joshi2010's படம்

 கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்., தலைவர்

பனமரத்துப்பட்டி: உள்ளாட்சி தேர்தல் செலவுக்கு வாங்கிய கடனை அடைக்க, அ.தி.மு.க.,வை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் ஒருவர், புரோட்டா கடை வைத்து, அவரே புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். சேலம், பனமரத்துப்பட்டி யூனியன், தாசநாயக்கன்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவராக, அ.தி.மு.க.,வை சேர்ந்த வேலுசாமி, 56, உள்ளார். அரசு மேல்நிலைப்பள்ளி அருகே குடியிருக்கும் அவர், வீடு அருகே டீக்கடை நடத்தி வந்தார். கடந்த, 2006ம் ஆண்டு முதல் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் வேலுசாமி, 2011 உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட்டு, பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றார். உள்ளாட்சி தேர்தல் செலவுக்கு, உறவினர்கள், நண்பர்களிடம் கணிசமான தொகை கடனாக பெற்றார். தேர்தல் முடிந்துவிட்டதால், கடன் கொடுத்தவர்கள், அசல் மற்றும் வட்டித்தொகை கேட்டு வருகின்றனர். முன்னாள் பஞ்சாயத்து தலைவரான மனைவி லட்சுமியிடம், டீக்கடை பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, புரோட்டா கடையை, வேலுசாமி திறந்துள்ளார். தினந்தோறும், காலை 6 மணி முதல், 10 மணி வரை, மைதா மாவு பிசைந்து, புரோட்டா சுட்டு வருகிறார். காலை நேரத்தில், குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை உள்ளிட்ட பிரச்னைகளை கூற வரும் பொதுமக்களிடம் பேசியபடியே, புரோட்டா தட்டும் பணியில், வேலுசாமி ஈடுபட்டு வருகிறார். பஞ்சாயத்து தலைவராக இருக்கும் வேலுசாமி, கவுரவம் பார்க்காமல், அடுப்படியில் நின்று புரோட்டா சுடுவதை, மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

தாசநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் வேலுசாமி கூறியதாவது: பஞ்சாயத்து தேர்தலில், நிறைய பணம் செலவு செய்ததால், கையில் பணம் எதும் இல்லை. இரண்டு லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்ட வீட்டு பத்திரத்தை கூட மீட்க முடியவில்லை. டீக்கடையில் போதிய வருமானம் இல்லாததால், புரோட்டா கடை வைத்துள்ளேன். காலையில் இட்லி, தோசை, புரோட்டா, மதியம் சாப்பாடு தயார் செய்கிறோம். செலவு போக, நாள்தோறும், 500 ரூபாய் கிடைக்கிறது. அதன் மூலம் கடனை அடைக்க திட்டமிட்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி : தினமலர்

0
Your rating: None