jeyakanthan's படம்

பாச மனிதர்கள் !

தனது சொந்தப் பணத்தில் 20 ஆண்டு காலமாக ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று மாணவர்களுக்கு அம்மை தடுப்பு மருந்து வழங்கி, வித்தியாச பெண்மணியாக வலம் வருகிறார் கரூர் மீனாட்சியம்மாள்.
"என் கணவர் கருணாகரன் மருந்துக்கடை வைத்துள்ளார். ஒரு தடவை என் தம்பி பையன்களுக்கு பரீட்சை நேரத்தில் அம்மை போட்டது. குழந்தைகளால் பரீட்சை எழுத முடியவில்லை. அதனால் அம்மை தடுப்பு மாத்திரைகளை மாணவர்களுக்கு கொடுத்தால் உதவிகரமாக இருக்குமே என்று கருதி, மாணவர்களுக்கு இலவசமாக கொடுக்க ஆரம்பித்தேன்'' என்கிறார் மீனாட்சி. இதற்காக பள்ளிக் கல்வி அலுவலரின் அனுமதி பெற்றிருக்கிறார். கோடை துவங்குவதற்கு சற்றுமுன் மாத்திரைகளை விநியோகிக்கத் துவங்கி விடுகிறார். வெயில் காலத்தில்தான் அம்மை நோய் தாக்கும் என்பதால் இந்த சமயத்தில் தருகிறேன் என்கிறார் மீனாட்சியம்மாள்.

ருச்சி
கீரனூரைச் சேர்ந்த சின்னையா பதினோராவதுவரைதான் படித்திருக்கிறார். தனக்கு இருக்கும் கொஞ்சம் நிலத்தில் விவசாயம் செய்கிறார். ஆடு, மாடு மேய்க்கிறார். தனது விவசாய வேலைகள் முடிந்ததும் பக்கத்திலிருக்கும் மலை கிராமத்து குழந்தைகளுக்கு படிப்புச் சொல்லித் தருகிறார்.
""கிராமத்துல படிச்சுட்டு நகரத்து வேலைக்கு போய்ட்டா எப்படி சார் ? கிராமத்து ஜனங்களை கரையேத்த வேண்டாமா ? அதான் நான் சொல்லித் தர்றேன்'' என்கிறார் சின்னய்யா. இவர் பாடம் சொல்லிக் கொடுக்கும் கிராமத்தில் மின்சாரம் வருவதற்காக பல அரசு அலுவலகங்களுக்கு படையெடுத்திருக்கிறார். மின்சாரம் கிடைக்கும் வரை திருமணம் செய்ய மாட்டேன் என்று இருந்திருக்கிறார். இப்போது மின்சாரம் வந்து விட்டது. அடுத்துத் திருமணமா என்று கேட்டால் "தெரியலை' என்று வெள்ளந்தியாகச் சிரிக்கிறார்.

சிவகங்கை
ஒரு அடி நிலத்துக்காக சண்டை போடும் இந்தக் காலத்தில் பறவைகள் வந்து உணவு உண்டு போவதற்காகவே இரண்டு ஏக்கர் நிலத்தில் பறவைகளுக்கு விருப்பமான பயிர்களை பயிரிடுகிறார் ராஜேஸ்வரி. சிவகங்கை பக்கத்தில் இந்த இரண்டு ஏக்கர் இருக்கிறது.
""எங்க வீட்டுக்காரரோட அம்மா, எங்க அத்தை படிக்காதவங்க. அவங்க ""உழுது விதைக்கிறபோது காக்கா,குருவி வந்தா விரட்டாதீங்க. அதுக பசியாறதுக்கு எங்க போகும்''னு சொல்வாங்க. அதேமாதிரி நாங்களும் எங்க நிலத்துல கொஞ்சத்தை பறவைகளுக்கு கொடுத்திருக்கிறோம்.
தோப்புக்குள்ளேயும் ஊடுபயிரா பறவைகளுக்கு பயிர் செஞ்சிருக்கோம். அதனால இப்ப ஏகப்பட்ட பறவைகள் வர ஆரம்பிக்குது... என்கிறார் ராஜேஸ்வரி.

கன்னியாக்குமரி
அருமனை மின் வாரியத்தில் வருவாய் சூப்பர்வைசராக இருக்கும் புஷ்பாகரன் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் இல்லை. கஷ்டப்பட்டு எம்.காம் வரை படித்தவருக்கு மின்வாரியத்தில் வேலை கிடைத்ததும் தன்னை விட கீழ்நிலையில் உள்ளவர்களுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என வைராக்யத்துடன் மலைப்பகுதியில் உள்ள மலைவாழ் ராணி மக்களுடைய பிள்ளைகளுக்கு படிப்புச் சொல்லித் தருகிறார். ""நான் ஒன்றும் பெரிசா செஞ்சிடலைங்க. நகர்ப்புற மக்களுக்கு எல்லாவித வழிகாட்டலும் எளிதாக கிடைக்கிறது. ஆனால், மலைப்பகுதி மக்கள் ? அவர்களின் வாழ்க்கையே பெரும் போராட்டம். இந்த நிலையில் பாதியில் படிப்பை நிறுத்துபவர்கள் ஏராளம். அவர்களுக்கு உதவணும்னுதான் இப்போ நிறைய பயிற்சி வகுப்புகள் நடத்திக்கிட்டிருக்கேன்'' என்று சொல்லும் புஷ்பாகரன் செலவு செய்வது தன்
பணத்தை. தனது மகனை ஆசிரியர் படிப்பு படிக்க வைத்திருக்கிறார். அவனும் தன்னுடன் வந்து மலைப்பகுதி மக்களுக்கு பாடம் சொல்லித் தர வேண்டும் என்ற விருப்பத்தில்.

கோவை
மனித உறவுகள் விலகிப் போன நிலையில் வாய் பேச முடியாத, அழகிய மயில்கள் உறவாக, உறுதுணையாக இருக்கிறது இந்த அதிசய மனிதருக்கு. இவருடைய பண்ணை வீட்டில் 40 மயில்கள் இவரைச் சுற்றியே வளர்ந்து வருகின்றன. வீட்டுக் கூரையில், தென்னை மரத்தில், வீட்டு முற்றத்தில் எங்கு பார்த்தாலும் மயில்கள் கூட்டம்.
கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் தோட்டத்தில் வசித்துவரும் சண்முகசுந்தரம், அந்த பேரூராட்சியின் முன்னாள் தலைவர். கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் தலைவராக இருந்திருக்கிறார்.
""பொது வாழ்வில் இருந்தபோது எல்லோருடனும் கூட்டமாக இருந்த எனக்கு தற்போது மனதிற்கு ஆறுதலாக இருப்பது இந்த மயில்கள்தான்'' என்கிறார். சில வருடங்களுக்கு முன்பு இவரது தோட்டத்து மனோரஞ்சித செடி நிழலுக்காக வரத் துவங்கின மயில்கள்.
அப்படியே தங்கி விட்டனவாம். ""மயில்கள் வரத்துவங்கியதும் அவை தண்ணீர் குடிப்பதற்காக பெரிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்திருந்தோம். நாங்கள் பாசத்தோடு வைத்ததை புரிந்து கொண்டதாலோ என்னவோ, எங்களைக் கண்டு பயந்து ஓடிவிடவில்லை. எங்களுடனேயே தங்கி விட்டன'' என்கிறார்.
நகரத்தில் சந்திக்க இயலுமா இது போன்ற உள்ளங்களை !
- சிந்துகுமார், வீரகேரளம் சரவணன், அரண்மனை சுப்பு,ரா.கார்த்திக்கேயன், அரவிந்த்

0
Your rating: None

கருத்துகள்

VISWAM's படம்

நல்ல பதிவு


நல்ல பதிவு