இந்த அளவிலேயே நிறைவேற்றினால் காங்கிரஸ் கட்சி இந்திய மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகத்தான் அமையும் 'அணுசக்தி இழப்பீடு மசோதா'.
அது அரசு செய்யும் துரோகம் என்று சொல்வதை விட இந்த நாட்டு மக்கள் செய்த மாபெரும் தவறு என்று சொன்னால் அது மிகையாகாது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 441 தொகுதிகளில் 206 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அதன் கூட்டணி கட்சிகளின் அதிக அளவில் தேவைப்படாத, ஆனால் அளவுக்கு அதிகமான கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சியை பிடித்தது.
முந்தைய ஆட்சி காலத்தில் பெற்றதை விட அதிக இடங்களை பெற்று கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற மிதப்பின் வெளிப்பாடாக இப்போது மத்தியில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி சமீபகாலமாக எல்லா முடிவுகளையும் தன்னிச்சையாக (அதன் கூட்டணி கட்சிகளிடம் கூட கலந்து ஆலோசிக்காமல்...) எடுக்கும் அளவுக்கு இறங்கி விட்டது.
அதன்படி மகளிர் மசோதா,பெட்ரோல் பொருட்களின் விலையேற்றம்,அணுசக்தி ஒப்பந்தம்,அணுசக்தி இழப்பீடு மசோதா இப்படி எல்லாவற்றிலும் அதன் முன்,பின் சாதக,பாதங்கங்களை கொஞ்சம் கூட கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
இவைகளில் இந்திய மத்திய அரசு செய்து வரும் மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம் என்னவென்றால் அது "அணு இழப்பீடு மசோதாவை" நிறைவேற்ற முயற்சிப்பது தான்.
நாட்டு மக்களின் உயிரை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் காங்கிரஸ் கட்சி இந்த மசோதாவை நிறைவேற்ற முயற்சிப்பது உண்மையிலேயே வருந்தத்தக்க செயல் மட்டுமல்லாது கண்டிக்கதக்கதும் கூட...
கடந்த முறை ஆட்சிக்கு வந்ததிலிருந்தே மன்மோகன்சிங் அரசு, அணுசக்தி ஒப்பந்தத்தை எப்படியும் நிறைவேற்றிவிட வேண்டும் என்பதில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வந்திருக்கிறது.அதன்படி அது கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை வென்றெடுத்த பிறகு பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் தனது பிடிவாதத்தினால் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியும் விட்டது.
எதற்காக அவசரப்படுகிறார்?
அது போலவே சமீபத்தில் 'அணுசக்தி இழப்பீடு மசோதா'வையும் பாராளுமன்ற கூட்டத்தில் மத்திய அரசு நிறைவேற்ற நினைத்தது.ஆனால்,எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அந்த மசோதாவை நிறைவேற்றவில்லை.
சரி ஏன் இந்த மசோதாவை எதிர்க்கட்சிகளும்,குறிப்பாக இடதுசாரி கட்சிகள் எதிர்க்கிறார்கள்? இதனால் நாட்டு மக்களுக்கு வரும் ஆபத்துகள் என்ன?என்பதை பார்ப்பதற்கு முன்னாள் போபாலில் நடந்த விஷவாயு சம்பவத்தை நாம் கொஞ்சம் நினைவுபடுத்திப் பார்ப்பது அவசியமாகிறது...
1984 டிசம்பர் 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 12:45 மணிக்கு நடந்த போபால் விஷவாயு சம்பவத்தை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது.
போபால் விஷவாயுவுக்கு காரணமான நிறுவனத்தின்
தலைவர் வாரன் ஆன்டர்ஸன்
போபாலில் இருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தில் சம்பவ தினத்தன்று நள்ளிரவு 1:30 மணிக்கு 'மிக்' அபாய வாயு எச்சரிக்கை சங்கு இயக்கப்பட்டது! எப்போதும் அடிக்கப்படும் சங்கு சத்தம் என்பதால், இதுவும் வழக்கமான சங்கு சத்தம் தான் என்று எண்ணி மக்கள் யாரும் அதை அபாய அறிவிப்பாக எடுத்துக் கொள்ளவில்லை!
அதிகாரிகள் விஷவாயுவின் தாக்கம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை உணர்ந்திருந்தும் தூங்கிக் கொண்டிருந்த மக்களை எழுப்ப விரும்பாமல் அபாயசங்கை 15 நிமிடங்களுக்குப் பிறகு நிறுத்தினர்.
கசிந்த விஷவாயு மெல்ல மெல்ல காற்றில் பரவ ஆரம்பித்தது..,உறங்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான அப்பாவி ஏழைமக்கள் அவர்களது படுக்கையிலே இறந்து போனார்கள்! சிலர் விழித்துக் கொண்டு கண்ணெரிச்சலிலும்,நெஞ்சரிச்சலிலும் வீட்டை விட்டு வெளியே ஓடினார்கள்!ஆடு,மாடுகள் கூட நொடிப்பொழுதில் சடலங்களாக ஆயின!
அந்த சம்பவத்தில் தூக்கத்திலேயே சுமார் 4000 பேர் இறந்து போனதாக ஓர் அறிக்கை கூறுகிறது! பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் வறுமை மிக்க ஏழைமக்கள்!
கண்ணிழந்தவர்கள்,நோயுற்றவர்கள்,காயமடைந்தவர்கள் இன்றுவரை 400,000 பேர் என்று அதே அறிக்கையில் காணப்படுகிறது!
போபால் விஷவாயுவில் பாதிக்கப்பட்ட சிசுக்கள்
அந்த கோர சம்பவத்தில் சுமார் 500,000 பேர் நஷ்டஈடு நிதியை வாங்குவதற்கு தகுதி யானவர்கள் என்று கணக்கிடப்பட்டது! 1989 பிப்ரவரி 24 ஆம் தேதி சம்பவத்துக்கு காரணமான அமெரிக்க நிறுவனம் யூனியன் கார்பைடு நிர்வாகம் 470 மில்லியன் டாலர் முழுத் தொகையையும் இந்திய அரசின் கையில் கொடுத்துக் கணக்கைத் தீர்த்துக் கொண்டது!
அதன் பிறகு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு வசதியாக பல விஷவாயு சம்பவங்களை மூடி மறைத்து, சம்பந்தப்பட்ட யூனியன் கார்பைடு நிர்வாகத்தைப் இந்திய அரசு மறைமுகமாக தழுவிக் கொண்டதாகவும் சொல்வார்கள்.! அந்த நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆன்டர்ஸன் பெரிய அளவில் இந்திய அரசால் தண்டிக்கப்படவில்லை.
போராட்டம்
இரசாயனக் கூடத்தைச் சுற்றி உள்ள ஊர்களான ஜயப்பிரகாஷ் நகர், காசி காம்ப், சோலாகென்சி, ரயில்வே காலனி ஆகியவற்றில் வாழ்ந்த மக்கள் யாவரும் விஷ வாயுவுக்குப் பலியாயினர்! அங்குள்ள கிணற்று நீர்நிலைகளில் விஷவாயு கலந்து அவை குடிப்பதற்குத் தகுதி இல்லாத விஷ தண்ணீராக மாறிப்போனது.
அந்த கிணற்று நீர் மாதிரிகளை உலக உடல்நலப் பேரவை மற்றும் அமெரிக்காவின் சூழ்வெளிப் பாதுகாப்பு ஆணையகம் இரண்டும் ஆராய்ந்த போது இரத்த சம்பந்தமான நோய்கள், ஈரல்,கல்லீரல், குடல், கிட்னிப் பாதகங்கள்,இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், பிறப்புறுப்பு, மூத்திரப்பை புற்றுநோய்,நரம்பியல் திரிபுகள்,தீவிரத் தலைவலி, வாந்தி, மயக்கம், பேச்சு மூச்சு மரணம் ஏற்படுதல் போன்ற நோய்கள் வரும் என்று கண்டறியப்பட்டது.
இப்படிப்பட்ட பயங்கரமான மனிதசக்தி அளவிடமுடியாத கொடுக்க வல்லது அணுசக்தி உலைகள்.
சரி இனி 'அணுசக்தி இழப்பீடு மசோதா' விஷயத்துக்கு வருவோம்..,
அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, கஜகஸ்தான் உள்ளிட்ட எட்டு நாடுகளுடன் அணுசக்தி உடன்பாடுகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. இப்படி வெளிநாடுகள் மூலம் அமைக்கப்படும் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான “அணுசக்தி இழப்பீடு மசோதா” தான் இந்த மசோதா...
ஒருவேளை அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால், அந்த அணு உலையை இயக்கும் நிறுவனம், பாதிப்புக்கு ஈடாக வெறும் ரூ.300 கோடி அளவிற்கு மட்டும் இழப்பீடு தொகையை கொடுத்தால் போதும். அதாவது, இந்த மசோதாவின்படி, அணுவிபத்து நடக்குமானால், அந்த விபத்திற்கான இழப்பீடாக மொத்தம் ரூ.2 ஆயிரத்து 200 கோடி அளிக்கப்படுமாம். இதில், அணுஉலையை செயல்படுத்தும் அந்நிய நாட்டு நிறுவனங்கள் ரூ.300 கோடி முதல் ரூ.500 கோடி அளவிற்கு மட்டுமே பொறுப்பேற்றுக் கொள்வார்கள்
அப்படியானால் மீதித் தொகையை யார் தருவார்கள்?
வேறு யாரு...மத்திய அரசு தான்.அதுவும் மக்களின் வரிப்பணம் தான். அதாவது மக்களிடமிருந்து பல்வேறு வரிகள் மூலமாக வசூலிக்கப்படும் பணத்திலிருந்து இந்த இழப்பீட்டு தொகை தரப்படும்.இதெப்படி இருக்கு?
மேலும் இந்த மசோதா சொல்லும் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால்
அணு உலைகளின் விபத்தில் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டாலும் பாதிக்கப்பட்ட யாரும் அதற்காக நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு செல்ல முடியாதாம். அதையும் இந்த மசோதா தடுத்து நிறுத்துகிறதாம்...(எப்படி இருக்கிறது பாருங்கள் ஒட்டு போட்ட மக்கள் மீதான மத்திய அரசின் அக்கறை..!)
இந்தியாவை பொருத்தவரை அணு உலைகளினால் விபத்து ஏற்பட்டால் அது அமைந்திருக்கும் பகுதிகளில் மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என்பது எல்லோரும் தெரிந்த ஒன்று தான்.
மீண்டும் இப்படி நடந்தால் யார் பொறுப்பு?
ஆனால் அந்தப் பேரழிவுக்கு ஈடாக, சம்பந்தப்பட்ட வெளிநாட்டு அணுசக்தி நிறுவனங்கள் இழப்பீட்டு தொகையை வழங்குவது தான் சரியான முறையாக இருக்கும் ஆனால் மத்திய அரசோ நிறைவேற்ற துடிக்கும் மசோதாவில் அணுசக்தி உலை நிறுவனங்கள் வெறும் ரூ.300 கோடி இழப்பீடு கொடுத்தால் போதுமானதென்று கூறி, வெளிநாட்டு அணுசக்தி நிறுவனங்களுக்கு ஆதரவான இந்த மசோதாவை தாக்கல் செய்ய முயற்சிக்கிறது மத்திய அரசு.
ஏற்கனவே அணு உலைகளின் கசிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்குகள் நிறையவே நிலுவையில் உள்ளது, அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அந்த நிறுவனத்திடம் நஷ்ட ஈடு வாங்க முடியுமா..? ஆளாளப்பட்ட அமெரிக்காவிலேயே இது முடியாத காரியம்.
ஏற்கெனவே இருக்கிற அணு உலைகளினால் நம் நாட்டின் சுற்றுசுழல் கெட்டுள்ள போது புதுஉலைகள் எங்கு அமைப்பார்கள்? கண்டிப்பாக அரசியல்வாதிகளும்,
செல்வந்தர்களும் குடியிருக்கும் இடங்களில் இல்லை, அப்பாவி ஏழை மக்கள் இருக்கும் பகுதிகளில் தான் அமைப்பார்கள்.ஒருவேளை அணுஉலை விபத்து ஏற்பட்டால் அதனால் உயிரிழக்கும் அப்பாவி மக்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் எப்படி இழப்பீடு தொகையை வாங்குவார்கள்?
எண்ணிலடங்கா பாதிப்புகளை கொடுத்த போபால் விஷவாயுவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈட்டுத் தொகை 470 மில்லியன் டாலர் பணம் ஒதுக்கப்பட்டும் கூட பலியான குடும்பங்களுக்கோ அல்லது நோயில் அவதிப்பட்ட ஏழை மக்களுக்கோ சரியான நேரத்தில் அந்த நிதி கிடைக்காமல் போனது.
இப்படி இருக்கையில் மத்திய அரசு சம்பந்தப்பட்ட அணுஉலை நிறுவனங்கள் 300 கோடி ரூபாயை மட்டும் கொடுத்தால் போதும் என்றால் அது எந்த விதத்தில் நியாயம்?அப்படியானால் இதை உண்மையிலேயே வெளிநாட்டு அணுசக்தி நிறுவனங்களுக்கு ஆதரவான மசோதாவாகத்தானே நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
அப்படியிருக்கையில் யாருடைய நலனுக்காக இந்த 'அணுசக்தி இழப்பீட்டு மசோதா'வை கொண்டு வர இவர்கள் துடிக்கிறார்கள்...? வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கோடி கோடியாய் தாரை வார்க்க இந்திய அரசு இவ்வளவு வேகமாக இருக்க காரணம் என்ன?
ஓட்டு போட்ட மக்களும்,அவர்களுடைய நலனும் ஆளும் அரசுக்கு முக்கியமில்லையா..?
இது ஆட்சியாளர்கள் மட்டுமல்ல அவர்களை ஓட்டு போட்டு நல்லாட்சி தருவார்கள் என்று நம்பி ஆசனத்தில் அமர்த்திய மக்களும் சிந்திக்க வேண்டிய ஒன்று.









