கீழடி! – தமிழ் நாகரிகமா, திராவிட நாகரிகமா?

இ.பு.ஞானப்பிரகாசன்
October 02, 2019 06:23 பிப
மிழ் வரலாற்றுத் துறையிலேயே ஒரு நன்னம்பிக்கை முனையாக வெளியாகியிருக்கிறது கீழடி அகழ்வாராய்ச்சியின் நான்காம் கட்ட ஆய்வு அறிக்கை!

இதுவரை கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், இலக்கியங்கள், சில பல அகழ்வாராய்ச்சிகள் மூலமாக மட்டுமே தமிழின் பழமையை நிலைநாட்டி வந்தோம். ஆனால் இப்பொழுது இவை அனைத்துக்கும் ஆதாரமாக, இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் ஒரு நகரமே கிடைத்திருக்கிறது கீழடியில்! தமிழ் மக்கள் துள்ளிக் குதித்துக் கொண்டாட வேண்டிய நேரம் இது! இதுவே இந்துச் சமயத்துக்கு ஆதரவாக இப்படி ஏதாவது ஓர் ஆய்வு முடிவு வெளியாகியிருந்தால் இந்நேரம் அவர்கள் ஐயர், ஐயங்கார், மத்துவர் எனத் தங்களுக்குள் உள்ள எல்லா வேறுபாடுகளையும் மறந்து கொண்டாடித் தீர்த்திருப்பார்கள். ஆனால் நாமோ இப்பொழுதும் திராவிட – தமிழ்த் தேசியச் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்; அதுவும் கீழடியை வைத்தே!

திராவிடம் என்றால் என்ன என்பது பற்றி நம் மக்களுக்குப் பாடத்திட்டத்திலேயே கற்பித்திருந்தால் இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு தறுவாயில் அதைச் சீர்குலைக்கும் அளவுக்கு இப்படி ஓர் அடையாளக் குழப்பமும் தலைக்குனிவும் நமக்கு ஏற்பட்டிருக்காது. எனவே இப்பொழுதாவது திராவிடம் எனும் கோட்பாடு பற்றி, கீழடியை திராவிட நாகரிகம் எனச் சொல்வது சரியா என்பது பற்றித் தீர ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரலாம் வாருங்கள்.

திராவிடம் என்பது என்ன?

தமிழ் மொழியின் இன்னொரு பெயரே திராவிடம். பண்டைக் காலத்திலிருந்தே தமிழ் மக்கள் அயல்நாடுகளோடு வணிகத் தொடர்பு வைத்திருந்தது நாம் அறிந்ததே. அதனால் அந்தக் காலத்திலேயே தமிழ் இனம் உலகெங்கும் அறிமுகமாகி இருந்தது. ஆதலால் அன்றைக்கே வெளிநாடுகளில் தமிழர்களையும் தமிழகத்தையும் குறிக்கச் சொற்கள் உருவாயின. ஆனால் ழகரம் அயல்நாட்டு மொழிகளில் இல்லாததால் அவர்கள் மொழியின் பலுக்கலுக்கேற்பத் (உச்சரிப்புக்கேற்ப) தமிழகம் என்பதை ‘தமிரிகா’ (Damirica), ‘திமிரிகே’ (Dimirike) என்று பலவாறாகவும் தமிழர் என்பதை ‘திரவிடா / திராவிடர்’ (Dravida / Dravidians) என்றும் குறிப்பிட்டனர். இதையொட்டி திராவிடர்கள் பேசும் மொழியான தமிழும் அவர்கள் பலுக்கலில் ‘திரவிடம் / திராவிடம்’ ஆனது!

ஆக திராவிடம் - தமிழ் இரண்டும் ஒன்றே! தமிழின் இன்னொரு பெயர்தான் அது!

இதற்கு ஆதாரம்...?

நிறையவே உண்டு!

முதலில் மொழி அடிப்படையில் பார்ப்போம். மொழியியலில் சொற்பிறப்பியல் (Etymology) என்பதாகவே ஒரு துறை உண்டு. ஒரு சொல் எப்படி, எதிலிருந்து, எவ்வாறு உருவாகிறது என்பதை ஆணி வேர் வரை சென்று அலசும் மொழி அறிவியல் இது.

இதன் அடிப்படையில் தமிழ் எனும் சொல்தான் வெளிநாட்டுப் பலுக்கல்களுக்கேற்ப தமிசு > தமிள் > தமிளா > தமிலா எனக் கொஞ்சம் கொஞ்சமாய் மருவிக் காலப்போக்கில் ரகர ஒலிப்பு இடையில் சேர்ந்து அல்லது சேர்க்கப்பட்டும் மகரம் வகரமாகத் திரியும் திராவிட ஒலிப்பியல்பு காரணமாகவும் ‘திராவிடம்’ ஆனது என்று எழுத்து வேறு ஒலிப்பு வேறாக – அக்கு வேறு ஆணி வேறாக – பிட்டுப் பிட்டு வைக்கிறார் உலகப் புகழ்மிகு இந்திய இலக்கிய மற்றும் மொழியியல் ஆராய்ச்சியாளர் கமில் சுவலபில் அவர்கள்.

இது, இன்ன பிற அறிஞர்களின் இது போன்ற விளக்கங்கள் காரணமாய்த் தமிழ் எனும் சொல்தான் ‘திராவிடம்’ எனும் சொல்லுக்கு மூலம் என்று உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது.¹

அடுத்து வரலாற்று ஆதாரங்கள்!

முழுக்கப் படிக்க - https://agasivapputhamizh.blogspot.com/2019/10/is-keezhadi-a-tamil-civilization-or-dravidian-civilization.html