vinoth's படம்

தமிழை உயிரோட்டம் மிக்க மொழியாக வழங்க வேண்டும்
சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் வலியுறுத்தல்

தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தமிழை உயிரோட்டம் மிக்க மொழியாக தமிழர்களுக்கு வழங்க தமிழ் இணைய மாநாடு முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்று சிங்கப்பூர் அரசின் தொழில், வர்த்தகம் மற்றும் கல்வித் துறை மூத்த துணை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

கோவையில் நடைபெறும் 9வது தமிழ் இணைய மாநாட்டின் தொடக்க விழாவில் வியாழக்கிழமை (24/06/10) அவர் பேசியது:-

தமிழின் வளமான பாரம்பரியத்தைச் சிறப்பிக்க உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம், எதிர்காலத் தலைமுறையினரும் தமிழின் அவசியத்தைக் கட்டிக் காக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இன்றைய உலகமயமாதல் ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு ஏற்பவும் தமிழை ஈடுகொடுக்கச் செய்ய வேண்டும்.

இதன் அடிப்படையில் இணையமும், தகவல் தொழில்நுட்பமும் முக்கியப் பங்கு வகிக்கும்.

சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ் இளைஞர்களிடையே தமிழை வாழும் மொழியாக்க பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளில் தமிழும் ஒன்று.

பள்ளிகளில் முக்கியப் பாடங்களில் ஒன்றாகக் கற்பிக்கப்படுகிறது.

சிங்கப்பூரின் தமிழ் பேசும் சமூகம் சிறியதாக இருந்தாலும் பெரும்பாலானோர் பேச்சுத் தமிழைச் சமூக மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பயன்படுத்துகின்றனர்.

தமிழின் வளர்ச்சிக்கு வலுவான சமூக ஆதரவும் அவசியமாகிறது.

பல்வேறு மொழி மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளின் வழியே மாணவர்கள் தமிழைக் கற்றுக் கொள்ளவும் வகுப்பறைக்கு வெளியே அவர்கள் தமிழைப் பயன்படுத்தவும் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும் பிற சமூக அமைப்புகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன.

சிங்கப்பூரில் பெரும்பாலான மாணவர்கள் ஆங்கிலம் பேசும் குடும்பப் பின்னணியில் இருந்து வருகின்றனர்.

மாணவர்களை ஈர்க்கும் இணையத்திலும் ஆங்கிலப் பயன்பாடே அதிகம்.

இச்சூழலில், தமிழ் பயிலும் மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தை வளர்ப்பதும், அன்றாட வாழ்க்கையில் தமிழைக் கருத்துப் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்த அவர்களை ஊக்குவிப்பதும் நாம் எதிர்நோக்கியுள்ள முக்கியச் சவாலாகும்.

சிங்கப்பூர் ஒரு தகவல் தொடர்புத் தொழில்நுட்ப மையமாக இருக்கிறது.

ஆகவே, தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தில் தமிழை இடம்பெறச் செய்ய முடிகிறது.

எதிர்காலக் கல்வியில், தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வர்.

சிங்கப்பூரில் 81 சதவீத குடும்பங்களில் இணைய வசதி உண்டு.

இதை பயனுள்ள வழிகளில் செயல்படுத்தினால் எதிர்காலத்துக்கு உதவும் வகையில் மாணவர்கள் சிறப்பாகக் கற்கவும், கருத்துப் பரிமாறவும் முடியும்.

இணையம், தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் தற்போது ஆசிரியர்களும் திறம்பெற்று விளங்குகின்றனர்.

இணையத்தில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் இயல்பான முறையில் சிறப்பாகக் கற்பிக்க முடியும்.

மாணவர்களின் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய மொழித் திறன்கள் மேம்படும்.

நாடுகளுக்கு இடையே உள்ள இடைவெளி குறைந்து தொடர்புகள் அதிகரிப்பதால் எதிர்காலத் தொழில்நுட்பம் இன்னும் பல மாற்றங்களைத் தொடர்ச்சியாகச் சந்திக்கும்.

எதிர்காலத்தில் தமிழ் பேசும் இளைஞர்கள் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தை தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவர்.

அவர்கள் புதிதாகவும், விரைவாகவும் தகவல்களைப் பெறுவர்.

ஆகவே, தொடர்ச்சியாக புத்தாக்கமும், பயன்முனைப்பும் மிகுந்த வழிகளில் தமிழைக் கற்பித்துக் கற்றலை மேம்படுத்த வேண்டும்.

மாநாட்டில் பங்கேற்றுள்ளோர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எவ்வாறு தமிழை உயிரோட்ட மிக்க மொழியாக தமிழர்களுக்கு வழங்க முடியும் என்ற கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

இணைய மாநாட்டில் விவாதிக்கப்படும் உணர்ச்சிப்பூர்வமான கருத்துக்கள் தமிழ் வளர்ச்சியில் திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டும்.

மாநாட்டுக்குப் பிறகு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்த முன்முடிவுகளை எடுக்க வேண்டும் என்று தமிழ் இணைய மாநாட்டின் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் கூறினார்.

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தமிழ் மென்பொருள் குறுந்தகட்டை அத் துறை அமைச்சர் ஆ.இராசா வெளியிட சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் பெற்றுக் கொண்டார்.

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, பென்சில்வேனியா பல்கலைக்கழக பேராசிரியர் வாசு அரங்கநாதன் உள்ளிட்டோர் பேசினர்.

செம்மொழிகளில் வாழும் மொழியாக இருப்பது தமிழ் மட்டுமே:- ஆய்வரங்கத்தில் தமிழுக்கு புகழாரம்

"கணினித் தமிழ் வளர்ச்சி நிதியாக, 70 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்க வேண்டும்,'' என்று கான்பூர் ஐ.ஐ.டி., தலைவர் ஆனந்தகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க துவக்கவிழா, கொடிசியா வளாகத்திலுள்ள தொல்காப்பியர் அரங்கத்தில் நடந்தது. விழாவிற்கு இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் சிவத்தம்பி தலைமை வகித்தார். விழாவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

கிரிகோரி ஜேம்ஸ்:-

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்; தற்போது ஹாங்காங்கில் பணியாற்றி வருகிறார். அகராதி ஆய்வில் தலை சிறந்தவர்.

அவரது பேச்சு:-

சில காலத்துக்கு முன், பல்கலைக்கழகத்திற்குச் சென்று தமிழ் நூல்களைத் தேடிச் சென்றேன். அங்கிருந்த பணியாளர், அதற்கு முன்பு அங்கு வந்தது உண்டா என்று கேட்டார். நான் மாணவனாக இருந்தபோது, வந்ததாகக் கூறினேன். அப்போது அவர், அந்நூலகத்தில் எனது 20 வயதில் கொடுத்த விண்ணப்பத்தைத் தேடிக் கொடுத்தார். நான் வியந்து போய், "நாற்பது ஆண்டுகளுக்கு முன் கொடுத்ததை எப்படி பத்திரமாக வைத்திருக்கிறீர்கள்" என்று கேட்டேன். அதற்கு அவர், பழமையான தமிழ் மொழிக்கு 40 ஆண்டுகள் என்பது ஒரு காலமா என்று கேட்டார். அந்த அளவுக்கு தொன்மை வாய்ந்த மொழி, தமிழ் மொழி. மொழி என்பது ஆன்மா பயணத்தின் பாதை. தமிழைக் காக்கவும், தமிழை வளர்க்கவும் புதிய துணிச்சலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஓராயிரம், ஈராயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட மொழியை, மேலும் பாதுகாக்க, இந்த ஆய்வரங்கத்தின் கருத்துக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

உல்ரிக் நிக்லாஸ்:-

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இவர், அங்குள்ள தமிழர் ஒருவரை மணந்து, தமிழை முறையாகப் பயின்று, அங்குள்ள கலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வருகிறார்.

அவரது பேச்சு:-

இந்த மாநாட்டில் பேச வாய்ப்புக் கிடைத்ததை பெருமையாகக் கருதுகிறேன். மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நீண்ட காலத்துக்குப் பின், தொன்மை வாய்ந்த தமிழ்மொழிக்கு கருணாநிதியின் முயற்சியால் செம்மொழித் தகுதி கிடைத்து இருக்கிறது. தமிழ்த்தாய்க்கு மேலும் ஒரு பெருமை கிடைத்துள்ளது. ஜெர்மனுக்கும், தமிழ்நாட்டுக்கும் நீண்ட நெடிய தொடர்பு உள்ளது. 17வது நூற்றாண்டிலேயே ஜெர்மனியைச்சேர்ந்த அறிஞர், தரங்கம்பாடிக்கு வந்து தமிழ் மொழி பயின்று, தமிழ் மொழியில் நூல்களை எழுதியுள்ளார். அதிலிருந்து, 300 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மொழி அங்கு மதிக்கப்பட்டு வருகிறது. கலோன் பல்கலைக்கழகத்தின் 1943லிருந்து தமிழ்த்துறை செம்மையாக செயல் படுகிறது. தமிழில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப்படிப்பு வரை அங்கே படிக்கும் வசதியுள்ளது. தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள தமிழ் நூலகங்களில் பெரிய நூலகம் அங்குள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் அங்குள்ளன. ஜெர்மனியில் தமிழ்த் தாய்க்கு கோயில் கட்ட முயற்சி எடுத்து வருகிறோம். எட்டாவது தமிழ் இணைய தள மாநாட்டை நாங்கள் நடத்தினோம். தற்போது செம்மொழி மாநாட்டுடன் இணைந்து 9வது இணைய தள மாநாடு நடத்துவது பெருமகிழ்ச்சி அளிப்பதாகவுள்ளது. தமிழ்மொழி, பழம் பெருமை வாய்ந்த மொழி என்பதோடு, நவீன கணினி யுகத்துக்கு ஏற்ற மொழியாகவும் உள்ளது. எனது தாய் வீடு ஜெர்மனி என்றாலும், புகுந்த வீடு இந்த தமிழ்நாடுதான். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் மருமகள் நான். தமிழ்த்தாயின் வளர்ப்பு மகளாகவே நான் வாழ்கிறேன்.

ஆனந்தகிருஷ்ணன், தலைவர், ஐ.ஐ.டி.,கான்பூர்:-

தமிழ்மொழி வரலாற்றில் இலக்கியமும், இணையமும் சேரும் முதல் நிகழ்வு இங்கு நடக்கிறது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் தமிழின் பயன்பாட்டை அதிகப்படுத்த, சீரிய முயற்சியாக இந்த இணைய தள மாநாடு நடத்தப்படுகிறது. 1997ல் கணினித்தமிழ் குறித்து பல்வேறு விவாதங்கள் கிளம்பியபோது, சிங்கப்பூரைச் சேர்ந்த கோவிந்தசாமி, முதன் முதலாக அங்கு இணைய தள மாநாட்டை நிகழ்த்தினார். தமிழ் இணையதளம், பல மைல்களைத் தாண்டி, சில மைல்களை தவற விட்டுள்ளது. இதை உணர்ந்த இளைஞர்கள், புதிய முயற்சிகளை எடுத்துள்ளனர். தமிழ் இணைய மாநாட்டில் 15 தலைப்புகளில் கணினித் தமிழ் பற்றி ஆய்வு நடக்கிறது. இதில் தரப்படும் ஆய்வுக் கட்டுரைகளின் மீது விவாதம் நடந்து, அவை செயல்பாடுகளாக மாற வேண்டும். மாநாட்டுக்குப்பின், இந்த தீவிரம் மங்கி விடக்கூடாது. கணினி மொழியியல் மையத்தை சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஏற்படுத்த வேண்டும், வடிவமைப்பு, எழுத்து வடிவங்கள் குறித்த ஆய்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொள்ள வேண்டும். 7 விதமான ஆராய்ச்சிகளுக்கு தலா 10 கோடி ரூபாய் வீதம் 70 கோடி ரூபாய் நிதியை கணினித் தமிழ் வளர்ச்சி நிதியாக, பல்கலைக்கழகங்களுக்குப் பிரித்து வழங்க வேண்டும்.

வா.செ.குழந்தைசாமி, துணைத்தலைவர், உலகத் தமிழாய்வு நிறுவனம்:-

சிந்து வெளி நாகரிகம், சீன நாகரிகம், மெசபடோமியா நாகரிகம் உள்ளிட்ட உலகின் பழமையான 6 நாகரிகங்களில், 4 நாகரிகங்கள் அடையாளம் தெரியாமல் மறைந்து விட்டன. சிந்துவெளி நாகரிகம், சீன நாகரிகம் மட்டுமே உயிர்ப்புடன் உள்ளன. இந்த நாகரிகத்தை அடித்தளமாகக்கொண்ட மொழிகளில், சீன மொழியும், இந்திய மொழிகளில் வடமொழியும், தமிழ் மொழியும்தான் அழியாமல் உள்ளன. அந்த மொழி, நம் தாய் மொழி என்பதால் நாம் ஓர் அங்குலம் உயர்ந்திருக்கிறோம். இந்த பெருமையை உலகிற்கு எடுத்துச் சொல்லவேண்டியது முக்கியம். ஆரிய நாகரிகத்துக்கு அடிப்படை சமஸ்கிருதம்; திராவிட நாகரிகத்தின் அடையாளம் தமிழ் மொழி. ஆனால், இந்திய நாகரிகம், தத்துவத்துக்கு அடிப்படையாக தமிழ் மட்டுமே விளங்குகிறது என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டும். துரதிருஷ்டவசமாக, இந்தியாவின் தொன்மை வாய்ந்த இரு மொழிகளுக்குள் 2,000 ஆண்டுகளாக போட்டி இருந்து வருகிறது. அது இப்போது பகைமையாக மாறும் சூழல் உள்ளது. உண்மையில், இந்த இரு மொழிகளும், இந்திய நாகரிகத்தின் தூண்கள். அதற்கு மாறாக, தமிழின் தொன்மை குறித்து, சில கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.

தமிழ் இலக்கிய நூல்கள், பாண்டிய மன்னர்கள் காலத்தில், 9வது நூற்றாண்டில் கற்பனையாக எழுதியவை என்று ஹெர்மன் டிக்கன் எழுதியுள்ளார். ஷெரிலேக் என்ற அறிஞர், இந்திய மொழிகள் அனைத்தும் வட்டார மொழிகள் என்று கூறுகிறார். ஆனால், தமிழ் பற்றி தனியாக அவர் எதுவும் குறிப்பிடவில்லை. வடமொழி ஆதரவாளர்கள் இயக்கம், வெளிநாடுகளில் புதிய கருத்தைப் பரப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது கருத்தில் கொள்ளப்பட வேண்டியது என்று தமிழின் தொன்மைக்கு ஆதரவாக வாதிடும் மொழி வல்லுனர் ஜார்ஜ் ஹார்ட் கூறுகிறார். சங்க கால இலக்கியங்களின் தொன்மையை நிலை நாட்ட வேண்டிய கட்டாயம் வந்துள்ளது.

அன்பழகன், நிதியமைச்சர், தமிழக அரசு:-

முதல்வர் பணி, அரசியல் பணி என பல்வேறு பணிப்பளுவுக்கு இடையில் முதல்வர் கருணாநிதி இலக்கியப் பணி ஆற்றுவதை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பாராட்டியுள்ளார். தமிழால் கருணாநிதி பெருமை பெற்றிருக்கிறார்; அவரால் தமிழ் செம்மொழியாக பெருமை பெற்றுள்ளது. இந்திய மொழிகளில் உள்ள ஒரு வட்டார மொழிகளில் தமிழும் ஒன்று என்று எல்லோரும் கருதுகிற நிலை இருந்தது. பரிதிமாற்கலைஞர் துவங்கி, இன்றைய கலைஞர் வரை நடத்திய போராட்டத்துக்கு, வெற்றி கிடைத்து செம்மொழியாக தமிழுக்கு தகுதி கிடைத்திருக்கிறது. உயர்ந்த கருத்துக்களின் உறைவிடமாக, ஞானத்தின் மொழியாக தமிழ் மொழி திகழ்கிறது. நாலடியார், திருக்குறள் போன்ற இலக்கியங்கள், வேறு எந்த மொழியிலும் இல்லை. இயல், இசை என எல்லாவற்றிலும் செறிவு பெற்ற மொழியாக இருப்பதோடு, இன்னும் வாழுகிற மொழியாகவும் உள்ளது. என்றைக்கோ அழிந்த மொழிகளுக்குதான் செவ்வியல் மொழித் தகுதியை வழங்க முடியும் என்ற ஒரு கருத்து இருந்ததால்தான், தமிழ் புறக்கணிக்கப்பட்டது. ஆனால், இன்னும் மக்களால் பேசப்படுகிற, நேசிக்கப்படுகிற மொழிக்கு செம்மொழித் தகுதி கிடைத்திருக்கிறது என்றால், அது தமிழுக்கு மட்டுமே. இவ்வாறு தமிழறிஞர்கள் பேசினர்.

விழாவில் பங்கேற்ற தமிழறிஞர்களுக்கு ஆய்வரங்க அமைப்புக்குழு செயலர் கனிமொழி பொன்னாடை மற்றும் நூல்களை வழங்கினர். ஆய்வரங்க சிறப்பு மலரை நிதியமைச்சர் அன்பழகன் வெளியிட, முதல்வர் கருணாநிதி பெற்றுக் கொண்டார். ஆய்வரங்க பொருண்மைகளை முதல்வர் வெளியிட, சிவத்தம்பி பெற்றுக் கொண்டார். விழாவில் பொன் கோதண்டராமன் (பொற்கோ) வரவேற்றார்; அவ்வை நடராசன் நன்றி கூறினார். மொரிஷியஸ், மலேசியா வாழ் தமிழர்களின் சார்பில், முதல்வருக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழுக்கு நிகர் தமிழே:- செக் குடியரசு பேராசிரியர் பேட்டி

தமிழுக்கு நிகர் தமிழ் தான். தமிழுக்கு இணையாக எந்த ஒரு மொழியாலும் போட்டிபோட முடியாது என்று செக் குடியரசு பேராசிரியர் ஐரோஸ்லாவ் வாசெக் கூறினார்.

பேட்டி:-

செக் குடியரசின் தலைநகரான பிராக் பகுதியில் வசிக்கிறேன். 75 வயதை கடந்தவன். ஆனால் 30 வயதிலிருந்தே தமிழ் மொழி மீது ஈடுபாடு அதிகம். தமிழில் ஏராளமான ஆராய்ச்சி மேற்கொண்டு உலகம் முழுக்க ஆய்வுக்கட்டுரை சமர்பித்துள்ளேன். என்னுடைய பல மொழி ஆராய்ச்சியில் முக்கிய இடம் பிடித்தது தமிழ். ஏனென்றால் தமிழ் தனித்துவமான மொழி. தமிழுக்கு நிகர் தமிழ் தான். தமிழுக்கு இணையாக எந்த ஒரு மொழியாலும் போட்டிபோட முடியாது. உலகின் முதன்மையான தொண்மையான மொழி தமிழ். திராவிட மொழியான தமிழுக்கு மற்ற மொழிகளோடு நெருங்கிய தொடர்புண்டு. ஏனென்றால் தமிழிலிருந்து ஏராளாமான மொழிகள் பிரிந்து சென்றுள்ளது.

தமிழ் மொழிக்கும் மங்கோலிய மொழிக்கும் நிறைய தொடர்பு உண்டு.

மங்கோலிய மொழியில் கால் என்பதற்கு கோல் என்று கூறுவர். தமிழ் மொழியில் பேசுவதற்குள் மங்கோலிய மொழிக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. ஆனால் சில வார்த்தைகளில் மட்டும் வித்தியாசங்கள் உள்ளது. அதனால் தமிழில் இருந்து பிரிந்து சென்ற மொழியாகவே மங்கோலிய மொழியை என்னுடைய ஆய்வில் குறிப்பிட்டுள்ளேன்.

தமிழில் அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து போன்ற சங்க கால இலக்கியங்களை கரைத்துக்குடித்து விட்டேன். அதில் எந்த இடத்தில் எந்த விஷயத்தை கேட்டாலும் என்னால் விளக்கமளிக்க முடியும்.

திராவிட மொழியிலிருந்து பிரிந்து சென்ற மொழிகள் எத்தனை அந்த மொழியின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து நான் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறேன்.

தமிழ் ஆய்வரங்கத்தில் திராவிடமொழிகளுக்கும் "அல்தாய்" மொழிக்கும் உள்ள உறவு குறித்து பேசுகிறேன்.

தற்போது சமஸ்கிருதத்தை முழுமையாக கற்றுவருகிறேன்.

முழுமையாக கற்ற பின் தமிழிற்கும், சமஸ்கிருதத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்து பணியாற்றத்துவங்கியுள்ளேன்.

இவ்வாறு பேராசிரியர் ஜரோஸ்லாவ் வாசெக் கூறினார்.

தமிழுக்கும், கொரியா நாட்டு மக்கள் பேசும் "ஹங்குல்' மொழிக்கும் தொடர்பு உண்டு - தென்கொரிய விஞ்ஞானி நாராயணன் கண்ணன்

செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கத்தில் பங்கேற்க கோவை வந்துள்ள, தென்கொரியாவைச் சேர்ந்த எண்ணெய் ஆய்வு திட்ட விஞ்ஞானி நாராயணன் கண்ணன் "தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி: எனது சொந்த ஊர் மதுரை, திருப்புவனம். ஏழு ஆண்டுகளுக்கு முன் தென்கொரியா சென்று, அங்கு எண்ணெய் ஆய்வுத் திட்ட விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறேன். கடுமையான பணி நெருக்கடிக்கு மத்தியிலும், தமிழின் மீதான தீராத காதல் கொண்டிருக்கிறேன். தென்கொரியாவில் வசிக்கும் தமிழர்களை ஒருங்கிணைத்து,"தமிழ் மரபு அறக்கட்டளை' என்ற அமைப்பை நடத்தி வருகிறேன். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி வாழும் தமிழர்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறோம். "தமிழில் மின் இலக்க வடிவ முறை (டிஜிட்டல்)' குறித்த ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க, தமிழ் மாநாட்டுக்கு வந்துள்ளேன். உலகத்தமிழர் ஒன்றிணையும் இந்த மாநாட்டில் பங்கேற்பதை மிகப்பெருமையாக கருதுகிறேன். உலகம் போற்றும் தமிழ் இலக்கியங்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகளிலுள்ள அனைத்து தகவல்களையும் இணையதளத்துக்கு மாற்ற வேண்டும், என்பது எனது விருப்பம். தென்கொரிய மக்களின் "ஹங்குல்' மொழிக்கும், தமிழுக்கும் எழுத்து வடிவ தொடர்பு உண்டு.

ஆரம்ப காலத்திலிருந்து சீன மொழி பேசி வந்த கொரிய மக்கள், 16ம் நூற்றாண்டு முதல் "ஹங்குல்' எழுத்துவடிவ மொழியை தாய்மொழியாக ஏற்றனர். அதன்பின், கொரிய மக்களின் பொருளாதார முன்னேற்றம் வேகமெடுத்தது; தற்போது, கொரிய மக்களில் 99 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்று திகழ்கின்றனர். இதன் காரணமாக, உலகப் பொருளாதார வளர்ச்சியில் கொரியா, 19வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இவற்றுக்கு அடிப்படையாக அமைந்ததே, எழுத்து சீர்திருத்தம் தான். "ஹங்குல்' எழுத்து முறை வந்த பிறகே, அந்நாட்டினர் சமூக, பொருளாதார ரீதியாக முன்னேறியுள்ளனர். மொழியை முன்னிறுத்தியே எந்த ஒரு நாடும் முன்னேறும் என்பதற்கு, கொரியா சாட்சி. எனவே, மொழிப்பற்றை ஒவ்வொரு தமிழரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, நாராயணன் கண்ணன் தெரிவித்தார்

0
Your rating: None