தமிழ் மருத்துவம் பாதுகாக்க வேண்டும்
-- முனைவர். இரவா
இன்றைய நிலையில் தமிழ் மருத்துவ முறைகள் ஓலைகளிலும் நூல்களிலும் மறைந்து கிடக்கின்றன. ஒரு சில முறைகள் மரபு வழி மருத்துவர்களின் பாதுகாப்பில் முடங்கிக் கிடக்கின்றன.
தமிழ் மருத்துவப் பாதுகாப்பிற்காக எடுக்கும் முயற்சி முறையாக இருக்க வேண்டுமானால், தமிழ் மருத்துவச் சுவடிகளும், பழைய நூல்களும் இலக்கப் பதிவாக மாற்றி, மின்காந்த இலத்திரன் முறைக்கு மாற்றியாக வேண்டும்.
தமிழ் மருத்துவம் சிறப்படைய வேண்டுமானால், கீழ்க்கண்ட செயல்கள் நடைபெற வேண்டும்.
1) கி.பி 1927 க்கு முன் சித்த மருத்துவம் என்னும் பெயர் வழங்கப்படவில்லை. மருத்துவம் என்றே வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆகவே, சித்த மருத்துவம் என்னும் பெயரை ‘தமிழ் மருத்துவம்’ என்று, வழங்க அரசாணை வெளியிட வேண்டும்.
2) தமிழ் மருத்துவத்தில் மூல மருந்தாகப் பயன் படுத்தப்பட்ட கற்பம், சரக்குகள், பாடாணங்கள், மூலிகைகள் ஆகியவற்றில் பல அடையாளம் காணப் படவில்லை.
3) மூலிகைகளைப் பாதுகாக்கும் பணியில் தமிழகத்து கோயில்களும் ஈடுபட்டிருக்கின்றன. கோயில்களில், ஸ்தல விருட்சம் என்று கூறப்படுகின்ற கோயில் தாவரங்கள், அரியவகை மூலிகை இனமாகும். அவை நூற்றுக் கணக்கான ஆண்டுகள் முதிர்ந்த நிலையில் உள்ளன. அவை, பிற தாவர இனங்களின் பண்பிலிருந்து மாறுபட்டவை. (அவ்வாறு உள்ள 124 தாவரங்களை எனது ஆய்வேட்டில் பட்டியலிட்டுள்ளேன்) அவற்றை ஆராய்வது தமிழ் மருத்துவத்துக்கு உகந்ததாக இருக்கும்.
4) மூன்றே பொருளால் ஆனது பிண்டம் என்பதற்குச் சான்றாக, மூன்று பொருள்களால் ஒரு உயிரையே உருவாக்கும் முறையைக் “கும்ப முறை’ என்று, கூறப்பட்டுள்ளது. அந்த முறையை ஆராய வேண்டும்.
5) மூன்றே பொருளால் ஆனது அண்டம், பிண்டம், சீவன், வாதம், நோய், மருந்து என்பதன் உட்பொருளைக் கண்டறிய வேண்டும். முப்பு, குரு மருந்து ஆகியவற்றை ஆராய வேண்டும்.
6) சுவடி வடிவத்திலிருந்து நூல்வடிவம் பெற்ற நூல்களில், பல, செய்யுள் வடிவிலேயே இருப்பதனால், அவை, பொருள் விளங்காமல் இருக்கின்றன். அதனால், அவை, பிழையான நூல்கள் எனக் கருதப் படுகின்றன.
7) ஒரே நூல் வெவ்வேறு பெயரில் வெளியாகியுள்ளது. ஒரு நூலின் பகுதிகள் வேறு ஒரு நூலின் பகுதியாக அமைந்துள்ளது. இச்செயல்கள், தமிழ் மருத்துவ வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.
இந்தியாவில் ஆயுர்வேதக்கல்வியைக் கற்பிக்க மூன்று பல்கலைக் கழகங்களும் பல கல்லூரிகளும் மொத்தம் 196 துறைகளும் இருக்கின்றன. அயல் நாடுகளிலும் 6 கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன என்பது வியப்பளிக்கிறது.
ஆனால், சித்த மருத்துவத்தைக் கற்பிக்கும் கல்லூரிகளாக இருப்பவை மொத்தம் - 12. அவற்றில் தனியார் கல்லூரிகள் 10, அரசுக் கல்லூரிகள் 2 மட்டுந்தானா?
இந்திய மொழிகளில் தொன்மையான மொழி தமிழ். தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப் படுவதற்கு முன், தமிழுக்குப் பின் மொழியான சமஸ்கிருதம் 2000 ஆண்டுகள் பழமையான மொழி என்று கூறி செம்மொழியென அறிவிக்கப் படுகிறது. பல்முனை நெருக்கத்திற்குப் பின் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப் படுகிறது. அதுவும் எவ்வாறு? 1500 ஆண்டுகள் பழமையான மொழியாக அறிவிக்கப் பட்டுள்ளது. அதைவிடவும் ஒரு சிறப்பு என்னவென்றால், 500 ஆண்டுகளே ஆன இந்தி மொழி ஆட்சி மொழியாக அறிவித்திருப்பதாகும். தந்தை மாணவன்! மகன் ஆசிரியன்! அப்பனுக்குப் பாடஞ் சொன்ன சுப்பையன் கதை போலத் தமிழ், மூன்றாம் இடத்து மொழியாகப் பாவிக்கப் படுகிறது. மூன்றே பொருளால் ஆனது அண்டம் என்பது போல, மூன்றே மொழியால் ஆனது அரசியல்.
9) இந்தியாவிலுள்ள ஆயுர்வேதப் பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் திரட்டிய மருத்துவ நூல்கள் அனைத்தையும் ஆராய வேண்டும். ஆங்குள்ள தமிழ் மருத்துவ நூல்களை அடையாளம் காண வேண்டும்.
10) அண்ணா சித்த மருத்துவக் கல்லூரி வெளியிட்டுள்ள ஆயுர் வேதம் - தமிழ் மொழி பெயர்ப்பு நூலை ஆராய வேண்டும். அதன் மூலம், தமிழ் மருத்துவ நூல்கள் ஆயுர்வேதமாக மாற்றப்பட்டுள்ள உண்மை வெளிவரும்.
11) தனியார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தமிழ் மருத்துவ நூல்களைத் திரட்டும் பணிக்குழு நியமிக்க வேண்டும். பதிப்பிலுள்ள நூல்களைத் தொகுக்க வேண்டும்.
12) வட மொழிக்கும் / ஆயுர் வேதத்துக்கும் இருப்பதைப் போல, தமிழ் மருத்துவத்துக்கு ஒரு பல்கலைக் கழகம் நிறுவ வேண்டும்.
13) தமிழ் மருத்துவ மாநாடுகள், கருத்தரங்குகள் நடைபெற வேண்டும். புதிய புதிய மருத்துவ முறைகளைக் கண்டறிய பரம்பரை மருத்துவர், குடும்ப முறை மருத்துவர் (பாட்டி வைத்தியம்) ஆகியோரை ஒருங்கிணைக்க வேண்டும்.
14) தமிழ் மருத்துவத்தில் மாட்டு வைத்தியம் சிறப்படைய வில்லை. ஆனால், சிறந்த மாட்டு மருத்துவர்கள் தமிழகத்தில் இருக்கின்றார்கள். அவர்களைக் கண்டறிந்து மருத்துவ முறைகளைத் திரட்ட வேண்டும். சரசுவது மஹாலில் நூற்றுக் கணக்கில் மாட்டுவாகட நூல்கள் இருக்கின்றன. ஆனால், அவை பதிப்பிக்கப் படவில்லை. அவற்றை பதிப்பில் வெளியிட முயற்சி செய்ய வேண்டும்.
15) மலைவாழ் இன மக்களிடம் அரிய மருத்துவ முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. அவர்களிடமிருந்து அம்முறைகளைக் கற்று நூலாக வெளிக்கொணர வேண்டும்.
16) ஆயிரக்கணக்கில் மருத்துவச் சுவடிகள் இருக்கின்றன. என்றாலும் அவை பதிப்பிக்கப் படாமல் சுவடியாகவே இருக்கின்றன. அவற்றைப் பதிப்பிக்க குழு அமைக்க வேண்டும்.
17) நிலம் கடந்து / நாடு கடந்து சென்ற சுவடிகளைக் கண்டறிந்து, அவற்றை மீட்டெடுக்க முயல வேண்டும்.
18) படைப்பாளர்கள் தங்கள் முயற்சியினால் படைக்கப் படுகின்ற நூல்கள், 50 ஆண்டுகள் நிறைவடைந்தால் அந்நூல்கள் பொதுச் சொத்தாகி விடுகின்றன. அதைப் போல, தனியாரிடம் உள்ள ஓலைச் சுவடிகள் அனைத்தும் அரசுச் சொத்து என அறிவிக்க வேண்டும். தங்களிடமிருக்கும் சுவடிகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்காமல் இருப்பதும், அழிப்பதும், மறைப்பதும் குற்றமாக அறிவிக்க வேண்டும்.
19) சிறந்ததும் அரியதுமாகிய மருத்துவச் சுவடிகளையோ, மருத்துவ முறைகளையோ அளிப்போர்களுக்கு ஏற்ற சன்மானம் அளிக்க வேண்டும். அம்மருந்துகுரிய உரிமையையும் அவர்களுக்கே அளிக்கலாம். அதனால், பல முறைகள் தமிழ் மருத்துவத்துக்குத் தெரியவரும்.
20) பிற துறைகளில் சிறந்தவர்களைச் சிறப்பு செய்வது போலத், தமிழ் மருத்துவத் துறையில் சிறந்தவர்களுக்கு ஆண்டு தோறும் விருது அளித்து சிறப்பு செய்ய வேண்டும்.
21) தமிழ் மருத்துவம் பயிலும் மருத்துவர்களுக்குச் சுவடிகளைப் படிக்கும் பயிற்சி அளிக்க வேண்டும்.
22) தமிழ் நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் தமிழ் மருத்துவ இலக்கியத் துறை நிறுவ வேண்டும். அவை, மருத்துவச் சுவடிகளை ஆராய்தல், மருந்துப் பொருள்களை ஆராய்தல், நூல்களைப் பதிப்பித்தல் போன்ற பணிகளைச் செய்ய வேண்டும்.
23) தமிழர் தம் இல்லங்களில் முடங்கிக் கிடக்கும் சுவடிகளைத் திரட்ட குழு அமைக்க வேண்டும். அறிவிப்புகள் வெளியிட வேண்டும். கிராம சுகாதார அதிகாரிகள், கிராம வருவாய்த்துறை அதிகாரிகள் பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆகியோரைப் பயன் படுத்தி, சுவடிகளைத் திரட்டும் பணியை மேற்கொள்ள வேண்டும். திரட்டும் சுவடிகள் ஆவணப் படுத்தி, படித்து, குற்றங்குறை நீக்கி, பதிப்பித்து நூல்வடிவாக வெளியிட வேண்டும்.
24) மருத்துவ நூல்களில் காணப்படும் மருத்துகளை ஆய்வு ஆய்வரிக்கை வெளியிட வேண்டும்.
25) இந்திய மருத்துவக் கல்விச் சாலைகள் ஆங்கில மருத்துவத்துடம் இந்திய மருத்துவத்தையும் இணைத்துக் கற்பிக்க வேண்டும். இதற்கு வேண்டிய முன் நடவடிக்கைகளுக்கு ஏற்ற “மருத்துவக் கொள்கை”யை உருவாக்க வேண்டும்.
மேற்கண்ட பணிகளை ஆற்றுகின்ற முனைப்பும் திறமும் நம்மிடம் இருக்கின்றன. வேண்டிய நிதி ஆதாரமும் ஊக்கமும் அளிக்க மத்திய மாநில அரசுகளும் மருத்துவத் துறையும் முன் வர வேண்டும். பொருப்பிலிருப்பவர்கள் உரிய பணிகளைச் செய்ய முன்வருவார்கள் என நம்புகின்றோம்.
அழிந்து வரும் மரபு அழியாமலிருக்க விழித்தெழுவோமாக!
வாழ்க தமிழ் மருத்துவம்.
--
இருக்கும் வரை தமிழ் அணையில்
அன்புடன்
முனைவர் இரவா (இரா. வாசுதேவன்)
வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:http://www.thamizhkkuil.net
ஆயம்: thamizayam@googlegroups.com
கருத்துகள்
அரிய கருத்தகளை முன்
அரிய கருத்தகளை முன் வைத்திருக்கிறீர்கள் ஐயா, தமி்ழ் செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய செயல்கள் இவை.
தொடருங்கள் தங்கள் தமிழ் சேவையினை..
நன்றி.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
முதல்வர் கருணாநிதிக்கும் இதை அனுப்பிக்கொடுங்கள்!
மிகவும் சிந்திக்க வேண்டிய விசயமிது!. நல்ல தெளிவாகவே சொல்லியுள்ளீர்கள். இருந்தாலும் தமிழ் என்றால், தான் தான் என்று மார்தட்டிக்கொள்ளும் முதல்வர் கருணாநிதிக்கும் இதை அனுப்பிக்கொடுங்கள் அய்யா.
அருமையான பதிவு. கையில்
அருமையான பதிவு. கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைய வேண்டியதாய் உள்ளது.
வரவேற்கத்தக்க அரிய கருத்தை
வரவேற்கத்தக்க அரிய கருத்தை பதிந்தமைக்கு நன்றி ஐயா...
இத்துடன் விட்டுவிடாதீர்கள்...
உரியவருக்கு உரிய நேரத்தில் அனுப்புங்கள்....
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
Thanks , I wanna read to that
Thanks , I wanna read to that type of ebook in tamil format. where to download?
R.Mathan









