பள்ளிக்கூடத்துக்குள்ளே போனஸ் ஒரு ஆசிரியர் சொல்லித்தருவதை 50 மாணவர்கள் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் அப்படியே 15 வருஷம் படித்துப் படித்து ஒரு ஆசிரியர் சொல்வதைக் கேட்ட காதும் மனமும் ஒரு முதலாளி சொன்னால் கேட்கும். ஒரு நீதிபதி சொன்னால் கேட்கும் ஒரு தலைவர் சொன்னால் கேட்கும்.
பாத்தா படிச்சவன் மாதிரி இருக்கே, இப்படி எதிர்த்து எதிர்த்துப் பேசறியே என்று சொல்கிறோமல்லவா?
கல்வி என்பது கற்பவரும் கற்பிப்பவரும் சேர்ந்து இந்த உலகத்தைப் புரிந்து கொள்வதுதான். மாணவர்களிடமுள்ள திறன்கள் எவை, பலவீனங்கள் எவை என்று கண்டறிந்து இருக்கும் திறனை வளர்ப்பதும் பலவீனங்களைக் களைய உதவுவதும் தான் பள்ளிக்கூடத்தின் தலையாய பணியாக இருக்க வேண்டும். ஆனால் நம்முடைய கல்விச்சாலைகள் மார்க் என்கிற ஒரு கோட்டைப் போட்டு அதை தாண்டியவன் அறிவாளி என்றும் மற்றவன் பெயில் என்றும் சான்றிதழ் கொடுக்கும் இடங்களாக மட்டுமே இருக்கின்றன. அந்த மார்க்கும் எப்படி கிடைக்கிறது நல்ல மனப்பாடம் செய்து பரீட்சைப் பேப்பரில் அப்படியே தப்பில்லாமல் வாந்தி எடுக்கிற மாணவருக்கே அதிக மதிப்பெண் கிடைக்கும்.
அவன் எந்த மனப்பாடம் செய்ய வேண்டும் என்பதை அரசாங்கம் தீர்மானிக்கும். பாடத்திட்டத்தை உருவாக்குவதில் பெற்றோருக்கோ உள்ளூர் ஆசிரியருக்கோ மாணவர்களுக்கோ எந்த பங்கும் கிடையாது.
உழைத்து பாடுபடும் குடும்பங்களில் மனப்பாடம் தேவையற்றது ஒன்று. ஆகவே அந்தக் குழந்தைகள் இந்த கல்வி முறையால் திணறத்தான் செய்யும்.
பள்ளி, கல்லூரிகளை விட்டு வெளியேறும் மாணவர்களில் பெரும்பாலானோர் குறைந்த மார்க்குகளுடன் அல்லது பெயில் ஆகி தனக்கு படிப்பு சரியா வரலியே என்கிற ஒரு குற்ற உணர்வுடன் சமூக வாழ்வில் நுழைகிறார்கள். ஆகவே கிடைக்கிற வேலையை, கிடைக்கிற வாழ்க்கையை ஏற்றுக் கொள்கிற மனதுடன் வ்ந்து சேர்கிறான்.
தனக்கு உரியதை கேட்டுப் போராடுபவன்தான் சுதந்திர மனிதன். கிடைப்பதை ஏற்றுக்கொள்பவன் அடிமை. நமது கல்விசாலைகள் அடிமைகளை உற்பத்தி செய்யும் பண்பாட்டுத் தொழிற்சாலைகளாக இருப்பதை வரும் தலைமுறைதான் மாற்ற வேண்டும், மாற்ற அரசாங்கமும் ஊக்கப்படுத்தவேண்டும்.
"உண்மை எடுத்து விளக்கும் புத்தகங்களை மக்களிடம் கொடுங்கள், வாழ்கையின் கேள்விகளுக்கு அவர்களே விடை கண்டுகொள்வார்கள்."








