிறு சில்லறை வெற்றி அல்ல, ஆனால் பரிபூரணமான மகோன்னத வெற்றி ஒன்று மட்டும் தான் என்பதை விடக்கூடாது"

5.5
Your rating: None Average: 5.5 (2 votes)

கருத்துகள்

VISWAM's படம்

"ஆணுக்குச் சமமாக பல சமயம்


4

"ஆணுக்குச் சமமாக பல சமயம் கூடுதலாகவே பெண் படித்து வேலைக்கு போய் சம்பாத்தியம் செய்தாலும் பெண்ணுக்கே உரிய கடமைகளிலிருந்து அவளுக்கு விடுதலை இல்லையே ஏன்? இதற்க்கு தீர்வுதான் என்ன?"

நல்ல கேள்வி? ஆனால் பதில்தான் கேள்விகுறி!