oruvaarthai's படம்

நான் என்னோட எட்டு வயசுல வீட்டை விட்டு வெளியில வந்தேன்.சிவகங்கையில ஒருத்தர்கிட்ட வேலைக்கு சேர்றதுக்காகப் போனேன்,அந்தாளு என்னை இந்த பாலியல் தொழிலுக்குள்ள தள்ளி விட்டுட்டான்.எனக்கு இப்போ எயிட்ஸ் நோய் இருக்கு..,ஆனா அதப்பத்தி எனக்கு கொஞ்சம் கூட கவலை இல்லை. தொடர்ந்து நல்ல மருந்து,மாத்திரை எடுத்துக்கிட்டு வர்றேன் அதனால் நான் இப்போ நல்ல மனநிலையில ரொம்ப சந்தோஷமா சாதாரண வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டு வர்றேன்.

ஆரம்பத்துல என்னை எல்லாரும் ஒதுக்க ஆரம்பிச்சாங்க,ஆனா இப்போ அப்படி இல்லை. ஆஸ்துமா,சக்கரை வியாதி மாதிரி தான் எயிட்ஸ் நோயும்,அந்த நோய் வந்த உடனே யாரும் கவலைப்படக் கூடாது.எப்படி இதய நோய் உள்ளவங்க, சக்கரை வியாதி உள்ளவங்க அதுக்கு சரியான மருந்து எடுத்துகிட்டு பல வருஷங்கள் உயிர் வாழ்றாங்களோ அதே மாதிரி எயிட்ஸ் நோய் உள்ளவங்களும் சரியான சிகிச்சை எடுத்துகிட்டு பல வருஷங்கள் உயிர் வாழலாம். இப்படி தன்னம்பிக்கையோடும் முகத்தில் தனக்கு வந்திருக்கும் எயிட்ஸ் நோய் பற்றிய துளியளவு பயமும் இல்லாமல் பேசினார் குணவதி.

குணவதி கடந்த சில ஆண்டுகளாக ஹெச்ஐவி பாஸிடிவ் நோயின் பிடியில் உள்ளார்.மிக மோசமான நிலையில் இருந்த அவர் தற்போது மீண்டு ஆரோக்கியமானவராக காட்சியளிக்கிறார்."ஹெச்ஐவி நோய் பாதிக்கப்பட்ட நிலையில் எனது முகத்தோற்றம் எப்படி இருந்தது என்பதை உங்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது."என்று சிரித்தபடியே கூறிய அவர்  இந்த நோயை எதிர் கொண்டு எப்படி வாழ்வது என்பதை நான் கற்று கொண்டுள்ளேன்"என்றார்.

அதே போல சுந்தரி என்ற பாலியல் தொழில் செய்யும் பெண்ணும் தைரியமாக எல்லோர் முன்னிலையிலும் வந்து தனது பாலியல் தொழில் உடனான வாழ்க்கை போராட்ட அனுபவங்களை கூறினார்,அவர் மைக்கை பிடித்து பேசி விட்டு வெளியில் வந்தபோது நான் அவரின் முகத்தை பார்த்தேன்,அதில் அவர் தான் ஒரு பாலியல் தொழிலாளி என்ற குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் சக தோழிகளுடன் கலகலவென்று சிரித்து பேசிக்கொண்டிருந்தார். சுந்தரிக்கு ஒரு குழந்தையும் உண்டு “எனக்கு ஹெச்ஐவி பாதிப்பு இல்லை என்றாலும் எனது பாலியல் தொடர்புடைய களங்கங்கள் இல்லாமல் எனது குழந்தையை வளர்க்க முயற்சி செய்து வருகிறேன்” என்று சொன்னார்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த ஒரு பெண்மணி "மனதுக்குள் சோகம் வந்தால் என்ன செய்வோம்?" என்று அங்கு கூடியிருந்த திருநங்கைகளிடமும்,பாலியல் தொழிலாளர்களிடமும் உரக்கக் கேட்டார், அதற்கு அவர்கள் கோரஸாக “பாட்டு பாட வேண்டும்” என்று சொன்னார்கள் உடனே யார் பாடப்போவது என்று அந்தப் பெண்மணி கேட்க, “நீங்களே பாடுங்கள்” என்று இவர்கள் சொல்ல உடனே அவர் "உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீயாட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி” என்று பாட ஆரம்பித்தார்..,அவருடைய பாடலை பின் தொடர்ந்து திருநங்கைகளும்,பாலியல் தொழிலாளர்களும் கூடவே பாடி மகிழ்ந்தார்கள்.

இப்படி கலகலப்பு,சோகம்,மகிச்சி,உண்மை,துக்கம்,நம்பிக்கை என எல்லாமும் கலந்த கலவையாக இவை எல்லாமே நடந்தது ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில்...

ஆமாம்,கணினி உலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கி வரும் பில்கேட்ஸின் "பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷனின் “ஆதரவு மற்றும் நிதியுதவியுடன்'எயிட்ஸ் ஜாகோ' என்ற பெயரில் இந்திய திரையுலக முன்னனி நட்சத்திரங்களைக் கொண்டு உருவாக்கியுள்ள எயிட்ஸ் பற்றிய நான்கு குறும்படங்களை தமிழில் திரையிட்டு அது சம்பந்தமான பத்திரிகையாளர்களுடனான சந்திப்பில் தான் நான் மேலே சொன்ன உற்சாக விஷயங்கள் அரங்கேறின.

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் தமிழில் வெளியிட்ட அந்த நான்கு திரைப்படங்களும் அடுத்தடுத்து திரையிட்டு காண்பிக்கப்பட்டு அங்கு வந்திருந்த திருநங்கைகளிடமும்,பாலியல் தொழிலாளர்களிடமும் படங்கள் குறித்தான அவர்களுடைய வாழ்க்கை அனுபவங்கள் கேட்கப்பட்ட போது அவர்கள் சொன்ன விஷயங்கள் தான் நான் மேலே முதலில் சொன்னது.

‘வாழ்க்கை முக்கியம் – விழித்திடு’ என்று தமிழில் அழைக்கப்படும் இந்த ‘எயிட்ஸ் ஜாகோ’வின் முக்கிய நோக்கம் இந்த படங்களைப் பார்ப்பவர்களுக்கு எயிட்ஸ்,ஹெச்ஐவி குறித்த அறிவை ஏற்படுத்தவும்,நோய் குறித்த ஆரோக்கியமான நடைமுறைகளை பின்பற்ற ஊக்குவிக்கவும் தவறான சிந்தனைகளையும்,இந்த நோய் பரவுவது தொடர்பான மூட நம்பிக்கைகளை அகற்றவும்,இந்த நோய் பரவுவதை தடுக்கும் வகையில் ஹெச்ஐவி கிருமி பரவுவதை தடுக்கும் அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுவதை ஊக்குவிக்கவும் தான் இந்த "எயிட்ஸ் ஜாகோ" திட்டம் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார் "பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷனின் இம்யூனைசேஷன் அண்ட் வாசின்ஸ் பிரிவுத் தலைவராக இருக்கும் பத்மா சந்திரசேகரன்.

மீரா நாயர் இயக்கிய மைக்ரேஷன்,ஃபர்ஹான் அக்தர் இயக்கிய - பாசிடிவ்,சந்தோஷ்சிவன் இயக்கிய ப்ராரம்ப்(தி பிகினிங்) மற்றும் விஷால் பரத்வாஜ் இயக்கிய பிளட் பிரதர்ஸ் ஆகிய நான்கு படங்கள் தான் அவை. இந்த நான்கு படங்களில் மூன்று படங்கள் ஹிந்தியிலும் ஒரு படம் (சந்தோஷ் சிவன் இயக்கியது ) மலையாளத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த திரைப்படங்கள் திரைப்பட விநியோக முறைகளின் மூலமாக ஒரு மணி நேரத்தில் அனைத்து திரைப்படங்களையும் திரையிடுவது,அல்லது தொலைக் காட்சிகளில் தனித்தனியாக குறும் படங்களைப் போல் ஒளிபரப்புவது, அல்லது இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரைப்படங்களுக்கு முன் திரையிடப்படுவது போன்றவை மூலமாக பெரும்பாலான மக்களை சென்றடைய திட்டமிடப் பட்டுள்ளது,மேலும் இந்த திரைப்படங்கள் திரைப்பட விழாக்களிலும் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த திரைப்படங்களைப் பற்றிய சிறு குறிப்புகள் :

(இந்த நான்கு திரைப்படங்களும் youtube  இணையதளத்தில் உள்ளன.)

* ப்ராரம்ப்(தி பிகினிங்) - இயக்குனர் : சந்தோஷ்சிவன்

 
எயிட்ஸ் பாதிக்கப்பட்ட அப்பா, அம்மாவினால் அவர்களுக்கு பிறந்த குழந்தை எப்படி எதிர்கால வாழ்க்கையில் பாதிக்கப்படுகிறான் என்பதை மெல்லிய அழகியலோடு சொல்லியிருக்கும் படம்.

மைசூரில் உள்ள தனது தாயை தேடி செல்லும் ஒரு சிறுவன் ஒரு மைசூர் செல்லும் ஒரு லாரியின் பின்பக்கத்தில் எரிசெல்கிறான்.மைசூருக்கு முன்பாக லாரி ட்ரிவருக்கு ஏற்படும் ஒரு பிரச்சனையில் இந்த சிறுவன் அவனை காப்பாற்ற உடனே சிறுவனுக்கு அடைக்கலம் கொடுத்து அவனுடைய தாயை தேட உதவி செய்கிறான்,ஒருவழியாக அவனுடைய தாயை ஒரு மருத்துவமனையில் கண்டு பிடிக்கிறான் சிறுவன் ஆனால் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சி எடுத்து வரும் அவள் அவனின் எதிர்காலம் கருதி “நான் உன்னுடைய தாய் இல்லை என்று சொல்லி” விரட்டி விடுகிறாள்.

அப்போது தான் பிரபுதேவாவுக்கு அந்த சிறுவன் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவன் என்றும் அதனால் அவன் பள்ளியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டான் என்றும் தெரிய வர எயிட்ஸ் நோய் பற்றி மக்களின் மத்தியில் இருக்கும் தவறான புரிதல்களை எதிர்த்தும், பாதிக்கப்பட்ட அந்த சிறுவனின் கல்வி உரிமைக்காகவும்,அவன் மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்கவும் போராடுகிறான்.குறிப்பாக இந்தப் படத்தில் வரும் சிறுவனின் நடிப்பு கல்நெஞ்சையும் கரைய வைக்கும்அளவுக்கு அற்புதமான நடிப்பு.

தென்னிந்தியத் திரைப்படங்களுக்கே உரித்தான அனைத்து அம்சங்களும் வெறும் 12 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்தப் படத்தில் சுவாரசியமாக்கப் பட்டுள்ளது. வில்லன்கள்,திடீரென நல்லவனாக மாறும் ஒரு முரடன்,நல்லிதயம் கொண்ட ஒரு விலைமாது,அடாவடியான போலீஸ்காரர்,இறக்கும் தருவாயில் உள்ள தாய் என அனைத்திலும் இந்தப்படம் சுவாரசியம் தான்.படத்தில் லாரி டிரைவராக பிரபுதேவாவும்,விலைமாதுவாக குத்துரம்யாவும் நடித்துள்ளனர்.

* மைக்ரேஷன் - இயக்குனர் : மீராநாயர் 

  
உண்மையில் ஹெச்ஐவி கிருமித் தொற்று இப்படித்தான் எதிர்பாராத வகையில் பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாக பரவுகிறது என்ற போதிலும் இது பரவும் முக்கியமான சூழ்நிலை நம்ப முடியாததாக உள்ளது.

மீராநாயரின் இந்தப் படம் அதைத்தான் நமக்கு சொல்கிறது. மனைவி உடனான உடல் சுகத்தில் ஆர்வமில்லாத தனிமையை மட்டுமே விரும்பும் கணவன்,அவனுடன் கிடைக்காத சந்தோஷத்தை வீட்டுக்கு பக்கத்தில் தொழில் நிமித்தமாக வந்திருக்கும் ஒருவனிடம் அவனுடைய மனைவி வாங்கிக் கொள்ள, பாதுகாப்பில்லாமல் அவளுடன் அவன் கொள்ளும்  உறவால் அவனுக்கு எயிட்ஸ் வருகிறது.

அந்த நோய் ஊரில் அவனையே நினைத்து உருகிக் கொண்டிருக்கும் மனைவிக்கும் அவளுக்கு பிறக்கும் ஒரு அழகான குழந்தைக்கும் தொற்றி விடுகிறது. கடைசியில் தான் தவறு செய்து விட்டதாக மனைவியிடம் மன்றாடி மன்னிப்பு கேட்கிறான்.இந்த படத்தில் இர்பான்கான் சமீராரெட்டின் கணவராகவும் சமீராரெட்டி உடல் சுகத்துக்காக ஏங்கும், கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவியாக நடித்திருக்கிறார்.கட்டிய கணவனை முழுமையாக நம்பும் கிராமத்து மனைவியாக பிரபல ஹிந்தி நடிகை ரெய்மாசென் நடித்திருக்கிறார்.

* பிளட் பிரதர்ஸ் - இயக்குனர் : விஷால் பரத்வாஜ் 

 
உண்மையிலேயே இந்தப் படம் சுவாரஸ்யமான ஒரு த்ரில்லர் கதைதான்.ஒரு நோயை எதிர்கொள்ள மருந்து,மாத்திரைகளை விட முதலில் மனிதனுக்கு தன்னம்பிக்கையும்,தைரியமும் தான் மிக மிக அவசியம்,அப்படி இருந்தால் அந்த நோயை வென்று நீண்ட வருடங்கள் சந்தோஷமாக வாழலாம் என்ற கருத்தை இந்தப் படம் தெளிவாக உணர்த்துகிறது.

தனது ரத்தத்தை பரிசோதனை செய்யும் நாயகனுக்கு அதன் முடிவு எயிட்ஸ் இருப்பதாக வருகிறது,கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக பெங்களூரு சென்றிருந்த போது அங்கு ஒரு இளம் பெண்ணிடம் ஏற்பட்ட தொடர்பால் தனக்கு இந்த நோய் வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறான்.

இதனால் மனம் ஒடிந்து வீட்டில் அன்பான மனைவி,அழகான ஒரு மகன் ஆகியோரிடம் மனம் ஒட்டாமல் ஒரு நடைபிண வாழ்க்கையை வாழ்ந்து வரும் அவன் ரயில் நிலையத்தில் ஒரு போதை கும்பலிடம் சண்டை போட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது அங்கு ஒரு மருத்துவர் அவனுக்கு முழு உடல் பரிசோதனை செய்து அவனுக்கு ஹெச்ஐவி பாஸிட்டிவ் பாதிப்பு இல்லை என்று சொல்கிறார்.

ஆமாம்,இவன் பரிசோதனை செய்த மருத்துவமனையில் இவனுடைய பெயரில் இருக்கும் வேறொருவனுக்கு எயிட்ஸ் இருக்கும் அறிக்கையை டாக்டர் தவறுதலாக இவனுடையது என்று கொடுத்து விட அதனால் வந்த குழப்பம் தான் இது என்று தெரிய வருகிறது,ஆனாலும் தன் பெயரில் இருக்கும் அவனிடம் அவனுக்கு ஹெச்ஐவி  இருப்பதைப் பற்றி சொல்லியாக வேண்டும் என்று அவனை பின் தொடர்ந்து சொல்ல முயற்சிக்கிறான்.

ஆனால் அவனோ இவனுக்கு அதிச்சி கொடுக்கிறான்.ஆமாம்,அவன் எனக்கு எயிட்ஸ் பாதிப்பு இருப்பது ஏற்கனவே தெரியும் என்றும் ஆனாலும் தான் மனதைரியத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருவதாக கூறுகிறான். அவனுடைய தன்னம்பிக்கை யையும்,மன தைரியத்தையும் கண்டு ஆச்சரியப்படுகிறான் நாயகன். இந்தப் படத்தில் நம்ம பாய்ஸ் சித்தார்த் தான் நாயகன்,அவரின் மனைவியாக பிரபல ஹிந்தி நடிகை ஆயிஷா தாகியா நடித்திருக்கிறார்.

* பாசிடிவ்  - இயக்குனர் : ஃபர்ஹான் அக்தர்

  
ஒரு அப்பாவின் தவறான பாதை ஒரு பிள்ளையின் வாழ்க்கையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை சொல்லும் படம் இது. அடிப்படையில் மாடலிங் உலகில் புகைப்படக்காரராக இருக்கும் நாயகனின் அப்பா  மாடலிங் துறையில் உள்ள பெண்களுடன் தவறான பாதையில் செல்கிறார்.

இதனால் வீட்டில் அவன் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் தினமும் சண்டை தான்.இதனால் தன் அப்பா மீது மனம் வெறுத்துப் போகும் நாயகன் படிப்புக்காக வெளிநாட்டுக்கு சென்று விடுகிறான்.ஒருநாள் அம்மா அப்பாவின் உடல் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி அவனை வீட்டுக்கு வருமாறு அழைக்கிறாள்.இங்கு வந்த பிறகு தான் அவனுடைய அப்பா ஹெச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டிருப்பது அவனுக்கு தெரிய வருகிறது.

அப்பாவின் தவறான போக்கால் அவர்மீது கடும் கோபத்தில் இருக்கும் அவன் அம்மாவின் விருப்பத்தின் பெயரில் அவருக்கு மருத்துவமனையில் பணிவிடை செய்து கொண்டிருகிறான்.அவன் படிப்பு செலவுக்காக வைத்திருந்த பணம் உட்பட எல்லாமும் அப்பாவின் மருத்துவ செலவுக்கு போய் விட, அவனுடையை படிப்பும் பாதியில் நின்று விடுகிறது,இதனால் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறான் நாயகன்.

ஆனால் அவனுடைய அப்பா எஞ்சிய காலத்தையும் மகிழ்ச்சியுடன் கழிக்க ஆசைப்படுகிறார். இந்தப்படத்தில் வரும் தாய்,அல்லது மனைவி கதாபாத்திரம் உண்மையிலேயே மனதில் நிற்கும் கவனிக்கத்தக்க கதாபாத்திரமாகும்.இந்த கதாபாத்திரத்தை பிரபல ஹிந்தி நடிகை சபானாஆஸ்மி ஏற்று நடித்திருக்கிறார்.

நான் இந்த நான்கு திரைப்படங்களையும் முழுமையாக பார்த்தேன்.ஒவ்வொரு திரைப்படத்தையும் பார்த்து முடித்த போது ஏதோ ஒரு சோக உணர்வும், எச்சரிக்கை உணர்வும் என்னை உட்பட அங்கு அந்த படங்களைப் பார்த்த அத்தனை பேரிடமும் ஏற்பட்டது உண்மை தான்.

தனித்துவமான வாழ்க்கை முறை என்பது ஒன்றே ஒன்று தான்.அவரவர்கள் செய்யும் செயல்களினால் மட்டுமே அவை வேறுபடுகின்றன.ஒழுக்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம், உலகம் ஒன்று தான். மனிதர்கள் தாங்கள் செய்யும் செயல்கள் மூலமாகத்தான் வெவ்வேறாக இருக்கிறோம்.இதை நாம் எப்போதும் உணர வேண்டும்.

இந்தியாவில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஹெச்ஐவி பாதிப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.இந்த நிலையில் இது போன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.அந்தப் பணியினை தான் பில்கேட்ஸின் "பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன்’ செய்து வருகிறது.

நாட்டு மக்களிடையே குறிப்பாக கிராமத்து மக்களிடையே இந்தப் படங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது கட்டாயமாகும்.ஆகவே நீங்களும் உங்கள் பகுதியில் இந்த நான்கு திரைப்படங்களையும் பார்க்கவோ அல்லது திரையிடவோ விரும்பினால் டி ஏ ஐ - வி ஹெச் எஸ் - ஐ 044 - 22542355 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

0
Your rating: None
http://oruvaarthai.blogspot.com/2010/07/blog-post_30.html