யாழினி

பவித்ரன்
May 05, 2020 06:37 பிப

அன்னைக்கு காலைல ஆறு மணி இருக்கும். கோழி "கொக்கரக்கோ" ன்னு கூவுச்சு. இருட்டு முடிஞ்சு வெளிச்சம் சும்மா "தக தக" ன்னு ஏறிக்கிட்ருந்துச்சு. தூக்கம் வேற நல்லா "ஜிவ்வு ஜிவ்வு" னு இழுத்துக்கிட்ருந்துச்சு. சந்திரன் நைட் சிப்ட் முடிச்சிட்டு போயி சூரியன் பகல் சிப்ட் வந்திருந்த நேரம் அது. அப்போ பாத்து நடு முதுகுல ஒரு மிதி. "அய்யோ..." னு அலறி எழுந்து பார்த்தா எங்க அப்பா நின்னுகிட்ருந்தாரு.

"டேய் எவ்ளோ நேரம் டா தூங்குவ...?.., எந்திரிச்சி போய் வேலைய பாருடா.." ன்னு கெளப்பிவிட்டாரு.

நானும் அப்படியே தோட்டத்துபக்கம் போயி புதுசா மரக்கன்னுங்கள நட்டு வெச்சு அதுக்கு வேலி போட்டு தண்ணி பாய்ச்சிட்டு வந்தேன்.
இன்னும் என்ன பத்தி சொல்லலயேன்னு பாக்குறீங்களா..? என் பேரு முருகன். பெருசா சொல்றதுக்கு ஒன்னும் இல்ல. திருக்குறள் மாதிரி சொல்லனும்னா இன்ஜினியரிங் படிச்ச 26 வயசு வி.ஐ.பி. அதான் இப்டி வீட்டு வேல, தோட்ட வேலயெல்லாம் செஞ்சிட்ருகேன். நான் எங்க... எப்புடி இருக்க வேண்டியவன்.. சரி அதவிடுங்க.

எல்லா தோட்ட வேலையும் முடிச்சிட்டு வீட்டுக்கு நடந்து வந்துகிட்ருந்தேன். அப்போ ஒரு கார் வேகமா வந்து ரோட்டோரமா இருந்த சேத்த அடிச்சதுல எம் மேல பூரா சகதி. கார் நிக்காம போகவே ஒரு கல்ல எடுத்து அடிச்சேன். அடிச்சதுல கண்ணாடி நொறுங்கிடுச்சி.., உடனே கார நிறுத்திட்டு ஒரு பொண்ணு வெளிய வந்தா..

" ஹேய் மிஸ்டர்..? எவ்ளே திமிர் இருந்தா என் கார் கண்ணாடிய ஒடச்சிருப்ப..? "

நான் : " நீ எவ்ளோ கொழுப்பிருந்தா எம் மேல சேறு அடிச்சிறுப்ப..?"

" ரோட்ல போகும் போது நீ தான் பாத்து போனும்.., கண்ண மூடி தூங்கிட்டே வந்துருப்ப.., யூஸ்லெஸ்..,"

ன்னு திட்டிகிட்டே கார எடுத்துட்டு போய்ட்டா.

கார் கண்ணாடிய ஒடச்ச சந்தோஷத்துல வீட்டுக்கு வந்தா அதுக்குள்ள என் மச்சானுங்க வந்துடானுங்க. எனக்கு நெறைய நண்பனுங்க இருக்கானுங்க அதுல எனக்கு ரொம்ப நெருக்கம்னா அது என் மச்சானுங்க கணபதியும் சேகரும் தான்.

கணபதி: "மச்சி..., என்னடா இவ்ளோ லேட் பண்ணிட்ட..?"

சேகர் : "ஆமா மச்சி..., நாங்க பார் சரியான டைம்க்கு வந்துட்டோம்."

கணபதி : " சீக்கிரம் போனா தான் மச்சி ஒரு 4 மேட்ச் ஆவது ஆட முடியும்.., அப்புறம் வெயில் வந்துடும்."

பசங்க கிரிக்கெட் விளையாட தான் இவ்ளோ ஆர்வமா வந்திருந்தானுங்க. நானும் அப்படியே வாசலோட கெளம்புனேன். உடனே எங்க அப்பா

" டேய் வந்ததும் வராததும் எங்கடா கெளம்புற..?"

" விளையாட போறேன் பா..."

" கல்யாணம் பண்ண வேண்டிய வயசுல என்னடா விளையாட்டு வேண்டி கெடக்கு..?"

" நான் அப்புறம் வந்து பதில் சொல்றேன்.."

" டேய் உங்க அத்தையும் மாமாவும் வந்துருக்காங்கடா.."

" நான் போய்ட்டு வந்து பாத்துக்குறேன்.."

என்று கூறிவிட்டு கிரவுண்டுக்கு கெளம்பி போனோம். போயிட்ருக்கும் போது எங்க பக்கத்து வீட்டு பொன்னு அன்னலட்சுமி வந்துகிட்ருந்துச்சு. சும்மா இல்ல அப்டியே அன்னபறவை மாதிரி மெதந்து வந்துகிட்ருந்துச்சு.

நான் : " என்ன அன்னம்..? எங்க போயிட்டு வர்ற..?

அன்னம் : " ம்ம் பாத்தா தெரியில..? தண்ணி எடுத்துட்டு வர்றேன் "

நான் : " தண்ணி எடுத்துட்டு வர்றியா.. இல்ல தண்ணியிலிருந்து வர்றியா னு தெரியல.., அவ்ளோ அம்சமா இருக்க.."

அன்னம் : " ச்சீ போடா.. உனக்கு எப்பவும் கிண்டல்தான்"

 அப்டின்னு வெட்கபட்டுகிட்டே ஓடிட்டா.

கணபதி : " டேய் ரோட்ல ஒரு பொண்ண போக விடமாட்டியா...?"

நான் : " டேய் வாழ்க்கை னா கொஞ்சம் கிண்டல், கேலி லாம் இருக்கணும் டா.."

சேகர் : " எதுக்கு பா செருப்படி வாங்குறதுக்கா..? "

 இப்டி பேசிகிட்டே கிரவுண்டுக்கு வந்துட்டோம். வந்து ஒரு நாலு மேட்ச் முடியறதுக்குள்ள வெயில் நல்ல உச்சிக்கு ஏறி நடு மண்டைல நல்லா உளி எடுத்து அடிக்க ஆரம்பிச்சிடுச்சி.

சேகர் : " மச்சி.., வெயில் மண்டய பொளக்குதுடா.."

கணபதி : " முருகா கெணத்துக்கு போலாம்டா..."

நான் : " சரி வாங்கடா... போவோம்"

என்று எல்லாரும் கெணத்துக்கு போனோம். நல்ல அகலமான ஆழமான படிவெச்ச கெணறு. ஜட்டிய தவிர எல்லா துணிகளையும் "சர சர" அவுத்து போட்டோம். பயங்கரமான வெக்கை. பெரிய ஆலமரத்து நெழலுல நல்லா "சில்" லுன்னு தண்ணிய கெணத்துக்குள்ள பாத்ததும் அப்டியே டைவ் அடிச்சோம். தண்ணி ஒடம்புல பட்டதும் சும்மா அப்டியே ஐஸ் எடுத்து உச்சந்தலையில வச்ச மாதிரி சூடெல்லாம் கொறஞ்சு சொகமா இருந்துச்சு. அப்டியே ஒரு மணி நேரம் குளிச்சிருப்போம். 

சேகர் : " மச்சான் கெளம்பலாம் டா..."

கணபதி : " சரி மச்சான் போலாம்..."

நான் : " நான் டேய் கொஞ்ச நேரம் இருங்கடா அப்றம் போலாம்.."

 அந்த நேரம் பார்த்து அன்னலட்சுமி வர..

நான் : " என்ன அன்னம்..? பசங்க குளிக்கறத பாக்க வந்தியா..? "

அன்னம் : " ஆமா நீங்க பெரிய மன்மதனுங்க..., பாத்துட்டாலும்.." 

 ன்னு சொல்லிகிட்டே போய்ட்டா..., அந்த நேரம் பார்த்து கணபதியோட போன் அடிக்க..

கணபதி : " மச்சான் வீட்ல இருந்து கூப்புட்றாங்க டா.., டைம் ஆச்சு நான் கெளம்புறேன்.."

சேகர் : " ஆமாம் மச்சான் நானும் கெளம்புறேன்.."

நான் : " டேய்..., நீ எங்கடா கெளம்புற...?"

சேகர் : " இல்ல மச்சான் வேல இருக்குடா.. நீ குளிச்சிட்டு வா.."

ன்னு சொல்லிட்டு ரெண்டு பேரும் கெளம்பிட்டானுங்க. நானும் குளிச்சிட்டு டிரெஸ்லாம் மாட்டிகிட்டு கெளம்பி கொஞ்ச தூரம் போயிருப்பேன். அதுக்குள்ள ஒரு பெரிய சத்தம். நல்லா பெரிய திமிலோட கூரான கொம்ப வச்சிகிட்டு சும்மா புலி வேகத்துல அந்த காள மாடு, செவப்பு கலர் சுடிதார் போட்ட ஒரு பொண்ண தொரத்திகிட்டு வந்துகிட்ருந்துச்சு. உயிர கையில புடிச்சுகிட்டு ஓடி வந்த அந்த பொன்னு எவ்ளோ முடியுமோ அவ்ளோ வேகமா ஓடி வந்துட்ருந்துச்சு.., நானும் அந்த பொன்ன காப்பாத்த ஓடுனேன்.., ஆனா " சடார்.." னு ஒரு கல் தடுக்கி அந்த பொண்ணு பக்கத்துல இருந்த கெணத்துக்குள்ள விழுந்திருச்சி. நான் அந்த காள மாட்ட வெரட்டி விட்டுட்டு கெணத்துக்குள்ள குதிச்சு அந்த பொண்ண தூக்கி கெணத்து கரையில போட்டேன். அப்பதான் அவளோட மொகத்த பாத்தேன். காலையில கார் கண்ணாடிய ஒடச்சனே அந்த பொன்னுதான். அவளுக்கு பேச்சு மூச்சே இல்ல.., எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. ஒடனே வயித்துல கைய வெச்சு நல்லா அமுக்குனேன். அப்புடி அமுக்க அமுக்க தண்ணியெல்லாம் வெளிய வந்துருச்சு ஆனா மூச்சு வரல. சுத்தும் முத்தும் பார்த்தேன்,  கண்ணுக்கெட்ன தூரம் வரைக்கும் யாரும் காணோம்.., ஆபத்துக்கு பாவம் இல்லனு நெனச்சுகிட்டு அத ஒதட்ட பார்த்தேன்.., சும்மா ஆரஞ்சு பழச்சொளைய மைதாவுல பெரட்டி எடுத்த மாதிரி ஒரு ஒதடு.., அத பார்த்ததும் எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு.., உதவியும் பண்ணனும் கெட்ட எண்ணமும் வருது, எப்டிடா கடவுளே இவள காப்பாத்த போரேன்..? னு நெனக்கும்போது ஒரு ஐடியா வந்துச்சு., அவ ஒதட்டு மேல அடையாளத்துக்காக கைய வச்சிக்கிட்டேன்.., அப்டியே கண்ண மூடி அவ ஒதட்டோட ஒதடு வெச்சு என் மூச்சுக்காத்த ஊதுனேன்.., இப்டியே ஊதிட்ருக்கும்போது பெரியசாமி ன்ற பெரியவர் அங்க வந்தாரு. அவர் அந்த பொன்ன பாத்ததும் 

பெரியசாமி : " அய்யயோ சின்னம்மாவுக்கு என்ன ஆச்சு..? "

நான் : " அவங்க தவறி போய் கெணத்துல விழுந்துடாங்க தாத்தா.., மூச்சே இல்ல.. அதான் மூச்சு குடுத்துட்ருக்கேன்"

பெரியசாமி : " சரி சரி உடனே ஆஸ்பத்திரிக்கு தூக்குங்க.." 

ன்னு சொல்லி வண்டி வர வெச்சு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க. நான் அப்டியே வீட்டுக்கு கெளம்பி போனேன். போனதும் வீட்ல அத்த மாமா யாரையும் காணோம். 

நான் : " அம்மா.., எங்கமா..? அத்த மாமா யாரையும் காணோம்.."

அம்மா : " அவங்க ஊருக்கு போய்ட்டாங்க டா.."

நான் : " அதுக்குள்ளயா..? "

அம்மா : " ஆமான்டா நீ வருவ உன் இஷ்டத்துக்கு.. அவங்க ஊருக்கு போக வேண்டாமா..? "

நான் : " ஏன் ரெண்டு நாள் தங்கிட்டு போனாதான் என்ன..? "

அம்மா : " வயசு பொண்ண வெச்சுகிட்டு எப்டிடா தங்குவாங்க..? "

நான் : " எது..? மாமாவோட பொண்ணும் வந்திருந்தாளா..? "

அம்மா : " ஆமாடா.."

நான் : " அய்யோ.., இத காலையிலயே சொல்றதுக்கு என்ன..?

அம்மா : " நீ எங்கடா சொல்லவிட்ட..?, அது சரி ஏன் இப்டி குதிக்கிற.."

நான் : "பின்ன என்னம்மா..? சொந்த மாமன் பொண்ணு இதுவரைக்கும் அவள நான் பாத்ததே கெடயாது.. ச்சே"

அம்மா : "சரி சரி அடுத்த தடவ வர்றப்போ பாக்கலாம் போ.."

ச்சே மிஸ் பண்ணிட்டேன்..., என் மாமன் மக தேவதைய பாக்காம மிஸ் பண்ணிட்டேன்.., இனி எப்ப வருவாளோ, எப்புடி இருப்பாளோ..


                                                                                                                                                          -தொடரும்.