உரிமைக்குரல்

Edison Ragland Judson
November 13, 2019 05:24 பிப

உரிமைக்குரல்

ஊசியின் காது போல் எம்நுழைவாயில்
கடுகின் கால்பதிக்க இடமுமில்லையே
மழையின் கால்பதிந்து சகதியானதே
மாடிகொண்ட மாளிகையல்ல எம்வீடு – அதில்
மாட்டிக்கொண்ட சிலந்தியும் ஓடத்துடிக்கும்
மேகத்தின் குமுறலால் கூரையின் வாய் அழுததென்ன !?
கற்களின் கதறலால் ஓட்டின் மண்டை உடைந்ததென்ன !? – இதை
கண்டமழலையின் அழுகையும் நின்றதென்ன !?
தனிஅறை தேடும் உலகில் ஓர்அறையில் “குடும்பங்கள்” வாழ்வதென்ன !?

இரயிலோடும் பாதைமேல் எம்குளியல்கள்
அதுவும் காக்கா குளியல்
ஈயாடும் தட்டின்மேல் எம்உணவுகள்
இரவுதோறும் போர்வைக்குள் எம்கனவுகள்
காதோரம் கவிபாடும் கொசுக்கள் – இதுவேயெம்
ஓர்நாள் வாழ்வின் நினைவுகள்

தரைபதிந்திட்ட பாதம் சொல்லும்
கால்தடமிட்ட பாதை செல்லும் வழி
** (பாம்பறியும் பாம்பின் கால்போல்
யாமறிவோம் எம்மக்கள் வழி) **
கால்கள்வைத்த கற்கள் கேட்கும்
மென்மையுள்ள பாதத்தின் வலி

வண்ணமிட்டு வான்முத்தமிடும் ஆகாசவாணமுண்டு
சப்தமிட்டு செவிதட்டும் வெடியுண்டு
இரைச்சலிட்டு செவிடாக்கும் அணுகுண்டுமுண்டு
மழலை மொழிபாட தரைச்சக்கரமுண்டு
தீயிட்டு சொல்லியடிக்க சாட்டையுமுண்டு
இன்னும் பலவகை வெடிகளுமுண்டு
இவைகளை உருவாக்கும் எம்கரங்கள்
நீங்கள் மனமகிழ வெடிக்கும் பட்டாசுகள்
நாங்கள் மனம்குமுற வெடிக்கும் காரணங்கள் – இதோ !

வளர்பிறையிருந்தும் தேய்பிறையாய் 
நாங்கள் தொழிலாளிகள்
உயர்மலையிருந்தும் தரைமட்டமாய்
நாங்கள் தொழிலாளிகள்
மொட்டுகளிருந்தும் வாடிவதங்கிய
நாங்கள் தொழிலாளிகள்
தென்றலிருந்தும் வியர்வைதுளிகளாய்
நாங்கள் தொழிலாளிகள்
கண்ணாடியிருந்தும் உடைபட்டதுண்டுகளாய்
நாங்கள் தொழிலாளிகள்
கடலிருந்தும் கரையேற வழியின்றி
நாங்கள் தொழிலாளிகள்
படகிருந்தும் துடுப்பின்றி
நாங்கள் தொழிலாளிகள்
உணவிருந்தும் உப்பின்றி
நாங்கள் தொழிலாளிகள்
விளக்கிருந்தும் இருளாக
நாங்கள் தொழிலாளிகள்
விடியலிருந்தும் விடியாஇரவாக
நாங்கள் தொழிலாளிகள்
நாவிருந்தும் மொழியாசொற்களாக
நாங்கள் தொழிலாளிகள்
உதடிருந்தும் குரலிழந்த
நாங்கள் தொழிலாளிகள்
உதவியிருந்தும் உரிமையிழந்த
நாங்கள் தொழிலாளிகள்..!?
உதவியிருந்தும் ஊமைகளாக்கப்பட்ட
நாங்கள் தொழிலாளிகள்..!?