என்னவனே ...

மல்லி...
பிப்ரவரி 27, 2020 03:45 பிப
எதிர்பார்ப்புகள் பெரிதல்ல...
 
எனினும் அவைகள்   கிடைப்பதில்லை...
 
ஆசைகள் அரிதல்ல...
 
ஆயினும் அவைகள்  நடப்பதில்லை...
 
மிஞ்சிப்போனால் அஞ்சு கூட தேறாது என் ஆசைகள்...
 
லட்சம் தருவாய் லஞ்சமாக ...
 
அளவுக்கு அதிகம் கொடுத்த ஆனந்தம் உனக்கு..
 
ஆசைப்பட்டது கிடைக்காத வருத்தமே எனக்கு ...
 
எப்படி இருந்தாலும் எந்நாளும் நீயே என் கிழக்கு...
 
உன் திசையிலே  எழுவேன்..
 
உனக்காகவே வாழ்வேன் ...

 
எங்கெங்கோ...
 யார் யாருக்காகவோ...
 
உன் பணி விடுத்து விடுப்பெடுத்து மகிழ்கிறாய்... 
 
எனக்காக உன் வாழ்வையே தந்த நீ...
 
உன் வருடத்தின் ஒரு நாளை தர பாம்பென சீறுகிறாய்... 
 
குடும்பத்தோடு வெளியில் சென்று மன நிம்மதி அடைவது தேசக்குற்றமாக
 உணர வைக்கிறாய் ....
 
சலித்துப் போனால் வாழ்வில் விருப்பங்கள் எல்லாம் வெறுப்பாய் மாறுகின்றன ...
 
வெறுத்தவைகள் எல்லாம் விரும்பாமலே விருப்பங்கள் ஆகின்றன...
 
குடும்பத்திற்காக  உழைப்பை செலவு செய்வது தவறில்லை ...
 
கொஞ்சம் குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்யத் தவறுவது தான் தவறு...
 
இந்திய நாட்டிற்கே விடுப்பாய் கழியும் அந்த ஞாயிறு ஒவ்வொரு வாரமும் எனக்கு மட்டும் ஏன் கடுப்பாய் கழிகிறதோ...? 
 
ஏங்கும் கண்களோடு எட்டிப் பார்க்கிறேன் எதிர் வீட்டுக்காரர்கள் குடும்பத்துடன் எங்கோ செல்வதை...
 
ஆண்டுதோறும் விதவிதமாய் விடுமுறைகள்...
 
காலாண்டு...
அரையாண்டு...
முழு ஆண்டு என்று ...
 
ஓர் ஆண்டும் நான் அவைகளை ஆண்டதில்லை ...
என் குடும்பத்தோடு வெளியூர்  சென்று...
 
பணமோ...
ஆபரணமோ...
கேட்கவில்லை...
 
கட்டிக்கொள்ள 
பட்டோ...
 பகட்டோ.... கேட்கவில்லை ..
 
கட்டிய காதலனோடு ஒருநாள் ....
 
கைப்பிடித்து நிலா ஒளியில் உலாவர ...
 
இதற்கு இத்தனை கலவரமா ...??!!!
 
பிள்ளைகளின் தொல்லைகளை ரசிக்க வீட்டை தாண்டி ஒரு நாள் ...
 
நாட்டைத் தாண்டி அழைக்கவில்லை ...
 
ஆனால் காட்டை நோக்கி அழைப்பதுபோல் கதறுவாயே....
 
வருடம் முழுக்க காத்திருந்த ....
வாழ்வு தொடங்கிய அந்த நாளில் கூட....
 எனக்காக வர முடியவில்லை
என்றால் ...
வாழ்வில் அந்த நாள் வராமலே முடிந்திருக்கலாம் ...
 
உரிமையோடு கேட்டு பார்த்தேன்... உடன்படவில்லை....
 
அன்பாய் கேட்டு பார்த்தேன்... அர்த்தமில்லை...
 
கோபித்தும் பார்த்தேன்... கொடுப்பினை இல்லை ...
 
இனி அதற்கென அழ போவதில்லை ...
 
மூளையின் மூலையில் குப்பை போல் சேர்க்கப் போவதுமில்லை...
 
இதற்காகவெல்லாம் உன் அன்பை இழக்க போவதும் இல்லை ...

கணவன்  - என் கண் அவன் ...
என்பதால் குத்தினால் கண்ணீர் எனக்கே..
 
ஒரே ஒரு கேள்வி தான் ...
 
*என் உடல் தாண்டி என் உள்ளத்தின் உணர்வுகளை நீ தொடுவது எப்போது....???*