மதுரை வானொலியில் [AIR] இன்று 15.01.2012
ஒளிபரப்பான எமது சொற்பொழிவின் சாரம்.
தை மகளே வருக! தரணி எங்கும் புத்துணர்ச்சி தருக!
தைப் பிறந்தால் வழி பிறக்கும்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுண்டு பின் செல்வர்.
என்றார் வள்ளுவப் பெருந்தகை.
உழுது உண்டு வாழ்வதே வாழ்வு;
மற்றைய எதுவும் அதற்கு ஈடு இணை ஆகாது
என்பது அவரது கருத்து.
தொழில்களில் எல்லாம் தலையாயது உழவுத்தொழில்.
உலகத்தார் யாவருக்காகவும் உழைத்து
உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யும் உயர்ந்த பாங்கு
வேறு எந்த தொழிலிலும் இல்லை என்றே சொல்லலாம்.
உழவர் என்றும் லாபம் கருதி உழைத்தது கிடையாது.
அவர்கள் தம் இயல்பிலேயே உழைப்பைக் கொண்டவர்கள்.
அவர்கள் சிறிது நேரமும் சோம்பி இருந்ததில்லை.
வெளிச்சம் வந்துடனே வயலுக்குச் சென்று
நாள் முழுதும் உழைத்து சூரியன் மறையும் சமயமே வீடு திரும்புவர்.
"பாட்டுக்கோட்டை" தெரியுமா உங்களுக்கு?
அவர்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்.
அவர் பாடல்களில் மிகப் பிரசித்தம் பெற்ற ஒன்று.
"காடு வெளைஞ்ச மச்சான்,நமக்குக்
கையும் காலும்தான மிச்சம்;
கையும் காலும்தான மிச்சம்!
காடு வெலயனும் பொண்ணே, நமக்குக்
காலமிருக்குது பின்னே,
காலமிருக்குது பின்னே!"
இந்த வரிகளிலே,
உழவுத்தொழிலில் லாபமில்லா நிலையையும்
அவர்கள் பொன்மனச் செம்மல்களாய்
காலம் கை கொடுக்கும் என்று நம்பி வாழ்ந்ததையும்
நமர்த்து விட்ட நம்பிக்கையிலும்
சமர்த்து நடை போட்ட அவர்கள் சாகசத்தையும்
மிக அருமையாகச் சித்தரித்திருந்தார் அந்தக் கவிஞர்.
உழவர் மாடுகளை விரட்டி வேலை வாங்கும்போது
"தை" , " தை" என்று சொல்லுவாராம்.
ஏன் தெரியுமா?
"தை" பிறந்தால் தமக்கு வழி பிறக்கும்
என்ற நம்பிக்கையில் தானாம்.
தை பிறந்தால் அறுவடை நடக்கும்.
அறுவடையே அவர்களின் உழைப்பின் ஊதியம்.
உழுது விதைத்து, உயிர் கொடுத்து உழைத்து,
பழுதின்றிப் பயிர் வளர்த்து,
இயற்கையைத் தொழுது,
கதிர் முற்றும் காலம் வரை கடுந்தவம் புரிந்து
தை பிறக்குமோ?
உழைப்பாம் தவத்தின் பலன் சுரக்குமோ
என்று காத்திருந்து கதிர் அறுப்பார்.
அவர்கள் வாழ்க்கைக்கு வழி தையிலே பிறந்தது.
எனவேதான் தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்று
சொன்னார்கள்.
தைப் பிறந்தால் வழி பிறக்கும், தங்கமே, தங்கம்;
தவளச் சம்பா நெல்விழையும், தங்கமே, தங்கம்.
என்று பாடியும் மகிழ்ந்தார்கள்.
தைப் பிறந்தால் அவர்களுக்கு மட்டுமா வழி பிறக்கும்?
சகலகோடி மக்களுக்கும் தேவையான
உணவுப்பொருட்கள் விளைந்து பெருகி,
உணவுத்தட்டுப்பாடு இல்லை
என்ற நிலை உருவாகுவதால்
இது எல்லோருக்குமே ஒரு நல்வழி என்றே சொல்லலாம்.
தைப் பிறப்பதற்கு முன்பு வரை
அகிலத்தின் ஆதாரமாம் "ஆதவன்" ,
அண்டத்தின் தெற்கு சமபகுதியில்
தமது வாசத்தை முடித்துக்கொண்டு
வடசமபகுதியில் பயணிக்கும் போது
அவரை வணங்கி போற்றுதற்கு உரிய
பொன்னாளாக தை முதல் நாள்
தைப் பொங்கல் என்ற பெயரில்
கொண்டாடப் படுவது எல்லோரும் அறிந்ததே.
ஞாயிறு போற்றுதும்!
ஞாயிறு போற்றுதும்! என்று பாடினர் இளங்கோ அடிகள்.
இந்த ஞாயிறே,
பிரம்மா விஷ்ணு சிவபெருமான் ஆகியோரின்
இதயமாக இருந்து
ஜீவராசிகள் அனைத்தையும் ஆசிர்வதித்து காக்கிறாராம்.!
எனவே அவரை யாவரும் வணங்குவோமாக
என்று வேதம் சார்ந்த நூல்கள் கூறுகின்றன.
தைப் பிறப்பதற்கு முன்னர்
மார்கழி மாதம் முழுவதும் பீடை கொண்ட பொழுதாகவே கருதுவார்களாம்.
தைப் பிறந்தால் அவை யாவும் மாறி
உற்சாகம் உலகில் நிறையுமாம்.
எனவே தைப் பிறந்தால் சகல விதத்திலும் நன்மையே.
இந்தத் தைத் திருநாளில்,
தமிழர்களாகிய நாம்
நமது மரபு மற்றும் பண்பாட்டின் சிறப்பிர்க்கிணங்க
உற்சாஹம் பெருக்கி ஒருமையுடன் மகிழ்வோம்.
பொங்கல் படைத்தலால் உள்ளத்தில் பொங்குவோம்.
பொங்கலின் இனிமை போல்
எல்லோருக்கும் இனியராய்
எக்கணமும் புனிதராய்
மனிதருள் மகிமை பெருக்குவோம்.
வாழிய தரணி! வாழிய தமிழ்!
பாலு குருசுவாமி.
கருத்துகள்
இனிக்கும் பொங்கல்
இனிக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
தங்கள் சொற்பொழிவின் சாரம்
தங்கள் சொற்பொழிவின் சாரம் சிறப்பாக அமைந்துள்ளது. வாழ்த்துகள்.
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil







