இயற்கையின்  எச்சரிக்கை

பாவலர் கருமலைத்தமிழாழன்
மார்ச் 18, 2020 12:55 பிப

இயற்கையின்  எச்சரிக்கை

பாவலர்  கருமலைத்தமிழாழன்

 
வீசிட்ட   புயல்காற்றும்   எச்ச   ரிக்கை
          விளைவித்த   பேரழிவும்   எச்ச   ரிக்கை
காசிற்கே   ஆசைபட்டு   மலைத  கர்த்த
          கயவராலே   காற்றணைக்கும்   அரணி  ழந்தோம்
வாசிக்கும்   புத்தகத்தைக்   கிழித்தல்   போல்
          வளர்ந்தமரக்   காடுகளை   அழித்த   தாலே
ஏசியின்று   இயற்கையன்னை   தந்த  திந்த  
எச்சரிக்கை   எல்லாம்போம்   அழித்தா  லென்றே !
 
கடல்மீது   கால்வைத்துக்   கப்பல்   விட்டோம்
          கரைகடந்து   நாடுபல   கண்டு   வந்தோம்
தடம்பதிக்க   வேண்டுமெனச்   சண்டை   செய்ய
          தண்ணீரில்    அணுக்கருவி    மிதிக்க  விட்டே
விடமாக்கி   உயிரினத்தைத்   துடிக்கச்   செய்து
          வீசுகாற்றை   நஞ்சாக்கிக்   கொதிக்க  வைத்தோம்
மடமனிதா   அதன்விளைவே   புயலாம்   என்று
          மாண்பியற்கை   தந்ததிந்த   எச்ச  ரிக்கை !
 
ஏரிகுளம்   வயலழித்தோம்   ஆற்று   நீரை
          ஏப்பமிட்டே   மணலெடுத்து   மலடு  செய்தோம்
ஊரினையே   முன்னேற்றம்   செய்வ   தாக
          ஊர்சுற்றிக்   கழிவுநீரை   ஓட  விட்டோம்
பேரிடராய்ச்  சூழலினை   மாச   செய்து
          பெயர்புதிதாய்   நோய்களினை   வரவ   ழைத்தோம்
வேரினைநாம்   அழிப்பதாலே   எச்ச   ரித்து
          வெகுண்டெழுந்த   இயற்கைச்சொல்   கேட்டால்   வாழ்வோம் !