தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கு முக்கியமான உணவாக விளங்குகிறது. ஆனாலும் உணர்வு மற்றும் உடல்ரீதியாக பார்த்தால் தாய்க்கும் சேய்க்கும் இடையே நெருக்கமான உறவு ஏற்படவும் தாய்ப்பால் பயன்படுகிறது.
ஆனாலும் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளுக்கு மட்டுமே விரல் சூப்பும் பழக்கம் ஏற்படும் என்று உறுதியாக சொல்ல முடியாது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கும், புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கும் இந்த பழக்கம் உள்ளது. புட்டிப்பாலும் கிட்டத்தட்ட தாயின் மார்பு காம்பு போன்றே இருப்பதால் குழந்தைகளுக்கும் வித்தியாசம் எதுவும் தெரிவதில்லை.
விரல் சூப்பும் பழக்கம் பெரும்பாலும் எல்லா குழந்தைகளுக்கும் உள்ளது. மூன்று வயது வரை இந்த பழக்கத்தை பெரிதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. தாயின் கருவறையில் இருக்கும் போதே இந்தப் பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. இதனால் கவலை அடைய வேண்டிய அவசியமில்லை.
குறிப்பிட்ட வயதில் இந்தப் பழக்கம் மாறிவிடும். நான்கு வயது வரை இந்தப் பழக்கம் நீடித்தால் குழந்தை நல சிறப்பு மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெறுவது நல்லது. குழந்தையின் விரல் சூப்பும் பழக்கத்துக்கும் மன நெருக்கடிக்கும் தொடர்புண்டா? என்பதையும் ஆராய்ந்து பார்க்கவும்.
குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால்தான் என்கிறார்கள், உளவியல் அறிஞர்கள்.
பெற்றோரிடம் தேவையான அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை கிடைக்காதபோது விரல் சூப்பும் பழக்கம் அதிகமாக இருக்கும். பெற்றோர்களிடம் நிரந்தர சண்டை இருந்தாலும் விரல் சூப்பும் பழக்கம் குழந்தைக்கு ஏற்படும்!
தற்போது குழந்தைகளுக்கு கூட மன அழுத்தம் ஏற்படுகிறது. பெரியவர்கள் ஏதாவது ஒரு பழக்கத்தை வடிகாலாக ஏற்படுத்திக் கொள்வார்கள். குழந்தைகளுக்கு இந்த மாதிரியான மன அழுத்தம் ஏற்படும்போது அதற்கு வடிகாலாக விரல் சூப்புகின்றனர். ஆனால் சில குழந்தைகள் பொழுது போகாமலும் விரல் சூப்புவதும் உண்டு. ஓய்வுக்காகவும், சுகமான அனுபவத்திற்காகவும், தூக்கம் நன்றாக வருவதற்காகவும், பசிக்காகவும் குழந்தைகள் விரல் சூப்புகின்றனர்.
ஆனாலும் அன்பு, பாசம் ஆகிய உணர்வுகளைப் பெறாத குழந்தைகளே அதிகமாக விரல் சூப்புகின்றனர். ஐந்து, ஆறு வயதில் இந்த பழக்கம் இருந்தாலும் மன நெருக்கடி மற்றும் அதிக கோபம் வரும். கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி வீசுவார்கள். பெற்றோரிடம் இந்த குழந்தைகள் மோதல் போக்கை கொண்டிருப்பார்கள். இவர்களிடம் அதிகமாக அன்பு செலுத்தி அரவணைத்தால் மட்டுமே விரல் சூப்பும் பழக்கம் மாறும்.
நான்கு வயது முதல் 14 வயது வரை விரல் சூப்பும் குழந்தைளுக்கு உடலில் பல மாற்றங்கள் நிகழும். 4 வயதில் பால் பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் முளைக்கும். அப்போதும் விரல் சூப்பும் குழந்தைகளுக்கு முக அமைப்பில் மாற்றங்கள் ஏற்படும். 4 வயதுக்குப் பிறகு விரல் சூப்பினால் பற்கள் வெளியே நீட்ட ஆரம்பிக்கும். அதேபோல் பற்களுக்கு இடையே இடைவெளி ஏற்படும். அப்போது சக குழந்தைகளை பார்க்கும்போது, ''ஏன் தனக்கு மட்டும் பற்கள் வெளியே நீட்டி அசிங்கமாக இருக்குது''ன்னு நினைத்து அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மை ஏற்படும். விரல் சூப்பும் குழந்தைகளுக்கு பற்கள் அமைப்பு žராக இல்லாததால் பேச்சிலும் தெளிவு இருக்காது.
சில குழந்தைகளுக்கு ஒரு விரல் அல்லது இரண்டு, மூன்று விரல்கள் மற்றும் ஆள்காட்டி விரல், நடுவிரல் என தொடர்ந்து எச்சில் படுவதால் சோர்ந்து சூம்பி காணப்படும். இதனால் அந்த விரல்களில் ரத்த ஓட்டம் இருக்காது. இதனால் விரல் வீங்கி பழுப்பாகிவிடும். அதேபோல், குழந்தைகள் வாயில் சூப்பும் விரல்களும் சுத்தமாக இல்லாவிட்டால் பல்வேறு நோய்கள் வருவதற்கும் காரணமாகிவிடும்.
டி.வி. பார்க்கும்போது விரல் சூப்பும் பழக்கம் அதிகம் என்பதும் உண்மைதான். குழந்தைகளின் கவனம் முழுவதும் டி.வி.க்குள் போய்விடுவதால்... தங்களை அறியாமலேயே அந்த பழக்கத்தைக் கையாளுகின்றனர்.
விரல் சூப்பும் பழக்கத்தை மறந்த குழந்தைகள்கூட டி.வி.யிலோ அல்லது சினிமாவிலோ பயமான... திகிலான காட்சிகளை பார்க்கும்போது மீண்டும் விரல் சூப்பி விடுகின்றனர் என்கிறார்கள். இதனால் குழந்தைகள் டி.வி. பார்க்கும்போது தனியாக பார்க்க விடாமல் பெற்றோர் துணையாக இருப்பது நல்லது. மேலும் குழந்தைகள் டி.வி. பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது?
விரல் சூப்பும் குழந்தையிடம் அந்த பழக்கத்தை மாற்றுவதற்காக பெரிய பிரச்சினைகளை செய்ய வேண்டாம். வயது வந்த குழந்தைகளை, விரல் சூப்பும் பழக்கத்தை விட்டுவிடுமாறு கட்டாயப் படுத்துவதோ அல்லது அவர்களை அடிப்பதோ... உடலில் சூடு போடுவதோ கூடவே கூடாது. 4 வயதுக்கு மேல் அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி அவர்களை திருத்தலாம். அல்லது நிறைய அன்பு செலுத்தி அவர்களாகவே அந்த பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கலாம்.
விரல்களை சும்மா வைத்திருக்கும்போது அதை சூப்பும் பழக்கத்தை மேற்கொள்கின்றனர் குழந்தைகள். ஆதலால் விரல் சூப்பும் குழந்தைகளுக்கு விரல்களுக்கு வேலை கொடுக்கும் விதமாக அவர்களை விளையாட வைக்கலாம்.
எதையாவது எழுதச் சொல்லலாம் அல்லது ஓவியம் வரைய வைக்கலாம். புத்தகங்களை படிக்க வைக்கலாம். இப்படி கை விரல்களுக்கு வேலை கொடுத்தால் விரல் சூப்பும் பழக்கத்தை தன்னாலேயே கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடுவார்கள் குழந்தைகள். சில குழந்தைகள் தூக்கத்திலேயே விரல் சூப்பும்போது, விரல்களை எடுத்து விடுங்கள்.
அதேபோல், தூங்கும்போது அவர்கள் கையில் பொம்மையை கொடுத்தால், அந்த பொம்மையை பிடித்துக் கொள்வதில் கவனம் செலுத்தும்போது விரல் சூப்புவதை மறப்பார்கள். ஆனால் அந்த பொம்மையில் ரோமங்களோ அல்லது பிசிறுகளோ இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விரல் சூப்பும் குழந்தைகளின் விரல்களில் கசப்பு எண்ணையை தடவுவது, பேண்டேஜ் போடுவது என வன்மையான தடுப்பு முறைகள் வேண்டாம்!
குழந்தைகள் விரல் சூப்புவது ஏன் என்பதில் பலவித சந்தேகங்கள் தாய்மார்களுக்கு ஏற்படுகின்றன. இந்த மாதிரி விரல் சூப்புவது சரிதானா என்றும் குழம்புகின்றனர்.
கருத்துகள்
மிகவும் அருமை.. மேலும்
மிகவும் அருமை.. மேலும் உங்களிடம் ஒரு கோரிக்கை.. இதே போல் நகம் கடிக்கும் பழக்கத்தை பற்றியும் கூறினால் மேலும் உபயோகமாக இருக்கும்....
நன்றி..
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..




