மாடுகள்

மகேந்திரன்
மார்ச் 06, 2020 12:16 பிப

ராமகாதையில்
நால்வரோடு ஐய்வரான குகன்போல
எங்கள் குடும்பத்தோடு
எங்கள் மாடுகள்.

அப்பாவின்
உழவுக்கு உதவுவதிலும்
எங்களுக்கு
சினிமா செல்ல உதவுவதிலும்
மாடுகளே கதாநாயகன்கள்.

மாடுகளின் உதவியில்
விளைச்சல் செழித்தது.
நாங்கள் செழித்தோம்.
எங்களின் உயர்பதவிக்கு
ஆதாரம் மாடுகள்.

மழை ஆரம்பிக்கும் சமயங்களில்
மண்விடும் வாசனையைவிட
மாடுகளின் அருகே வீசும்
வாசனை புதுமையானது.
சுகந்தமானது.

உழுது களைத்தவுடன்
உண்பதற்கும் உறங்குவதற்கும்
ஒற்றை வேப்பமரம்.
மரமுமில்லை. மாடுகளுமில்லை.
நிழலுமில்லை.நிலமுமில்லை.
வெப்பமாகிறது பூமி.

என் மகன் கட்டிய புதுவீட்டில்
கம்பீரமாய் இரண்டு மாடுகள்
வரவேற்பரை அலமாரிகளில்.
இவைகள் தான் மாடுகள் என
பேரனுக்கு அடையாளம் காட்ட.