படைப்பாளன்  தோற்றதில்லை

பாவலர் கருமலைத்தமிழாழன்
மார்ச் 18, 2020 12:53 பிப

படைப்பாளன்  தோற்றதில்லை

பாவலர்  கருமலைத்தமிழாழன்

 
படைப்பாளன்   தோற்றதில்லை   கணியன்   அன்று
          படைத்தளித்த   யாதும்ஊர்   கேளிர்  சொல்லே
அடையாளம்   ஆனதின்று   மனிதத்  திற்கே
          அதைக்காக்கப்  பிறந்ததுதான்  ஐ.நா  மன்றம்
கடையேழு   வள்ளல்கள்  செயல்க  ளுக்குக்
          கருத்தாக  அமைந்ததுவும்  கணியன்   சொல்லே
உடைமையெல்லாம்   பொதுமையென்னும்   தத்து  வத்தை
          உருவாக்கம்   செய்ததுவும்   கணியன்   சொல்லே !
 
சமுதாயச்   சீர்கேட்டைக்   களைவ  தற்குச்
          சாட்டையடி   கொடுப்பதற்குப்  பின்வாங்   காமல்
சமுதாயக்   கயவர்கள்   முகம்கி   ழித்துச்
          சமத்துவத்தை   ஏற்படுத்த   அஞ்சி   டாமல்
சமுதாயம்   மேன்னையினைப்   பெறுவ  தற்குச்
          சரியான  வழிகூறத்   தயங்கி   டாமல்
சமுதாய   விழிப்புணர்வுப்   படைப்பைத்   தந்தோன்
          சரித்திரத்தை   வென்றதன்றித்   தோற்ற  தில்லை !
 
பகுத்தறிவு   கருத்துரைத்த  பெரியார் ;  ஆட்சிப்
          படியேற   வழியுரைத்த   அண்ணா ;  ஆளத்
தகுதியுனக்     குள்ளதெனத்   தமிழை   ஏற்றித்
          தமிழனுக்குச்   சொரணையினைத்   தந்த   கலைஞர்
வகுத்தளித்த   படைப்புக்கள்   வீழ்ந்த   துண்டா
          வடித்திட்ட   படைப்பாளர்   தோற்ற   துண்டா
வெகுண்டெழும்நல்   புரட்சிக்கு    எழுத்துத்   தீயை
          வேள்வியாக்கும்   படைப்பாளன்   தோற்ற   தில்லை !