vinoth's படம்

நானும் நானும்: அகிம்சையும் தீவிரவாதமும்
(நானும் நானும்: நான் எனக்குள் பேசிக்கொண்ட சில சிந்தனைகள்)

நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள நம்முன்னே இருக்கும் இருவழிகளில் முக்கியமானவைகள் அகிம்சை மற்றும் தீவிரவாதம்.

அகிம்சை என்பதன் இன்றைய பொருள் கிட்ட தட்ட அப்படியே தான் இருக்கிறது. ஆனால் தன் நோக்கத்தை நிறைவேற்ற தீவிரமான வன்முறை கொள்கைகளை கடைபிடித்த தலைவர்களை தீவிரவாதி என்றால் இன்றைய மக்களின் பார்வையில் அது தூற்றுதலாக ஆகிவிடும். தீவிரவாதம் என்பதன் பொருள் மாறிவிட்டது. இன்று அப்பாவி மக்களின் உயிரை பறிக்க குண்டு வைப்பவர்களையே தீவிரவாதிகள் என்கிறோம்.

எது அகிம்சை என்பதை நிர்ணயிக்க இரண்டு காரணிகளை பார்க்க வேண்டியுள்ளது. ஒன்று நோக்கம். இரண்டு வழி.

எதற்காக போராடுகிறோம் என்பது நோக்கம் அல்லது தேவை. நல்ல நோக்கத்திற்காக என்றால் மட்டுமே அது அகிம்சை. நாட்டில் குண்டு வைத்தவன் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தால் அதை அகிம்சை என்று சொல்வதற்கில்லை.

இரண்டு, நோக்கத்தை அடைய எடுத்துக்கொள்ளப்பட்ட வழி அல்லது முறை. விலை வாசி ஏறிவிட்டது அதை கண்டித்து போராட்டம் நடத்தி கடைகள் அரசு பேருந்துகளை அடித்து உடைப்பதை அகிம்சை என்று சொல்ல முடியாது.

நம்மை கொல்ல வருபவனை நாம் தற்பாதுகாப்பிற்காக கொன்றால் அது கொலை குற்றத்தில் வராது என்பது இந்திய அரசியல் சட்டம். இங்கே காரணம் முக்கியமாக படுகிறது.

விலை வாசி போராட்டத்தில் அரசு பேருந்தை எரிப்பதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? இரண்டிலுமே காரணங்கள் நியாயமான காரணங்கள் தானே?

தர்மங்கள் காலத்திற்கு காலம் நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது. பாரத நாடு ஜனநாயக நாடு. இங்கே மக்களே அரசை தெரிவு செய்கிறார்கள். யாரை தெரிவு செய்ய வேண்டும் என்ற உரிமை மக்களிடம் விடப்படுகிறது. அவ்வாறு தெரிவான ஒரு அரசு அராஜகம் நடத்தினால் அதையும் ஜனநாயக முறையிலேயே கையாள வேண்டும். மக்கள் ஒன்றிணைந்தால் அரசை மாற்றி விடலாம். மாநில அரசுகள் ஒன்றிணைந்தால் மத்திய அரசை துரத்தி விடலாம். மாநில அரசு அராஜகம் நடத்தினால் மத்திய அரசு கேள்வி கேட்கலாம். எந்த அரசையும் கேள்வி கேட்கும் அதிகாரம் நீதி மன்றங்களுக்கு உள்ளது.

அரசிற்கு எதிரான வன்முறை என்பது இங்கே மக்களுக்கு எதிரான வன்முறை ஆகும். ஏனென்றால் மக்களுடன் அதிகமாக நேரடி தொடர்பில் இருப்பவர்களான காவலர்கள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்ற அரசு அதிகாரிகள் அனைவருமே மக்களில் ஒருவர். கடைகள் மூடப்பட்டால் பாதிக்கப்படுபவர்கள் மக்களே. பேருந்து நிறுத்தப்பட்டால் பாதிக்கப்படுபவர்களும் மக்களே. அரசு உடைமைகள் சேதப்படுத்தப்பட்டால் இங்கேயும் மக்களுக்கே மறைமுக இழப்பு. அரசு பணம் வீணடிக்கப்பட்டாலும் அது மக்களின் இழப்பே.

இவ்வாறான போராட்டங்களை விட்டுவிட்டு அரசு அதிகாரிகள் அவர்கள் வீடுகளை மக்கள் சிறைபிடித்தால் நோக்கம் நிறைவேற அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் நோக்கம் நியாயமாக இருக்க வேண்டும்.

அரசு எப்படி ஜனநாயக முறையில் ஏற்பட்டதோ அதே போல கோரிக்கையும் ஜனநாயக முறையில் கோரப்பட வேண்டும். இந்த அரசு தேவையில்லை எனில் அதையும் ஜனநாயக முறையிலிலேயே கையாள வேண்டும். அது தான் நியாயம்.

அரசு அமைந்தது ஜனநாயக முறையில் அல்ல என்ற நிலையில் மட்டுமே அரசுக்கு எதிரான தீவிர போராளிகள் நியாயமாக பார்க்கப்படுவார்கள்.

இந்தியாவில் ஆங்கில ஆட்சி அமைந்ததும் நடந்ததும் ஜனநாயக முறையில் அல்ல. அதனால் அவர்களுக்கு எதிரான மறவழியும் நியாயமாகவே இருந்தது.

ஆனால், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் எங்கே? இங்கே உள்ள ஆங்கிலேயர்கள் எங்கே? ஏன் நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக கொந்தளித்தால் ஆங்கிலேய ஆதிக்க வெறியர்களை கூறுகூறாக வெட்டி போட்டிருக்க முடியாதா? என்பது தீவிரவாதம் பேசும் அனைவரின் கேள்வி.

காலம் கடந்த எழுச்சி இது. எழுச்சி எளிதில் முறியடிக்கப்பட்டிருக்கும். முறியடிக்கப்பட்டது.

இதற்கு பல காரணங்கள்.

முதலில் பஞ்சம். ஆங்கிலேயர்கள் கிட்டத்தட்ட 200 வருடங்கள் நம்மை அடிமைப்படுத்தி அன்று மிகவும் வசதியாக இருந்த நம்மை கொள்ளையடித்து சூரையாடி வன்முறை செய்தும் மன்னர்களை அழித்தும் கருவூலங்களை சூறையாடியும் கோவில்களை இடித்தும் தங்கள் வெறியை நடத்தியிருக்கிறார்கள். ஐந்து வருடங்கள் ஒரு அரசியல்வாதியை ஆட்சியில் அமர்த்தினாலே எத்தனை கோடிகள் கொள்ளையடிப்பார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இங்கே 200 வருடங்கள். கற்பனை செய்யமுடியாத காலம். செழிப்பாக இருந்த நம்மை கொள்ளையடித்து கொத்தடிமை போல ஆக்கி பஞ்சம் தலைவிரித்தாடி வயிறு ஒட்டி மெலிந்த நம் மக்களை படம் எடுத்து வேடிக்கை பார்த்து மகிழ்ந்த காலம் அது.

இரண்டாவது, தகவல் தொடர்பின்மை. இன்று போல வீதியெங்கும் மக்கள் தொகை அன்று கிடையாது. தகவல் தொடர்பு சாதங்கள் மிகவும் குறைவு. கடிதமே மிகவும் முக்கியமான தொடர்பு சாதனம். விடுதலை எழுச்சி ஒரே நேரம் ஆரம்பித்து அடித்தால் அடிக்கலாம். ஆனால் தகவல் தொடர்பின்மையால் அங்கங்கே எழுச்சி நடந்தால் இன்னும் பல உயிர்கள் பலி கொடுக்கப்பட்டிருக்குமே தவிர எழுச்சி வெற்றி அடைவது கடினம். தவிர அரசு துறைகள் அனைத்தும் ஆங்கிலேயர் கைவசம். கடிதமும் ஆங்கியர்கள் அனுமதி பெற்றே சேவை செய்யப்பட்டன. எழுச்சியை நடத்தும் தலைவர்கள் உடனடியாக திட்டங்களை பகிர்ந்து கொள்ள எந்த ஊடகமும் இல்லை. பத்திரிகைகளும் அந்தந்த பிரதேசத்தில் அதிகமாக கையெழுத்து பிரதியாகவே இருந்தது.

மூன்றாவது, காவலர்கள் அனைவரும் ஆங்கிலேயர்களின் கட்டளைகளை நிறைவேற்றும் அடிமைகள்.

வாஸ்கோடகாமா கேரளாவில் கால் வைத்த நேரமே காலை வெட்டியிருந்தால் தான் இது சாத்தியம். வணிகம் செய்ய என்ற பெயரில் அண்ட வந்தவன் அரியணையில் கை வைத்த போதே அடக்கியிருக்க வேண்டும். என்ன செய்வது? வந்தாரை வாழ வைக்கும் நாடு தமிழகம் மட்டுமல்ல; கேரளாவும் தான்.

சுத்த தமிழில் சொன்னால் அகிம்சை என்பது அறவழி, தீவிரவாதம் என்பது மறவழி.

அகிம்சை என்றால் உடனடியாக மின்னல் போல் நினைவில் வருபவர் மோகன்தாஸ் கரம்சந் காந்தி. அகிம்சை எனும் பாடத்தை கற்றுத்தந்தவராக சித்தரிக்கப்படுபவர்.

அவரது நல்ல பக்கங்களை போலவே மறுபக்கம் ஒன்றும் பலரால் அடிக்கடி வாசித்து காட்டப்படுகிறது. தான் செய்த தவறுகளை தன் சத்தியசோதனை நூலில் வெளிப்படையாக எழுதியுள்ளார் காந்தி. அவரது அனைத்து தவறுகள் தெரிந்தும் அவர் இன்னும் மகாத்மாவாகவே இருக்கிறார். காரணம் அவரது நல்ல பக்கங்கள்.

இது காந்தி நாடு அதனால் இங்கே எல்லாம் உத்தமம் என்ற மனநிலை சரியல்ல. ஏனென்றால் காந்தி பிறந்ததும் இங்கே தான், சுபாஷ் சந்திர போஷ் பிறந்ததும் இங்கே தான். கோட்சே பிறந்ததும் இங்கே தான். மராட்டிய மன்னன் வீர சிவாஜி பிறந்ததும் இங்கே தான், வீர பாண்டிய கட்டபொம்மன் பிறந்தும் இங்கே தான். எட்டப்பன் பிறந்ததும் இங்கே தான். காமராஜர் பிறந்ததும் இங்கே தான். எம்ஜி ஆர் பிறந்ததும் இங்கே தான். ஈவேரா பிறந்ததும் இங்கே தான். கருணாநிதி பிறந்ததும் இங்கே தான். இன்னும் நிறைய இங்கே தான்...

காந்தியை பேசினால் காந்தியவாதி என்று முத்திரை குத்தி அழகு பார்ப்பார்கள். ஒரு சிலரோ காந்தியை மகாத்மா என்று கூற அப்படி என்ன தகுதி இருக்கிறது என்று அவர் செய்ததாக தவறுகள் வில்லத்தனங்கள் என்று சிலவற்றை அடுக்குகிறார்கள். மற்று சிலரோ காந்தியின் அகிம்சைக்கு எதிராக இருந்து ஆங்கிலேர்களை அடித்தே விரட்ட வேண்டும் என்ற தீவிர கொள்கை உடைய சுபாஸ் சந்திர போஸை முன்னிறுத்தி காந்தியை பின்தள்ளி ஏதோ சாதிக்கிறார்கள்.

காந்தியவாதி என்று முத்திரை குத்தப்பட்டால் பெருமைப்பட்டே ஆக வேண்டும். இதில் வருத்தப்பட எதுவுமே கிடையாது. வேண்டுமானால் காந்தியவாதி ஆக தனக்கு தகுதி இருக்கிறதா என்று நினைத்து வருத்தப்படலாம்.

காந்தியை மகாத்மா என்று கூற தகுதி இருக்கிறதா என்று கேட்போர்களில் அதிகமானவர்கள் அதிகம் நடுநிலைமை சிந்தனை இல்லாமல் இருப்பவர்கள். இங்கே ஒருவரின் கெட்டவைகளை பார்த்து அவரை எடை போடும் அவர்களை "இன்றைய திரை உலகம் மிகவும் கெட்டு விட்டது, அது சமூகத்தை கெடுக்கிறது" என்று சொல்லி பாருங்கள். "ஏன் கெட்டவைகளை பார்க்கிறீர்கள். எத்தனையோ நல்ல விஷயங்களும் அதில் இருக்கிறதே" என்று காரணங்களை அடுக்குவார்கள். இதே போல தான் அவர்களின் தலைவர்களின் மீது குறை வரினும் சொல்வார்கள். அதாவது இவர்கள் நடுநிலைமை இல்லாமல் தன் விருப்ப வெறுப்பின் அடிப்படையில் சிந்திப்பவர்கள். வெளியில் முற்போக்கு சிந்தனை உடையவர்கள் என்று காட்டிக்கொள்ள பழையவைகளை எதையும் யோசிக்காமல் தூற்றுபவர்கள்.

அடுத்து அகிம்சை காந்தியை பின்தள்ளி தீவிரவாத சுபாஷ சந்திர போஸை முன் நிறுத்துபவர்கள். இவர்கள் தீவிர காந்திய எதிர்ப்பாளர்களாகவே இருப்பார்கள். அதிலும் அதிகம் மத வெறுப்பாளர்களாகவும் இந்திய சிந்தனை வெறுப்பாளர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் நோக்கம் சுபாஷ்சந்திர போஸை முன்னிறுத்துவதல்ல. காந்தியை பின் தள்ளுவது மட்டுமே. அதற்கு எவரையும் பயன்படுத்தி கொள்வார்கள். இந்து மதத்தை குறை கூற இந்து மத தலைவர்களை இகழும் நோக்கு உடையவர்கள். இந்து மதத்தை அழிக்க என்ற அவர்கள் எண்ணத்தை முன்னிறுத்தி சாதியை ஒழிப்போம் என்ற கோஷம் அதிகமாக இவர்களிடம் காணப்படும். அதற்காக பாரதியின் சாதி ஒழிப்பு சிந்தனைகளை பயன்படுத்தி கொள்வார்கள். ஆனால் இந்து என்று பேசும் இடத்து அவர்கள் பார்வையில் பாரதி ஒரு பார்ப்பனன் ஆகிவிடுவான்.

காந்தியை பின் தள்ளும் இவர்கள் எண்ணத்தில் சுபாஸ் சந்திர போஸ் ஒரு நாயகன். அவர் நாயகனே. சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் சுபாஸ் சந்திர போஸ் ஒரு பார்ப்பனன் என்பதை மறந்து விடுவார்கள். ஆம். சுபாஸ் சந்திர போஸ் ஒரு பெங்காலி பிராமண ஜாதியில் பிறந்தவர். மறவழியை கையில் எடுத்து காந்தியை கொன்ற கோட்சேவோ ஒரு பார்ப்பனன். ஆனால் காந்தியோ வைசிய ஜாதியில் பிறந்தவர்.

இயற்கை எப்போதுமே வித்தியாசமான உதாரணங்களை முன்வைத்தவண்ணமே இருக்கிறது.

இந்து தலைவர்கள் என்று பேசி பார்த்தால் சுபாஸ் சந்திர போஸ் என்ன காந்தி என்ன எல்லோருமே அவர்கள் பார்வையில் இந்து மத வெறியர்கள் ஆகி விடுவார்கள். அல்லது ஆரியர்கள் ஆகிவிடுவார்கள். இவர்களிடம் இன்னும் கொஞ்சம் அதிகமாக பேசி இந்திய தலைவரை வைத்தே இந்திய தலைவரை தாழ்த்தும் வழியை அடைத்து விட்டால் ஆங்கிலேய ஆட்சியை புகழ ஆரம்பித்துவிடுவதை காணலாம். ஆனால் அவர்களோ விடுதலை எண்ணம் உள்ளவர்கள். நம்புங்கள். நம்பித்தான் ஆக வேண்டும்.

இதுதான் நிஜ முகம். அறிவில் முற்றிய இவர்கள் தான் மற்ற மக்கள் மனதில் பிரிவினையை விதைக்கிறார்கள்.

காந்தியையோ சந்திர போஸையோ ஜாதிய அடிப்படையில் பார்ப்பதோ பிரிப்பதோ என் நோக்கமல்ல. (இதை இங்கே தெளிவாக கூற வேண்டியிருக்கிறது ஏனென்றால் நிஜத்தை யோசிக்காமல் குற்றம் சொல்லும் போக்குடைய சிந்தனைவாதிகளின் கழுகு பார்வையில் இந்த நோக்கம் தவறாக பார்க்க பட்டிருக்கும் என்று நம்புகிறேன். )

தேச பற்று உடைய அனைத்து சாமானிய மக்கள் மனதிலும் காந்தியோ சந்திர போஸோ இருவருமே இந்தியாவின் நாயகர்கள் தான். அவர்கள் போராடிய விதத்தை வைத்து பிரித்து பார்த்து குற்றம் சொல்லும் குணம் சாமானியர்களிடம் கிடையாது அது அவர்களுக்கு தேவையும் இல்லை. இரண்டு பேருமே எப்படி இருந்தாலும் அவர்கள் மீதான பார்வை அப்படியே தான் இன்னும் இருக்கப்போகிறது.

இருவருமே நம்மை அடிமை படுத்திய ஆங்கிலேய வெறியர்களிடம் இருந்து தேசத்தை விடுவிக்க போராடியவர்கள். அவர்களை மதிக்கவோ நினைவுகொள்ளவோ விழா எடுக்கவோ இந்த காரணங்கள் நமக்கு மிகவும் போதுமானது. வேறு நியாயங்களோ பிரிவினைகளோ தேவையே கிடையாது.

அகிம்சை ப்ளாக்மெயில்

அகிம்சை என்பது ஒருவித ப்ளாக்மெயில் செய்வதை போன்றது என்ற ஒரு கருத்து அகிம்சைக்கு எதிராக பரவலாக சொல்லப்படுகிறது. இது அகிம்சைக்கு எதிரான கருத்து அல்ல. அகிம்சை என்பது ப்ளாக்மெயில் செய்வது தான். எந்த சந்தேகமும் இல்லை. தீவிரவாதம் என்பது தன் நோக்கம் நிறைவேற வன்முறை, சூரையாடல், கொலை, குண்டு வைத்தல், கட்டிடங்களை தகர்த்தல் போன்றவற்றை செய்து தனக்கு எதிரானவர்களை பயப்படுத்தி பணிய வைத்து தன் நோக்கத்தை நிறைவேற்றுதல். தீவிரவாதத்தில் அடுத்தவரை வருத்துகிறோம், கொலை செய்கிறோம், சேதத்தை ஏற்படுத்துகிறோம். அகிம்சை என்பது இவை எதையும் செய்யாமல் அமைதி வழியில் எதிராளியை பணிய வைத்தல். நோக்கத்தை நிறைவேற்றவில்லை என்றால் மேலும் அதிகமாக தன்னைத்தானே வருத்திக்கொள்ளுகிறோம். அதாவது எதிராளியின் மனசாட்சியை கேள்விகேட்க வைக்கிறோம்.

இங்கே தன்னைத்தானே வருத்துதல் என்பது காதலிக்காவிட்டால் கையை வெட்டிக்கொள்வேன், தற்கொலை செய்வேன் என்று ஒரு பெண்ணை பயப்படுத்துவதை விட கொஞ்சம் நாகரீகமாகத்தான் நடக்கிறது. ஏனென்றால் முதலிலேயே சொன்ன படி அகிம்சையின் நோக்கம் சிறப்பாக உள்ளது. ஏதோ ஒரு பெண்ணை நீ என்னைத்தான் காதலிக்க வேண்டும் என்று சொல்ல ஆணுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஆனால் அகிம்சையில் நோக்கம் என்பது நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமையை பெறுவதில் ஆரம்பிப்பதில் மட்டுமல்ல அதன் நோக்கம் சமூகம் சிறப்படைந்து அதன் நலம் பேணுவதில் இருக்கிறது. சுருக்கமாக சொன்னால் நியாய தர்மங்கள் பார்க்கப்படுகிறது.

தீவிரவாதம் செய்யும் ப்ளாக்மெயிலை விட அகிம்சை செய்யும் ப்ளாக்மெயிலில் நற்பலன்கள் முன்னிறுத்தப்படுவது மட்டுமல்ல, போராளியின் நோக்கம் மட்டுமல்ல எதிரியின் நலனும் கருத்தில் கொள்ளப்படுகிறது. இது தான் முக்கியம். இங்கே எதிராளியும் மதிக்கப்படுகிறார். மனிதாபிமானம் பேணப்படுகிறது.

ஒரு ஏழை குடும்பத்தில் மகன் "பைக் வாங்கி தா, இல்லையென்றால் சாப்பிட மாட்டேன்" என்று சொல்வது அகிம்சையில் வராது. அதே சமயம் "பரீட்சை கட்டணம் கட்டவில்லை, தரவில்லை என்றால் பள்ளிக்கு போகமாட்டேன்" என்று சொல்வதோ "நூல் வாங்கி தா, இல்லையென்றால் பரீட்சைக்கு படிக்கமுடியாது, தோற்று விடுவேன்" என்று சொல்வதோ அகிம்சை. இதுவும் கிட்டத்தட்ட ப்ளாக்மெயில் தான்.

தனக்கு பைக் வாங்கிதரவில்லை எனில் தந்தையின் பைக்கில் தீவைத்தாலோ, தனக்கு நகை வாங்கி தராததால் கணவனை ஒருத்தி அருவாளால் போட்டு தள்ளினாலோ சமூகம் என்ன ஆகும் என்பது போன்ற கேள்விகளை நாம் நமக்குள் கற்பனை செய்து பார்க்க வேண்டும்.

பண்டைய கால அரச தர்மத்தில் நாட்டைப்பிடிக்க படையெடுத்து வரும் எதிர்நாட்டு அரசனை எதிர்த்து போராடி வெற்றி பெறுவதே நியாயம், அதுவே மறம். இவ்வாறு எதிர்த்து நின்று எதிராளியை தோற்கடித்து தன் நாட்டையும் மக்களையும் காப்பாற்றுதல் அரச தர்மம். இங்கே நிகழும் உயிர் பலிகள் தியாகமாக பார்க்கப்படுகிறது.

வன்முறையில் போராடினால் அவர் போராளி. நியாய முறையில் போராடி இறந்தால் அவர் தியாகி.

ஒரு அகிம்சை போராட்டம் நடந்தால் அதை ப்ளாக் மெயில் செய்கிறார் என்பதோ, போராளிகளை யாரோ தூண்டி விட்டு அவர்கள் போராடுவதாக கூறுவது போராட்டத்திற்கு நேரடி பதில் சொல்ல இயலாதவர்கள் சொல்லும் வாசகம். தனக்கு சாதகமான போராட்டத்தை அகிம்சை என்று ஆதரவு செய்வதும் ஆனால் எதிரானவர்கள் போராட்டம் நடத்தும் போது அதில் குறை சொல்வதோ அரசியல், மத சாயங்கள் பூசி பார்ப்பதோ இவர்களின் வழக்கமான வேலை.

அவர்கள் எண்ணம் போராட்டம் வெற்றி அடைய கூடாது என்பதே. அதற்கு போராட்டம் மக்களிடம் சென்றடைய கூடாது என நினைப்பார்கள். எனவே போராட்டத்தின் தேவையை அனைவருக்கும் விளக்கினால் அதை தூண்டிவிடுவதாக பார்ப்பார்கள்.

போராட்டத்தின் நோக்கம் நல்ல நோக்கமானால் தூண்டிவிடுவதில் எந்த தவறும் சொல்ல முடியாது. இதை சரியாக செய்யாமல் இருந்தால் தான் போராட்டம் தோல்வி அடைய வாய்ப்பு இருந்து விடும்.

மறவழி வெற்றி பெற்றதா?

போராட்டம், அதன் நியாயம், எதிரியின் பலம், போராட்ட மக்களுக்கு கிடைத்த ஆதரவு அல்லது எதிராளிக்கு இருந்த எதிராளிகள், இதன் அடிப்படையில் உலகின் பல இடங்களில் பல போராட்டங்களில் மறவழியும் அறவழியும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்நூற்றாண்டில் நம் கண்முன்னே நடந்த மறவழி போராட்டம் சிங்களவர்களுக்கு எதிரான ஈழத்து விடுதலை போராட்டம், அடுத்து லிபியாவில் கடாபி அரசுக்கு எதிராக நடந்த போராட்டம்.

இரண்டுமே மறவழி போராட்டம் எனினும் ஈழ போராட்டம் தோல்வி அடைந்தது. லிபியா போராட்டம் வெற்றி அடைந்தது.

இரண்டிலும் உள்ள முக்கியமான வேறு பாடு, ஈழ போராட்டத்தில் போராட்ட குழு மக்களிடம் இருந்து தனித்து செயல்பட்டது. ஆனால் லிபியா போராட்டத்தில் மக்களே போராளிகள்.

தனித்து செயல்பட்டதால் விடுதலை புலிகள் அமைப்பு மக்களுக்கு எதிரான குழுவாக சிங்கள அரசால் உலகில் சித்தரிக்கப்பட்டது. பல நாடுகளும் அதை நம்பின. மக்களே நேரடியாக களத்தில் இருந்திருந்தால் அது அரசின் வன்முறைக்கு எதிரான போராட்டமாக நியாயப்படுத்த பட்டிருக்கும். உலகின் பல நாடுகளின் நேரடி ஆதரவு வெகுவாக கிடைத்திருக்கும்.

இங்கே போராட்டம் எத்தகையது அறவழியா மறவழியா என்பதை விட போராளி யார் என்பதே முக்கியமாக பார்க்கப்படுகிறது. தனி அமைப்பானதால் அதன் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவது சிங்களவர்களுக்கு மிக எளிதான செயலாக இருந்தது. அனைத்து தமிழர்களும் போராட்டத்தில் களம் இறங்கவில்லை. ஒரு பகுதியில் மட்டும் விடுதலை புலிகள் ஆயுதம் ஏந்தி போராடிக்கொண்டிருக்க மறு பக்கமோ சிங்களவர்களும் தமிழர்களும் தங்கள் இயல்பு வாழ்க்கையை நடத்தி கொண்டிருந்தார்கள். போராட்ட நேரங்களில் இலங்கை தமிழ் வானொலிகளில் வழக்கமான நேரடி திரைப்பட பாட்டு கேட்கும் நிகழ்சிகளை தான் கேட்க முடிந்தது.

எந்த போராட்டமாக இருந்தாலும் அறவழியா மறவழியா என்பதை விட முழு மக்கள் ஆதரவு மிக முக்கியம். முழு மக்கள் ஆதரவு போராட்டங்கள் வெற்றி பெற்று விடுகின்றன. மக்களே அரசிற்கு எதிராக நிற்கும் போது மற்ற நாடுகள் அரசு சொல்வதை நம்பாது. மக்களுக்கு ஆதரவாகவே செயல்படும். அதனால் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கடாபி அரசை தோற்கடிக்க முன்வந்தது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

இந்திய விடுதலை போராட்டத்தில் முதலில் அரசர்களால் ஏற்பட்ட மறவழி போராட்டங்கள் கிட்டத்தட்ட அனைத்துமே தோல்வியடைந்தது. ஏனென்றால் எதிராளியின் பலம் அவனது பீரங்கியிலும் துப்பாக்கியிலும் இருந்தது. நம்மவர்களுக்கு நெஞ்சில் மட்டுமே பலம் இருந்தது.

சுபாஸ் சந்திர போஸின் விடுதலை போராட்டம் வெற்றி பெற்றதா தோல்வியா என்பதை கூற இயலாது. போராட்டமே முழுமையாக ஆரம்பிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அல்லது ஆரம்பிக்கும் முன்னரே முடிந்து விட்டது என்று சொல்ல வேண்டும். ஆனால் போராட்டத்தில் மக்களை சேர்க்கும் பணியால் மக்கள் ஒரு மனதில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான தீவிர எழுச்சி ஏற்பட்டது உண்மை. போராட்ட குழு ஒரு தலைமையையே நம்பியிருந்த சமயத்தில் போராட்டத்தை முன்னெடுக்க அடுத்த தலைவர் இல்லாததால் குழு அமைதியாகியிருந்தது. முன்பு கூறியது போல தகலல் தொடர்பின்மை காரணமாகவே போராட்டம் செயலிழந்தது. நல்ல தகவல் தொடர்பு இருந்திருந்தால் உலக நாடுகளின் ஆதரவிற்காக சந்திரபோஸ் வெளிநாடுகளுக்கு நேரடியாக பயணம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது.

ஆனால் ஈழ போராட்டத்தில் முழு மக்களின் ஆதரவையும் பெற போராட்ட குழு தவறியிருந்தது மட்டுமல்ல ஏற்கெனவே ஆயுதம் எடுத்துவிட்டிருந்ததால் அதையே பயன்படுத்தவும் நிர்பந்தத்திற்கு உட்பட்டிருந்தது.

அறவழியா மறவழியா?

அறவழியா மறவழியா என்று பொதுவாக வாதிடுவது வீண் வேலை. எப்போது அறவழி எப்போது மறவழி தேவை என்பது போராட்டத்தின் நோக்கம் அல்லது கோரிக்கை என்ன, அதன் ஆதரவு எப்படி, எதிராளியின் செயல்பாடுகள் என்ன, எதிராளியின் பலம் எப்படி என்பன போன்ற காரணிகளை வைத்தே தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.

ஒரு செய்தி வந்தது. மக்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் மது கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராடுகிறார்கள். நல்ல விஷயம். அதே நேரம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதலால் சிலர் கடையை அடித்து உடைக்க முற்பட்டிருக்கிறார்கள். அவர்களை காவலர்கள் தடுத்து கடையை பாதுகாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

மக்களுக்காக தான் அரசு செயல்படவேண்டும். மக்களே அப்பகுதியில் மது கடை வேண்டாம் எனும் போது அரசு வற்புறுத்துவது மது கடை விஷயத்தில் எவ்விதத்திலும் சரியல்ல. அப்படி அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மக்கள் கடையை நொறுக்க முற்பட்டிருப்பது சரி இதில் என்ன தவறு என்று திவிரவாத கொள்கை உடையவர்கள் கேட்கலாம்.

இதையே வேறு கோணத்தில் சிந்தித்தால், அப்பகுதி மக்களே வேண்டாம் என்று ஒதுக்கிய பின் கடையில் யாரும் மது வாங்காமல் இருந்திருந்தாலே மதுகடை நபர்கள் தங்கள் நடையை கட்டியிருப்பார்கள். இவ்வாறு போராட்டம் நடந்திருந்தால் அது அகிம்சை. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை எனில் மக்களின் முழு ஆதரவு இப்போராட்டத்திற்கு கிடைக்கவில்லை என்றே எண்ண வேண்டியுள்ளது. மக்களிடம் ஆதரவு கிடைக்காத போராட்டம் வெற்றி பெற வாய்ப்பு குறைவே.

இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. அது 'அறிவை பயன்படுத்தல்'.
வன்முறை கொள்கையுடையவர்கள் 'ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு' என்பதை போன்று எடுத்தோம் கவிழ்த்தோம் அடி தடி என்று இறங்கி விடுவார்கள். இதுவும் மறவழி போராட்டம் தோல்வியடைய முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவான சிந்தனை எந்த போராட்டத்திற்கும் முக்கியமான தேவை.

காந்தி சொல்கிறார்: "கண்முன்னே ஒரு பெண் வன்முறைக்கு உள்ளானால் நான் அகிம்சையை கடைபிடித்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டேன்".

இங்கே அவர் தீவிரவாதியாக மாறிவிடுகிறாரா? ஆம்.

அனைவரது மனங்களிலும் ஒரு அகிம்சாவாதியும் தீவிரவாதியும் ஒளிந்து இருக்கிறான். ஆனால், தன்னால் எதிராளியை அடிக்க முடியும் என்ற நிலையில் மட்டுமே தீவிரவாதி தலைகாட்டுகிறான். எதிராளி தன்னை அடித்து விடுவான் என்ற நிலையியோ அல்லது தன்னிடம் பலவீனங்கள் அதிகம் இருக்கும் நிலையியோ மட்டுமே அகிம்சாவாதி தலைகாட்ட வருகிறான். எதிராளி அடிக்க வரும் போது என் மக்களை அடிக்காதே என்னை வேண்டுமானால் அடித்துவிட்டு போ என்று கூறும் தைரியமான தியாக உணர்வு அனைவரிடமும் குறைந்து வருகிறது.

நடைமுறையில் பல போராட்டங்களும் தம் பலம் அதிகமாக இருக்கும் போது வன்முறையில் இறங்குவதும் பலம் குறையும் போது பேச்சுவார்த்தை என்று வருவதையும் காண முடிகிறது.

அறவழியை தொடங்க இருக்கும் உறுதி அதை தொடர்ந்து கடைபிடிப்பதில் இருப்பதில்லை. கொள்கை உறுதியாக இல்லை. அகிம்சையின் மீது வன்முறை ஏவப்பட்டால் 'அகிம்சை' போராட்டம் 'கிம்சை' போராட்டமாக ஆகிவிடாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது அகிம்சை. தன்னால் அடிக்க முடியும் என்ற நிலையிலும் அகிம்சையை கடைபிடித்து நியாய வழியில் செல்வதே அகிம்சை. அறவழி. ஆனால் இந்த வழியில் செல்வது மிக கடினம்.

ஏனென்றால் அறிவழியில் பயணம் மேற்கொள்ள நியாய தர்மங்களின் மீதும் சத்தியத்தின் மீதும் திடமான நம்பிக்கை வைத்தாக வேண்டும்.

நானும் நானும் எண்ணங்கள் தொடரும்...

(எண்ணங்களில் சில ஒற்று பிழைகளை விட்டு வைத்துள்ளேன். தெரியாமல் விட்டதல்ல. சேர்த்து எழுதாமல் எழுத முடிகிற இடங்களில் ஒற்று சேர்க்காமல் எழுதி பார்த்து வருகிறேன். )

வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

7.33333
Your rating: None Average: 7.3 (9 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

தூய தமிழை வலுவாகப் பற்றி,


10

தூய தமிழை வலுவாகப் பற்றி, தாங்கள் கூறும் கோட்பாடுகளை(தத்துவங்களை) வரவேற்கிறேன். தங்கள் வழிகாட்டல் தொடர வாழ்த்துக்கள்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


vinoth's படம்

நன்றி


நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


venishaj's படம்

நல்லக் கருத்து. விளக்கம்


5

நல்லக் கருத்து. விளக்கம் புதுமை. தொடரட்டும் உம் பணி. Clap

vinoth's படம்

நன்றி


நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


rajasekarengg's படம்

புதுமையான சிந்தனை, அழகான


9

புதுமையான சிந்தனை, அழகான பழம்பெரும் கருத்துக்கள்................
ஓரு பழமொழி ஊரில் சொல்லுவார்கள்
தலை வலியும் காச்சலும் தனக்கு வந்தாதான் தெரியும் என்பார்கள்!
இலங்கை தமிழர், இந்திய தமிழர், சிங்கபூர் தமிழர் ...... இன்னும் நிறைய தமிழர்கள் இந்த பாரினில் உண்டு.............. நாம் தமிழர் உண்ர்வு நம்மிடம் குறைவு...........
கப்பலில் ஒரு சிறிய ஓட்டை தெரியாமல் இருந்தால் என்ன ஆகுமோ , அதுபோல தான், அகிம்சாவாதியோ , தீவிரவாதியோ தன்னுடன் இருக்கும்
துரோகிகளை அடையாளம் காணாதவரை எந்த நோக்கமும் நிறைவேறப்போவது இல்லை, என் தமிழன் என் (இலங்கை) நாட்டில் பெற்ற தோல்விக்கு நம்பிக்கை துரோகமே , அந்த துரோகிகளை அடையாளம் கண்டு அழித்து இருந்தாள்....!?!?!!?!?!??!?!?!?!!?!??!

உன்மை தமிழன் மற தமிழன் ............ என் தமிழச்சிக்கு மட்டும் கருவில் வளரும் துரோகிகளை அடையாளம் காணும் ஆற்றல் இருந்திருந்தாள் அப்பொழுதே அழித்திருப்பாள்


??????? ????????
?.??.????????


vinoth's படம்

கருத்திற்கு நன்றி


கருத்திற்கு நன்றி நண்பரே

துரோகிகள் எல்லா இடங்களிலும் எப்போதுமே இருக்கிறார்கள். இந்திய விடுதலை போராட்டத்தின் போது கூட பல துரோகிகள் ஆங்கில அரசிற்கு ஆதரவாக செயல்பட்டார்கள்.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...