navannakana's படம்

 

செம்மொழி மாநாடு சென்று பேரணி பார்க்கமுடியவில்லை, நண்பர் பிரசன்னா ராமசாயின்
நாடகம் பார்க்கமுடியவில்லை, ஒரு கச்சேரியாவது கேட்க வேண்டுமென்ற ஆசை
நிறைவேறவில்லை, ஈழ (சுவிஸ்) நண்பர் சதீஷ் அவர்கள் பந்தலில் பேசிய பேச்சைக்
கேட்கமுடியவில்லை! கொடீசியா வளாகத்தைத் தவிர வேறொன்றும் காணாத நாங்கள் இறுதி
நாளிலாவது மாநாட்டு கணினிக் கண்காட்சி மற்றும் அருங்காட்சியகத்தைப் பார்த்துவிட
வேண்டுமென்று ஆவலுற்றோம். வழக்கம் போல், ‘கடலில் கரைத்த பெருங்காயம்’
நினைவிற்கு வந்தது. உங்க ஊரு சனமா? எங்க ஊரு சனமா? எங்கிருந்து இவ்வளவு மக்கள்
வந்தனர்? வரிசையில் நின்றால் வேங்கடேசனைக் கூடக் கண்டுவிடலாம், விழாக்
கண்காட்சியைக் காணமுடியாது என்று சொல்லும் அளவிற்கு மக்கள் வெள்ளம். இதுவே
மதுரையாக இருந்திருந்தால் ஒரே கூச்சலும், குழப்புமுமாக இருந்திருக்கும். கோவை
மக்கள் பொறுமையுடன் காத்திருந்தனர். குழந்தைகள் வேலி தாண்டி உள் வளையத்துள்
விளையாண்டு கொண்டு இருந்தன (பின்ன அலுப்புத்தட்டாதா என்ன?). எப்படிப்
போகலாமென்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது கண்ணில் பட்டார் திரு.ஆனந்தன்.
அவர் கணினிக் கண்காட்சி ஒருங்கமைப்பாளர்களுள் ஒருவர். பேசிப்பேசி தொண்டை வரண்டு
போய் வந்து சேர்ந்தார். எங்கள் குழு அவரைப் பிடித்துக் கொண்டது! எப்படியாவது
காட்சியகங்களைக் காட்டுமாறு! அவரால் உறுதியளிக்க முடியவில்லை, ஏனெனில் ஏகப்பட்ட
பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி உள்நுழைய வேண்டும். ஏதாவதொரு இடத்தில் சிக்கல்
பட்டாலும் நடுவில் மாட்டிக்கொள்ளும் அபாயம். ஆயினும் பன்னாட்டுக் குழுவாக
நாங்கள் நின்றதால் (அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், கொரியா மற்றும்..) ‘சரி,
புறப்படுங்கள்’ என்று சொல்லிவிட்டார். உடனே முடிவெடுத்ததால் சுபா போன்ற
நண்பர்களை அழைத்துச் செல்ல முடியவில்லை. உடனே கிளம்பினோம்.

உள்வட்டத்துள் நுழைந்து முதலில் கணினிக் காட்சியகத்திற்குள் புகுந்தோம்.
பிரம்மித்துவிட்டோம்! அவ்வளவு கூட்டம், அவ்வளவு ஸ்டால்கள். ஐடி மேஜிக் என்று
சொல்லும் வண்ணம் நூற்றுக்கணக்கான ஸ்டால்கள். மென்பொருள் விற்பனை, புதிய
கண்டுபிடிப்புகள், கல்விச் சாதனங்கள் என்று ஏகப்பட்ட விஷயங்கள். உள்ளே
நுழைந்தவுடனேயே கோயில் வரிசையில் நின்றால் சுண்டல் கிடைப்பது போல மென்பொருள்
தகடுகள் (சிடி) இலவசமாக வழங்கப்பட்டன. ஏதோ 22ம் நூற்றாண்டு தொழில்நுட்பம் போல்

பின்னால் இரு அமெரிக்கப் பேராளர்கள், சிங்கப்பூர் அருண் மகிழ்நன், முன் வரிசை
என் பெண், நான், முத்து (அஞ்சல்)

ஒரு ஸ்டாலில் அறிவியல் எப்படி சொல்லிக் கொடுப்பது என்றொரு காட்சி.
மருத்துவத்தில் மனித உடலமைப்பு (human anatomy) பாடம். சாக்பீஸ், போர்டு என்று
எதுவுமில்லாமல் இப்போது சி.என்.என் வானிலை அறிக்கை காட்டுவது போல் எல்லாம்
செயலித்திறன் (software manipulation)! பாருங்கள்! எங்கள் கண்களில்
காணும் ஆச்சர்யத்தை. இப்படி எத்தனையோ! ஒரு ஸ்டாலில் பேப்பரில் எழுதுவது
அப்படியே மின்னாக்கம் பெற்று JPG கோப்பாகிறது. இன்னொரு ஸ்டாலில் திண்டுக்கல்
ரேஷன் கடையில் சாமான் ஒழுங்காக விநியோகிக்கப்படுகிறதா? என்று சென்னையில் CGV TV
கொண்டு கண்காணிக்கும் அதிசயம். கொரியாவில் இன்று நான் காணும் செய்மதி
கண்காணிப்பில் பேருந்து நகர்வு எனும் தொழில் நுட்பத்தை பல்லவன் போக்குவரத்தில்
பயன்படுத்தும் விதம்...இப்படி! ஒரே அதிசய உலகாக இருந்தது. இதில் எனக்கு தனி
ஆர்வமுண்டு ஏனெனில் நான் ஆய்வாளனாக இருந்த போது மதுரைப் பல்கலைக் கழகத்தின்
அறிவியல் காட்சியகத்தை அமைக்கும் பொறுப்பு எனக்குக் கிடைத்தது. பொதுவாகவே
எனக்கு popularizing science பிடிக்கும். திருச்சி வானொலி நிலையத்திற்காக பல
நிகழ்ச்சிகள் தயாரித்துக் கொடுத்திருக்கிறேன். எனவே இக்கண்காட்சி என்னை
மிதப்பில் போட்டது. சுவரில் சித்திரம் வரையாமல் கணினி கலைச் சொற்களைப் பதித்து
இருந்தனர். போகும் போதும், வரும் போது நாலு புதிய சொல் எல்லோரும் கற்றனர்.
கல்லூரி, பள்ளி மாணவர்களின் கூட்டம் அங்கிருந்ததில் வியப்பில்லை.

ஒரு வழியாக முடித்துக் கொண்டு பிரியா விடை பெற்று - ஏனெனில் நண்பர்கள் ஆனந்தன்,
இளங்கோ, ஆண்டோ பீட்டர் இவர்கள் ஸ்டால்கள் அங்கிருந்தன. தினமலர் ஸ்டாலில்
முதல்வரும், துணைமுதல்வரும் என்று மட்டுமில்லை நாங்கள் சென்றதையும் படம்
பிடித்துப் போட்டனர். தினமலர் சுடச்சுட இலவசமாக கொடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது!


அருங்காட்சியகம்

மெல்ல அடுத்த கட்டிடமான அருங்காட்சியகம் போனோம். இவ்வளவு கூட்டத்தை வெட்டி,
ஒட்டி நகர்கிறோம், யாராவது சவுண்டைக் கொடுத்தால் கேவலமாகிவிடும். குற்ற
உணர்ச்சி வேறு (நான் வரிசையில் நின்றிருந்தால் சவுண்டைக் கொடுத்திருப்பேன்!
மதுரையாச்சே! ஆனால் கோவை எங்களை மன்னித்து வழிவிட்டது). எவ்வளவு அருமையான
காட்சியகம். கற்காலம் தொடங்கி சங்ககாலம், மத்திய காலமென்று காட்சிகள் கண்முன்
விரிந்தன. முதுமக்கள் தாழி, பண்டைய வளையல்கள், சிந்து சமவெளி பொருட்களின் நகல்,
பாண்டிய, பல்லவ, ரோமானிய காசுகள், தமிழி (பிராமி) கல்வெட்டு நகல்கள், பஞ்சமுக
வாத்தியம்...அட! நடுவில் நடுநாயகமாக சோழர் காலத்து சிவ-பார்வதி படிமங்கள்.
பார்த்த கண்ணை

ரிஷபத்தில் கையூன்றுவது போல் நிற்கும் அழகு

எடுக்கமுடியாத சிற்பம். கொள்ளை அழகு போங்கள்! அம்பாளின் இடுப்பைக் கவனியுங்கள்.
இப்போ நம்ம பெண்கள் அணியும் லோ ஹிப் ஸ்டைலை ஆரம்பித்து வைத்தவர் பார்வதி தேவி
என்று தெரிகிறது!!

வள்ளுவர் இல்லாமலா? ஆங்கிலேயர் காலத்தில் வள்ளுவருக்கு எடுக்கப்பட சிலை.
திருக்குறள் முழுவதையும் கொண்டுள்ள பட்டுச்சேலை! என்று ஒரே அசத்தல்!

பட்டுச் சேலையில் வள்ளுவர்    

பட்டுச் சேலையில் திருக்குறள்

காட்சியகம் நீண்டு கொண்டே போனது! எப்படி செம்மொழி மாநாட்டின் துவக்க உரையை
விட்டோமோ அதேபோல் இப்போது முடிவுரையையும் கேட்காமல் விட்டோம். ஒன்றிருந்தால்
ஒன்றில்லை! சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட பிரம்மாண்டமான செப்புத்தகடுகளை
காட்சியில் வைத்திருந்தனர். அவை சொல்லும் புதிய சேதிகளை பத்திரிக்கைகளெல்லாம்
வெளியிட்டு இருந்தன (சோழ அரச பரம்பரைச்சேதி).


செப்பேடு                  


அருங்காட்சியகத்திலிருந்து வெளி உலகு!

மனமில்லாமல் வெளியே வர வேண்டி இருந்தது, ஏனெனில் எங்களுக்காகக் காத்திருக்கும்
பேருந்து எங்களை விட்டுச் சென்றுவிட வாய்ப்புண்டு. அவசர அவசரமாக வரும் போது
சூரியன் அஸ்தனமாகிக் கொண்டிருந்தான். ஜனங்களின் ஆர்வம் குறைவதாகத் தெரியவில்லை.
ஜே! ஜே! என்று இருந்தது. இந்த அருங்காட்சியகம் நிலைத்த ஒரு கண்காட்சியாக
தமிழகத்தில் நிலை பெற வேண்டும். தெரிந்து கொள்ள அவ்வளவு உள்ளது!

 

எல்லா அனுபவங்களையும் எழுதிவிட முடிவதில்லை. சிலருக்குப் பிடிக்கும் சிலருக்கு
அலுக்கும். ஆயினும் ஊருக்குப் போய் வந்த உறவினர்கள் சொல்லும் கதைகளைக்
கேட்பதில் எனக்கு என்றும் ஆர்வமுண்டு. என் வளர்ச்சியில் இந்த ஆர்வம் ஒரு பங்கு
வகிக்கிறது. மனித சமூகத்தின் வளர்ச்சியே இத்தகையக Feedback mechanism கொண்டு
வளர்ந்ததுதான். கலஹாரி பாலைவனத்தில் கொம்பு மானை எப்படி வேட்டையாடுவது என்று
மூன்றாம் தலைமுறை சிறார்களுக்கு ஒரு கிழவன் நடித்துக்காட்டும் காட்சி என்
நினைவில் வந்து போகிறது. இந்த feedback இல்லையெனில் இன்று கல்வி நிருவனங்கள்
எனும் ஸ்தாபனமே இல்லை என்று சொல்லலாம்.

இம்மாநாடு குறையின்றி நடந்த மாநாடு என்று சொல்லலாமா? நிச்சயமாக அப்படிச் சொல்ல
முடியாது. ஏகப்பட்ட குறைகளுண்டு. அவற்றுள் சிலவற்றை இங்கு
சுட்டிக்காட்டுகிறேன். இச்சுட்டுதல் தவறுகளைத் திருத்திக் கொண்டு மேலும்
சிறப்பான கருத்தரங்களை அமைக்க உதவும் எனும் ஆசையால்தான். உடனே ஞாபகம் வருவது
யார் கேட்டு, யார் திருந்தப் போகிறார்கள் எனும் கேள்விதான்! ஆம்
இம்மாநாட்டிற்கு பொறுப்பு யார் என்று சொல்வது கடினம். ஒரு அரசைக் கண்டனம் நாம்
செய்யும் போது யாரைக்குறித்து கல்லெறிகிறோம்? முதல்வர் என்பவர் ஒரு
குறியீட்டுத் தலைமைதான். செய்வது எல்லாம் அரசாங்கம் எனும் மாபெரும் இயந்திரம்.
அது முகம் தெரியாத பெரிய யானை. அதிக பலம் உள்ளது. ஆனால் மாயாவி. இவரைக்
கேட்டால், அவர் பொறுப்பு என்பார், அவரைக் கேட்டால் வேறொருவர் பொறுப்பென்பார்.
இப்படிப்பட்ட மாயாவிகள் அமைத்த மாயா பஜார்தான் இந்த மாநாடு.


முடமான நிலையிலும் மைக்கேல் கேப்ளானை (வீல்சேரில் இருப்பவர்) இம்மாநாட்டிற்கு
கவர்ந்திழுப்பது எது?

நான் வருடந்தோறும் சர்வதேச மாநாடுகளுக்குப் போய் வருகிறேன், நானே ஒரு சர்வதேச
பயிற்சிப்பட்டறையை வருடா வருடம் நடத்துகிறேன். ஆனால் இதுவரை என் அனுபவத்தில்
நிகழ்ச்சி நிரல் இல்லாமல் கலந்து கொண்ட முதல் மாநாடு இதுதான். அது எவ்வளவு
வெறுப்பேத்தும் என்பது அனுபவித்தவர்களுத்தான் தெரியும்! நான் என்று பேசுகிறேன்
என்பதை ஒரு சிங்கப்பூர் பேராளர் சொல்லித்தான் அறிந்து கொண்டேன்! மூன்றாவது நாள்
மாநாட்டு அலுவலக அறைக்கு போய் நான் கேட்டு, அவர் ஏதேதோ அறைகளுக்குப் போய்
எனக்கொரு நிகழ்ச்சி நிரல் தந்தார். என்னிடம் அதற்கு முன் வந்த நிகழ்ச்சி
நிரல்கள் எல்லாம் பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் பற்றி. அதை வைத்துக் கொண்டு
என்ன செய்ய? எங்களால்தான் போகமுடியாதே? சரி, இப்படி நடந்ததற்கு யார் பொறுப்பு?
தெரியாது!

அயலகப் பேராளர் வரவேற்பு கமிட்டியின் தலைவர் வைரமுத்து அவர்கள். அவர்
ஒருமுறையேனும் கொடீசியா வந்து எங்களுடன் கலந்து கொண்டு குறை நிறைகளை
அறிந்திருக்கலாம். அது அவருக்குமே நல்ல அனுபவமாக இருந்திருக்கும். ஆனால்,
கமிட்டியில் பேர் போட்டுக் கொள்வது வெறும் அந்தஸ்து குறித்தான சமாச்சாரம்.
உண்மையான பொறுப்பல்ல. எங்களை கவனித்துக் கொண்டதெல்லாம் கணபதி வட்டத்துக்
கணக்கர்களும், சில்லுண்டி சேவகர்களும், சென்னையிலிருந்து இதற்கென வந்திருந்த
பல்லவன் பேருந்து சிப்பந்திகளும்தான். நான் முன்பு கூறியபடி பேட்ஜ் இல்லை
என்றவுடன் நாங்கள் மோத வேண்டியது பெரிய அதிகாரிகளிடமில்லை ஒன்றுமறியா கல்லூரி
மாணவர்களிடம்தான். ஏனெனில் அவர்கள்தான் அங்கு தொடர்பு கொள்ளத்தக்க வகையில்
இருந்தனர்.

நிகழ்ச்சிநிரலை ஒரு பி.டி.எஃப் கோப்பாக அனுப்பி வைக்க எவ்வளவு நேரமாகும்?
ஆனால், இம்மாநாடு நடத்துவதற்கு அனுமதி கேட்டு முதல்வர் மத்திய அமைச்சிற்கு
அனுப்பி வைத்த கடித நகல்களை யெல்லாம் எனக்கு அனுப்பி வைத்திருந்தனர்!! பயணப்படி
வாங்க வரும் போது உங்களுக்கு கொடுத்திருக்கும் அழைப்பிதழை இணையுங்கள்
என்றார்கள். எனக்கு வந்த அழைப்பிதழ் ஒலிக்கோப்பு. எங்கும் நீக்கமற நிறைந்து,
இன்று மறக்கப்பட்டுவிட்ட செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலும், முதல் நாள்
நிகழ்வை அப்படியே தமிழிலும், ஆங்கிலத்திலும் வாசித்து கொடுத்திருக்கும் ஒரு
ஒலிக்கோப்பு! இவ்வளவுதான். பின்னால்தான் தெரிந்தது சிலருக்கு அழைப்பிதழ்
வந்திருக்கிறது என்பது! எனக்கு வரவில்லை. தங்கியிருக்கும் இடத்தைப் பொறுத்து
சிலருக்கு காலையில் செய்தித்தாள், அன்றைய நிகழ்ச்சி நிரல் என்று
வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் எங்கள் மார்டின்ஸ் அபார்ட்மெண்டிற்கு அது
கிடையாது. கடைசிவரை அங்குள்ள சிப்பந்திகள் ஒரு குழம்பிய மனோநிலையில்தான் வேலை
செய்தனர். எதற்கு யார் பொறுப்பு என்பது தெளிவில்லாத ஒரு நிலை. நாங்கள்
மாயாபஜாரில் கவுரவர்கள் போல் மயங்கிய நிலையில்தான் நடமாடிக் கொண்டிருந்தோம்.

கருத்தரங்க (கொடீசியா) சிப்பந்திகள் எல்லாம் (சவுண்ட் மேனேஜ்மண்ட் டீம்)
குஜராத்தி ஆட்கள். செம்மொழியான தமிழ் மொழியாம் என்று தொட்டதற்கெல்லாம்
போட்டுவிடும் பையனிடம் தமிழில் பேசினால் புரியவில்லை. முஜே டமில் நஹி மாலும்
ஹை! என்கிறான். அதுதான் இந்தியா!! நான் முன்னெப்போதும் காணாத அளவில் இந்திய
மாநிலங்களுக்குள்ளான மக்கள் குடியேற்றம் இப்போது நடந்துவருவதைக் காணமுடிகிறது.
கோவை ஹோட்டல்களிலெல்லாம் மங்கோலிய முகம் கொண்ட வடகிழக்கு, நேப்பால்
வேலைக்காரர்கள். இல்லை பீஹார் பசங்கள். இது மிக மகிழ்ச்சியான சேதி. ஏனெனில்
சட்டப்படி நமக்கு இந்திய எல்லைக்குள் எங்கும் செல்லும் உரிமையுண்டு. அது நடந்து
கொண்டு இருப்பது கண்டு மகிழ்ச்சி. மேலும் இந்தியாவின் மான்செஸ்டர் என்று ஒரு
காலத்தில் அழைக்கப்பட்ட கோவை தமிழகத்திலேயே செல்வம் மிகுந்த பகுதி. இனிப்பை ஈ
மொய்ப்பது அதிசயமில்லை!

ஐடி என்றால் இந்தியா எனும் அளவிற்கு புகழ் பெற்றுவிட்ட இந்தியக் கருத்தரங்கில்
ஐடி சப்போர்ட் சரியில்லை. விழியக் கோப்புகளை தேதி வாரியாக, நிகழ்ச்சி நிரலில்
உள்ளவாறு அமைக்க என்ன பெரும் செலவா ஆகிவிடும்? அப்படி இன்னும் செய்யவில்லை.
கருத்தரங்கப்பதிவு செய்யும் தளம் கடைசி வரையில் என்னிடம் தகராறு செய்து கொண்டே
இருந்தது. பட ஏற்றம் என்பது முடியவில்லை. கேவலமாக இருந்தது. ரூ.1500 க்கு
கோவையில் ஐடி என்ஜினியர்கள் வேலைக்குக் கிடைக்கிறார்கள். கத்துக்குட்டிக்குக்
கூட தெரியும் எளிய தொழில் நுட்பமிது. ஆனால் அதைச் சரியாகச் செய்ய முடியவில்லை!

இவ்வளவு காபந்து (செக்கூரிடி) தேவையா? உண்மையில் பயமாக இருந்தது! கணபதி எனும்
பகுதி கொடீசியாவிலிருந்து 15 கிமீ தள்ளி இருக்கும் பகுதி. அங்கு யாரோ ஒரு
முக்கிய பிரமுகர் வந்து போகிறார் எனில் இருக்கின்ற சாலைகளையெல்லாம் போலிஸ்
கண்காணிப்பில் விட்டு மனிதர்களை நடக்கவிடமாட்டேன் என்கிறார்கள். எல்லோரும் அந்த
நபர் சாலையைக் கடக்கும் வரை ஸ்தம்பித்து நிற்க வேண்டுமென எதிர்பார்ப்பது, ஏதோ
நாட்சி ரெஜிம்மில் ஹிடலர் வருவதை எதிர்கொண்டு காத்திருக்கும் இரண்டாம்
உலகப்போர் சூழலை ஞாபகப்படுத்தியது. இந்தியா ஒரு குடியரசா? இல்லை சர்வாதிகாரிகள்
நாடா? நமக்கு உண்மையிலே சுதந்திரம் உண்டா? இல்லையா? காவல்துறையிடம் அதிகாரம்
உள்ளது. அந்த அதிகாரத்தை வைத்து பாமரனை மிரட்டுவது என்ன ஜனநாயகம்? இறுதியில்
சாலையைக் கடக்க முடியாமல் ஒரு அதிகாரியிடம் (பெண் அதிகாரி) கொஞ்சம் சாலையைக்
கடக்க அனுமதி தருவீர்களா? எனக்கேட்டு, அவள் ‘ஓடு!’ என ஆணையிட்டவுடன்
எலும்பிற்கு ஓடும் நாய் போல் நாங்கள் தெருவைக் கடக்கும் நிலை. மாநாட்டு
வளாகத்திற்குள் ராஜ மரியாதை, தெருவிற்கு வந்துவிட்டால் நாய் பொழப்பு என்பது மிக
விசித்திரமான விருந்தோம்பல்!!

மாயா பஜாரில் எல்லோரும் யாருக்கோ பயந்து கொண்டு காரியத்தைச் செய்து கொண்டு
இருந்தனர்! யாருக்கும் என்ன பொறுப்பு என்று சரியாகத் தெரியவில்லை. ஒரு குறை
காணும் இடத்தில் யாரிடம் போய் நிவர்த்தி செய்வது என்று தெரியவில்லை. அங்கு மிக
மகிழ்ச்சியாக இருந்தது சுத்தம் செய்யும் சிப்பந்திகள்தான். அவர்களுக்கு
யூனிபார்ம் கொடுத்து, தலையில் கோணலாக ஒரு தொப்பியை வேறு மாட்டிவிட்டு (யாரோட
ஐடியா இது?), கார்பெட் உள்ள தரையை விளக்கமாரு கொண்டு பெருக்க (பிராண்டி) முயன்ற
அந்தப் பெண்கள் உண்மையில் எந்தப் பயமுமின்றி சுதந்திரமாக செயல்பட்டனர்.
அவர்களுக்கு மாயாபஜார் உண்மையிலேயே மகிழ்ச்சி அளித்தது. எத்தனை மனிதர்கள்,
எத்தனை நடவடிக்கைகள், தினம், தினம் மாறும் காட்சிகள், புதிய கேளிக்கைகள்!
இப்படி அவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அதுவும் ஒரு வெற்றியே!

பயணப்படி வாங்க வந்த இடத்தில்தான் ஏகப்பட்ட வெறுப்பு. ஏனெனில் பயணப்படி வாங்க
என்னென்ன தஸ்தாவேஜுகளை கொடுக்க வேண்டுமென்று எங்களில் எவருக்கும் தகவல் இல்லை.
4000 பேருக்கு 5 நாட்களுக்கு பயணப்படி வழங்கி முடிக்க வேண்டும்! வயதான
பெரியவர்களுக்கோ தள்ளாமை தரும் கோபம். அங்கு Infra red camera கொண்டு படமாக்கி
இருந்தால் செஞ்சுடர் பிரகாசமிட்டு நிறைந்து இருப்பதைக் கண்டிருக்க முடியும்!
அவ்வளவு கோபாக்னி!! ஆனால் ஆச்சர்யத்திலும், ஆச்சர்யம், அதிகாரிகள் கொஞ்சம் கூட
அலுத்துக் கொள்ளாமல் புன்னகையுடன் துர்வாச முனிவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக்
கொண்டு இருந்தது தமிழகத்தில் காணக்கிடைக்காத காட்சி. இந்தியன் வங்கிதான்
பணப்பட்டுவாடா பொறுப்பு. நாங்கள் முன்னமே வந்துவிட்டோம். எனவே காத்திருக்கும்
நேரத்தில் ஜாலியாகப் பேசிக்கொண்டு இருந்தார்கள். இதுவே வங்கி அலுவலகமாக
இருந்தால்? என்ன கெடுபிடி இருக்கும்! ஒருவகையில் ஆயிரக்கணக்கான
சிப்பந்திகளுக்கு செம்மொழி மாநாடு ஒரு paid holiday போல் இருந்தது. At least
சிலர் அந்தப் போக்கில் எடுத்துக் கொண்டதால் டென்ஷன் ஆகாமல் எல்லாவற்றையும்
வேடிக்கையாக எடுத்துக் கொண்டு, கூட்டத்தைக் கண்டு மிரளாமல் அனுபவித்துக்
கொண்டிருந்தனர். வெளிநாட்டில் வாழும் எல்லாத் தமிழர்களும் கூட்டத்தைக் கண்டு
மிரண்டு போய் misbehave செய்து கொண்டிருந்தனர்!


இந்திய வங்கியில் பொழுதுபோக்கு - ஸ்வேதா தினமலரில் வந்த சேதியைக் காண்பித்து
ஒரு சிறு உரையாடல்

இப்படி நிறைய சின்னச்சின்ன குறைகள். பல மறந்துக் கூட போய்விட்டன. ஏனெனில், மாயா
பஜார் என்று தெரிந்த பின் அங்கு எதையும் சீரியசாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
எப்படியோ காரியங்கள் நடக்கின்றன. வேளா வேளைக்கு சாப்பாடு, செவிக்குணவு, தங்கும்
இடவசதி இவ்வளவும் கிடைக்கிறது. எங்கும் தமிழ் உணர்வு நிரம்பி வழிகிறது, எந்தப்
புத்தில் எந்த பாம்போ என்னும் படி எத்தனை அறிஞர்கள், மிக எளிமையாக நடமாடிக்
கொண்டிருந்தனர். பேசினால் உடனே விருந்து! ஆச்சர்யம்! அது மாயா பஜார்தான்!

ஆனால் ஒன்று நிச்சயமாகத் தெரிந்தது. இது once in a life time experience
என்பது! இது போல் இன்னொரு மாநாடு இனிமேல் நடத்த முடியுமா? என்று தெரியவில்லை.
இது வெறும் புகழ்ச்சி இல்லை, உண்மை.

கருத்தரங்கு இன்னும் சிறப்பாக நடைபெற வேண்டுமெனில் வெளிநாட்டுப் பேராளர்களையும்
கருத்தரங்கு அமைப்பில் இனியாவது இணைத்துக் கொள்ள வேண்டும். அவர்களது சர்வ தேச
அனுபவம் ஒழுங்கமைவிற்கு உதவும்.

[image: listening.jpg]
கருத்தரங்கப் பேச்சுக்களைக் கூர்ந்து கவனிக்கும் மக்கள்

ஆனால் அடிக்கோடு! அமைப்பாளர்களின் priorities என்ன என்பதும் எங்களின்
priorities என்பவையும் இணையும் என்று தோன்றவில்லை. அதுவரை சுருதி பேதமில்லாத
ஒரு மாநாடு நடைபெற வாய்ப்பில்லை. ஆனால் வேறு வழியுமில்லை. 1000 பேரைக் கொண்டு
இயக்கும் ஒரு ஆர்கெஸ்ட்ரா போல்தான் இம்மாநாடு நடந்தது. எங்கு எது பிச்சுக்கும்
என்று தெரியாது. இந்த பயம் எமக்கு மட்டுமில்லை இதன் சூத்திரதாரிக்கே இருந்தது
என்பது ஒரு சின்னப்படத்தின் மூலம் தெரிய வந்தது. முதல்வர் அவர்கள் தன்
புதல்வியின் கையை முத்தமிட்டு நன்றி சொல்கிறார்! பார்த்த எனக்கு, “ஏதோ பகவான்
புண்ணியத்தில் எல்லாம் நல்ல படியாக நடந்து வருகிறது! நன்றி சொல்வோம்!” என்பது
போல் பட்டது. இந்த மாநாடு ஒரு மாபெரும் கல்யாணம் போல் நடத்தப்பட்டது.
கல்யாணத்தில் ஒரே அமர்களமாக இருக்கும். கூத்து, கொண்டாட்டம், சாப்பாடு, இசை
என்று. ஆனால் யார், எதற்குப் பொறுப்பு என்று தெரியாது. ஆனால் காரியம் அது
பாட்டிற்கு நடந்து கொண்டிருக்கும். இப்படித்தான் கல்யாணத்திற்கு அழைப்பு
வரவில்லை என்று சிலர் சொல்லக்கூடும். அது குறைதான். ஆயினும் இம்மாதிரிக்
கல்யாணங்களில் இது சகஜம் என்பதும் யதார்த்தமே! இக்குறையை நிவர்த்திக்க அவர்கள்
திறந்த முறையில் இணையத்தின் வழியாக கட்டுரைப் பதிவை செய்துவிட்டனர். கணினித்
தொழில் நுட்பம் தெரிந்து (உண்மையில் பதிவு செய்ய பெரிய தொழில்நுட்பம்
அவசியமில்லை) கணினித் தொடர்பு உள்ளவர்கள், ஆர்வமுள்ளவர்கள் எல்லோரும் பதிவு
செய்து வந்திருந்தனர். அதில் எவ்வகைப் பாகுபாடும் (discremination) இல்லை
என்பதே உண்மை.

ஏதோ பகவான் புண்ணியத்திலே எல்லாம் நல்லபடியா நடக்குது!

தமிழ் தாய்க்கு அறுபதாம் கல்யாணம் போலும்! ஒரே அமர்க்களம் போங்கள்!! கல்யாணம்
முடிந்ததும் அவரவர் ஜாகைக்குத் திரும்பி விடுவர். அம்மா, அப்பா நிராதரவாக
தனிமையில் வாழ்வை ஓட்ட வேண்டும்! என்பது போல் ஒரு நிலை தமிழ் மொழிக்கு
வரக்கூடாது. இம்மாநாடு தரும் உற்சாகத்தில் புதியன நிறையக் கற்றுக் கொண்டு,
இம்மாநாடு தந்த தொடர்புகளை நன்முறையில் பயன்படுத்திக் கொண்டு மொழிவளம் பெற ஆவண
செய்ய வேண்டும். அப்படி நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் நான் இவ்வளவு
எழுதுவதும். யானையின் பலமெதிலே? தும்பிக்கையிலே! மனிதனோட பலம் எதிலே?
நம்பிக்கையிலே!


செம்மொழித் திருவிழா! (யார் கல்யாணம் இங்கு?)

வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு!

நிறைவுறுகிறது.

நா.கண்ணன்

 

4
Your rating: None Average: 4 (1 vote)

கருத்துகள்

VISWAM's படம்

அருமை


4

அருமை