இளைஞனே மாற்ற வாவா

பாவலர் கருமலைத்தமிழாழன்
மார்ச் 18, 2020 12:51 பிப

இளைஞனே  மாற்ற  வாவா

பாவலர்  கருமலைத்தமிழாழன்

 
இயற்கையொடு   கைகோர்த்து   முன்னோ  ரெல்லாம்
----இனிமையாக   வாழ்ந்திருந்தார்   நோய்க  ளின்றி
முயற்சியென்றே   அறிவியலின்  முன்னேற்  றத்தால்
----முழுவதுமாய்ப்  புதுபுதிதாய்க்  கருவி  கண்டு
செயற்கையினைத்   தலைமீது   கொண்ட   தாலே
-----செழித்தவளம்   நலமெல்லாம்   போன  தின்று
வயதான  மூத்தோர்கள் ;  இளைஞா   உன்றன்
----வாழ்வெண்ணிக்  குமுறுகின்றோம் !   மாற்ற  வாவா !
 
மொழிவளர்த்தார்   இலக்கியங்கள்  குவித்து  வைத்தார்
----மொழிகின்ற  பண்பாட்டில்   வாழ்ந்தி  ருந்தார்
விழியான   தமிழினிலே   கல்வி  கற்று
----வியக்கின்ற  அறிவியலை  அன்றே   கண்டார்
வழியமைத்தே   கடல்கடந்து   நாட்டை   வென்ற
----வரலாற்றைப்   படித்தும்நீ   அயல்மோ  கத்தில்
வழிமாறிப்  போகின்றாய் ;   மொழியி  னத்தின்
----வளமிழந்தால்   அழிந்துபோவாய் !   காக்க  வாவா !
 
செங்கோலில்   ஆட்சிசெய்த   மன்ன  ராலே
----செவ்வறத்தில்   நாடுவளம்   பெற்ற   தன்று
மங்கலமாய்   மக்களெல்லாம்   மகிழ்ச்சி   யோடு
----மனமொத்துப்   பொதுமையாக   வாழ்ந்தி  ருந்தார்
இங்கின்றோ   தன்னலத்தில்   ஆட்சி  யாளர்
----இருப்பதினைச்   சுருட்டுகின்ற   கயமை  யாலே
எங்கெங்கும்  வன்முறைகள் ;   இளைஞா   உன்னை
----எண்ணிமனம்   மாழ்குகின்றோம் !  மாற்ற  வாவா !