vinoth's படம்

கூடங்குள அணுமின் நிலைய எதிர்ப்பும் டாம் 999 எதிர்ப்பும் எதைக்காட்டுகிறது?

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம். மக்களின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை, போராட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவு.

'டாம் 999' என்று ஒரு திரைப்படம், ஏதோ ஒரு அணை உடைவதாக காட்டுகிறது. முல்லைபெரியாறு பிரச்சனை நடப்பில் இருப்பதால் இப்படம் கேரள தமிழக உறவை பாதிக்கும் என்று படத்திற்கு எதிராக போராட்டம். தமிழக அரசு மறுபடியும் ஆதரவு. படத்திற்கு தடை.

ஒரு கற்பனை செய்து பாருங்கள்

ஒரு அணுமின் நிலையத்தில் தீவிரவாதிகளால் விபத்து ஏற்படுகிறது. அணுமின் கதிர்வீச்சால் அப்பகுதியை சுற்றி உள்ள மாநில மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறான ஒரு கதையை அணுமின் நிலையத்தின் ஆபத்தை விளக்கும் நோக்குடன் தமிழ் நாட்டு திரைப்பட இயக்குநர் 'அணு 2012' என்ற பெயரில் ஒரு படம் எடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

தமிழக அரசு, மத்திய அரசு, ஆதரவு எதிர்ப்பு மக்களின் நிலைமை எவ்வாறு இருக்கும்?

கூடங்குள அணுமின் நிலைய எதிர்ப்பு மக்கள் இப்படத்திற்கு மிகுந்த ஆதரவு கொடுப்பார்கள். ஏனென்றால் ஒரு அணுமின் நிலையத்தால் வரும் பாதிப்பை அப்படம் மக்களுக்கு உணர்த்துவதால் கூடங்குள அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு கூடும்.

கூடங்குள அணுமின் நிலைய ஆதரவு மக்கள் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஏனென்றால் இப்படம் மக்களிடம் விழிப்புணர்பு ஏற்படுத்தி விடக்கூடாது என்பது அவர்கள் நோக்கமாக இருக்கும். அவ்வாறு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டால் மக்கள் அணு உலைக்கு எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்து விடுவார்கள். அவர்கள் பக்கம் கூட்டம் குறைந்து விடும்.

மத்திய அரசு 'அணு 2012' என்ற நம் கற்பனை படத்திற்கு தடை விதிக்கும்.
தமிழக அரசு ஆதரவு தெரிவிக்கும்.

டாம் 999 படத்தில் என்ன இருக்கிறது? இது ஒரு ஆங்கில படம். இப்படம் ஏதோ ஒரு டாம் உடைவதாக காட்டுகிறது. இதைச்சுற்றி நடக்கும் கதை தான் படம். இக்கதை ஏற்கெனவே நாவலாக வெளிவந்திருக்கிறது. இப்படத்தை இயக்கிய இயக்குநர் 'சோபன் ராய்' என்பவர் கேரளத்தை சேர்ந்தவர். இதில் தமிழக நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஆவணப்படம் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

படத்தை இயக்கியவர் இப்படத்திற்கும் முல்லைபெரியாறு அணைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுகிறார்.
ஒருவேளை படத்தை தயாரித்து இயக்கியவர்கள் முழுக்க மேல்நாட்டவர்களாக இருந்திருந்தால் படத்தை ஆஹா ஓஹோ என்று பாராட்டிவிட்டு திரைவிமர்சனம் எழத உட்காந்திருப்போம். ஆனால் இயக்கியவர் ஒரு மலையாளி ஆகிவிட்டார்.

இப்படத்தை தமிழகத்தின் எதிரியாக பார்க்கும் அளவிற்கு நிலைமை வந்திருக்கிறது என்றால் இது 'டாம் 999' படத்திற்கான இலவச விளம்பரம். இப்போதே இணையத்தில் படத்திற்கான trailer வெளிவந்த போதே மசுவு கூடிவிட்டது.
தமிழக அரசு தடை விதித்தாலும் படம் இன்று (nov 25) இந்தியாவில் வெளிவந்து விட்டது, கூடிய சீக்கிரமே இணையத்தில் வந்துவிடும். இப்படத்தில் என்ன தான் இருக்கிறது என்பதை பார்ப்பதற்காகவே இப்படத்தை இணையத்தை பயன்படுத்தும் அனைத்து தமிழர்களும் படத்தை எதிர்த்தவர் உட்பட பார்க்கப்போகிறார்கள் என்பது தான் உண்மை. இப்படத்திற்கு எதிர்ப்பு இல்லாமல் இருந்திருந்தால் எத்தனை தமிழர்களுக்கு இப்படத்தின் பெயராவது தெரிந்திருக்கும் என்பது ஆச்சரியமே. ஆனால் இப்போது நிலைமையே வேறு.

இது போன்ற பிரச்சனையான கருத்தை முன் வைத்து திரைப்படம் தயாரிப்பது அது மிக நல்ல ஒரு பிசினஸ். நாமாக அதிக விளம்பரம் செய்து காசை வீணாக்க வேண்டியதில்லை. நம் நாட்டில் உரசினால் தீ பிடிக்கும் பிரச்சனைகளுக்கு பஞ்சமே இல்லை என்பதை மற்ற தயாரிப்பாளர்கள் கவனிக்க வேண்டும்.

நம் கற்பனை திரைப்படம் 'அணு 2012' போல தமிழகத்தின் ஏதாவது ஒரு இயக்குநர் ஒரு திரைப்படம் எடுத்தால் அதில் கூறை கூறவோ எதிர்ப்பு தெரிவிக்கவோ எதுவுமே கிடையாது. ஏனென்றால் இதற்கு முன் எத்தனையோ படங்களில் ஆறு, அணைகள், கடல், கப்பல், விமானம், தீ, வெடிகுண்டு போன்ற பலவற்றால் ஏற்படும் விளைவை நாம் பார்த்து விட்டோம்.

நம் 'அணு 2012' படத்தை வெளியிட்டால் அது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அணு உலைக்கு எதிர்ப்பை கூட்டிவிடும் அது கூடாது என்று மத்திய அரசு நினைப்பதை போல தான், 'டாம் 999' படத்திற்கு எதிர்ப்பு வந்திருப்பதால் அணை உடைந்தால் ஏற்படும் பாதிப்புகளை தமிழக மக்கள் அறியக்கூடாது அவ்வாறு அறிந்தால் புதிய முல்லைபெரியாறு அணைக்கு ஆதரவு கிடைத்துவிடும் என தமிழ கட்சிகள் நினைக்கிறதோ என்று தான் எண்ணத்தோன்றுகிறது.

இப்படத்தை அனைவரும் பார்த்து விட்டால் கேரளத்திற்கும் தமிழகத்திற்கும் உள்ள ஒற்றுமை பாதிக்கப்படும், குலைந்துவிடும் என்று நாம் கூறும் காரணம் வேடிக்கையானது. புதிய அணைக்கு எதிர்ப்பை தெரிவித்து நாம் தான் ஒற்றுமையை குலைக்க அடித்தளம் இட்டிருக்கிறோம் என்பதை நாம் யோசித்தோமா?

கேரள அரசு அணையின் பாதுகாப்பின்மை கருதி நீர்மட்டத்தை குறைத்துவிட்டது. ஏனென்றால் தற்போதைய அணையை இப்படியே வைத்து அதன் கொள்ளளவை கூட்டுவது ஆபத்து என்கிறது. ஏனென்றால் இது நூற்று இருபது வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. பல இடங்களில் நீர் கசிகிறது, இப்பகுதியில் அடிக்கடி நில நடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 வரை பதிவாகிறது. இதனால் புதிய அணை கட்டுவது அவசிய தேவை என்கிறது. நிலநடுக்கத்தை பொய் பரப்புரை என்று தமிழகம் சொல்கிறது, ஆனால் கூடங்குளம் பகுதியில் நிலநடுக்கம் ஏற்படும் என்றும் நம்பவும் செய்கிறது.

ஆனால் புதிய அணை கட்டக்கூடாது இப்போது இருப்பதையே வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறது தமிழக அரசு.இதன் பிண்ணனி என்ன என்றால் அணை அமைந்திருக்கும் இடம் கேரள அரசிற்கும் அணை அதன் பராமரிப்பு தமிழக அரசிற்கும் உடையது. புதிய அனை கட்டினால் அது கேரள அரசின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். அது கூடாது என தமிழக அரசியல் கட்சிகள் நினைக்கிறது. அவ்வாறு கட்டுப்பாடு வந்துவிட்டால் தண்ணீர் கிடைப்பதில் பிரச்சனை வரும் என அரசு கருதுகிறது.

ஆனால் கேரள அரசு முல்லைபெரியாறு அணை பற்றிய பிரச்சனையில், தமிழகத்திற்கு இப்போது கொடுக்கும் நீரின் அளவை விட அதிக அளவு நீர் கொடுக்கவும் இதற்கான ஒப்பந்தத்தை எப்போது வேண்டுமானும் கையெழுத்து இட்டு யாரிடமும் கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறிவிட்டது.

தமிழக அரசு கூடங்குளம் பிரச்சனையில் மக்களின் பாதுகாப்பிற்காக கவலை கொள்வதை போல இவ்வணையில் ஏதும் பிரச்சனை வந்து உடைப்பு ஏற்பட்டால் இதைச்சுற்றி இருக்கும் இடுக்கி, எர்ணாகுளம் உட்பட 5 மாவட்டங்களை சேர்ந்த 30 லட்சம் மக்களின் நிலைமையில் கேரள அரசும் கவலை கொள்கிறது.

நமக்கு நம் உயிர் எவ்வளவு முக்கியமோ அதே போல அவர்களுக்கு அவர்கள் உயிர் முக்கியம்.

கூடங்குள விபத்தும் அணை விபத்தும் ஒன்றா என்று கேட்பது முட்டாள் தனமான கேள்வி. ஏனென்றால் கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டு கதிர் வீச்சு ஏற்பட்டால் இதைச்சுற்றி உள்ள மாவட்டங்கள் மட்டுமல்ல இலங்கையின் பகுதிகளும் பாதிக்கப்படும், குமரியின் பக்கத்தில் இருக்கும் கேரளமும் அடிவாங்கும். இதனாலேயே கேரள மீனவ மக்களும் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். நாம் அவர்களுக்கு செய்யும் கைமாறு?

அதே போல, அணை உடைப்பு ஏற்பட்டால் சுமார் 30 லட்சம் உயிர்கள் பலிகொடுக்கப்படும். இரண்டு விபத்தையும் ஒரே போல கருத முடியாது என்றாலும் 30 லட்சம் உயிர்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல. நாம் எப்படி வெடிகுண்டால் பறிபோன முப்பதற்கும் மேற்பட்ட உயிர்களையும் அவர்கள் குடும்பத்தையும் விட மூன்று உயிர்கள் தான் முக்கியம் என்று தமிழருணர்வுடன் இருக்கிறோமோ அதே போல...

கூடங்குள விஷயத்தில் மத்திய அரசு சொல்வதை போல விபத்து ஏற்பட்டால் அதைத்தடுக்கும் கருவிகள் உள்ளன என்பதை போல அணைக்கு விபத்து ஏற்பட்டால் அதைத்தடுக்க முன்னேற்பாடுகள் எதுவும் கிடையாது, அணையின் சுவர்களில் ஏற்படும் கீறல்களுக்கு ஒட்டு போடுவதை தவிர? அணை கடந்த வெள்ளம் கடந்தது தான்.

நிஜமாகவே மக்களின் உயிர்களில் கவலை கொள்ளும் கட்சியாக இருந்தால், மின்சாரத்தை விட மக்கள் உயிர் தான் முக்கியம் என்று சொல்வதை போல, அணை இருந்தால் தான் விபத்து ஏற்படும், தமிழகத்திற்கு நீர் தேவையில்லை பழைய அணையை இடித்து விடுங்கள், புதிய அணையும் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை அல்லவா எடுத்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசியல் கட்சிகள் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள உயிர்களை துச்சமென மதிப்பதும், அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக உயிர்களுக்கு பாதுகாப்பு கோருகிறோம்.
நமக்கு மத்திய அரசு அணு உலை பாதுகாப்பானது என்று சொல்வதில் நம்பிக்கை இல்லை. அதே சமயம் கேரள அரசு அணை பாதுகாப்பாக இல்லை என்று சொல்வதிலும் நம்பிக்கை இல்லை.
அணுமின் உலை விபத்து ஏற்பட்டுவிடும் என்று நம்பி பயப்படுகிறோம். அதே சமயம் முல்லைபெரியாறு அணை உடையாது என்று நம்புகிறோம்.

இது என்ன மாதிரியான அறிவோ, மனிதாபிமானமோ அல்லது அரசியலோ என்பதை நாம் தான் யோசிக்க வேண்டும். ஏனென்றால் சொந்த விருப்பு வெறுப்புகளை விட்டுவிட்டு நடுநிலையாக சிந்திப்பது தானே நற்சிந்தனையாக இருக்க முடியும்?

இந்த பிரச்சனையில் கேரளாவிலும் தமிழகத்திலும் செல்வாக்குள்ள ஒரே பெயர் கொண்ட கட்சிகள் கூட உட்கார்ந்து பேச மறுக்கிறது. ஏனென்றால் புதிய அணைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் தான் தமிழக மக்களுக்கு ஆதரவாக இருக்க காட்டிக்கொண்டு ஓட்டு வாங்க முடியும் என தமிழ அரசியல் கட்சிகளும், அதே போல புதிய அணைக்கு ஆதரவாக கேரளாவில் பிரச்சாரம் செய்தால் தான் கேரள மக்களின் வாக்குகளை பெற முடியும் என்றும் நினைக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு பிரச்சனையை தீர்ப்பதை விட அதனால் அதிக வாக்குகளை சம்பதிக்க முடியுமா என்று பார்ப்பது ஒன்றும் புதிதல்ல.

எப்படி இருந்தாலும் கட்சிகள் தனக்குள் அடிபிடி வைத்து கொண்டாலும், அணு உலையின் பிரச்சனையிலும், அணை பிரச்சனையிலும் தமிழக கட்சிகள் தமிழகத்திலும், கேரள கட்சிகள் கேரளத்திலும் பெரும்பாலும் ஒன்றுபட்டிருக்கிறது. இது வரவேற்க வேண்டிய விஷயம். இதே போல மக்களின் பிரச்சனைகளில் எப்போதுமே கட்சிகள் ஒன்றுபட்டிருந்தால் தமிழகம் எப்போதோ சொர்க்கமாக மாறியிருக்கும் என்பதில் ஐயமே இல்லை.

தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?

  • அணையும் அணையை சுற்றி உள்ள பகுதிகள் தமிழகத்தின் பொதுப்பணித்துறை வசம் இருப்பதால் தமிழகமே புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். கேரளாவின் பயம் நிஜமாகவே அணை உடைந்துவிடும் என்று இருந்திருந்தால் கேரளா இதற்கு சம்மதித்தாக வேண்டும்.
  • முல்லைப்பெரியாறு அணை கேரளாவில் இருந்தாலும் அதற்கான நீர்வரத்து தமிழகத்தின் சிவகிரி மலையிலிருந்தே ஆரம்பமாகிறது. இந்த நீர் முல்லை ஆறுடன் கலந்து பின்பு பெரியாறுடன் இணைந்து அதிலிருந்து நாம் தண்ணீரை மலையை குடைந்து தமிழகத்திற்கு கொண்டு வருவதை விட சிவகிரி மலையில் இருந்தே தமிழகத்திற்கு தேவையான நீரை தமிழகம் எடுத்துக்கொள்ளும் வழிவகையை ஆராய வேண்டும்.
4.83333
Your rating: None Average: 4.8 (6 votes)

கருத்துகள்

vinoth's படம்

தமிழக பொதுப்பணித்துறை


6

தமிழக பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள ஒரு ஆவணப்படம்

http://player.vimeo.com/video/18283950?autoplay=1


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


rajudranjit's படம்

தமிழக அரசு என்ன


5

தமிழக அரசு என்ன செய்யவேண்டும்? இப்படி சில போராட்டங்கள் அதற்கு வழிவகை செய்யும் என நம்பலாமே, ஆனால் கேரளா வருமானத்தை எதிர் பார்த்தால் எப்படி சாத்தியம்?