விஷ்ணுபுரம் – ஜெயமோகன்

varun19
ஜூன் 29, 2019 09:31 பிப
பொதுவாக புத்தக வாசிப்பிற்குப் பிறகு அதைப் பற்றிய விமர்சனத்தை இவ்வலைப்பூவில் பதிப்பது வழக்கம். ஆனால் இம்முறை விமர்சனத்தை முன்வைக்காமல், நாவல் பற்றிய எனது அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.
 
பிரபஞ்சம் என்பது ஒரு அதிர்வு. அந்த அதிர்வை வானம் சங்கீதமாக்குகிறது. காற்று மனம் ஆக்குகிறது. ஒளி வண்ணங்களாக ஆக்குகிறது. நீர் சுவைகளாக ஆக்குகிறது. ஜடம் வடிவங்களாக ஆக்குகிறது. விஷ்ணுபுரம் ஒரு கற்பனை நகரம், இதற்குப் பிறப்பும் இறப்பும் உண்டு. மகாவிஷ்ணு ஒருமுறைத் திரும்பிப் படுப்பது ஒரு யுகம் என்று ஐதீகங்கள் குறிப்பிடுகிறது. காலத்தின் சுழற்சியான யுகம் தொடங்கி அழிவது - இந்நாவலின் மூலம். பல விவரிக்க முடியாத கற்பனைகளையும் தத்துவ ஞானங்களையும் உள்ளடக்கிய பிரம்மாண்டம் விஷ்ணுபுரம்.
 
விஷ்ணுபுரம் மிகவும் சவால் நிறைந்த மற்றும் நன்கு கவனித்து வாசிக்கப்பட வேண்டிய நாவல். இதுபோன்ற கதைக்களத்திற்குள் நான் பிரயாணித்துச் சென்றது இதுவே முதல் முறை, இதுவே ஒரு புது அனுபவமாக இருந்தது. இலக்கியத்தைப் பற்றிய புரிதலில்லாத எனைப் போன்ற சாதாரண வாசகர்களுக்கு இந்நாவல் சிரமமாகத் தோன்றும். மானுடர்களின் ஞானத் தேடல், வாழ்வியல் பற்றிய தத்துவங்கள், அவற்றைப் பற்றிய தருக்கங்கள், ஐதீகம், சமய சிந்தனை, சமணம், பெளத்தம், வைஷ்ணவம் என்ற பல்வேறு வட்டத்திற்குள் நம்மை இழுத்துச் சென்று, அதைப் பற்றிய புரிதலையும் ஆராய்ச்சியையும் வாசகர்களாகிய நம்மிடமே விட்டுச் செல்கிறது.
 
கஜபிருஷ்ட மலை, வராகபிருஷ்ட மலை, சோனா நதி, ஹரிதுங்கா மலை பற்றியக் கற்பனையும் அவற்றின் விவரிப்பும் நம்மை பிரமிக்க வைக்கிறது. இதுபோன்ற கற்பனை விவரிப்பை இதற்கு முன் எந்தவொரு புத்தகத்திலும் கண்டதில்லை. மானுட உளவியல், சிற்ப சாஸ்திரங்கள், மிருக வைத்தியம், தாந்திரிகம் மற்றும் பழங்குடிகளின் சம்பிரதாயங்களை விளக்கமாக அளித்துள்ளார். புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் ஆசிரியரின் உழைப்பு நன்கு தெரிகிறது.  
 
வாசிப்பின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை சரியான புரிதலின்றி, பல நேரங்களில் குழப்பமாகவும் வெற்றிடமாகவும் தோன்றியது. முழு புத்தகத்தையும் வாசித்துவிட முடியமா என்ற வினா தொடர்ந்து எழுந்த வண்ணமிருந்தது. குறிப்பாக கெளஸ்துப பகுதியில் வரும் ஞானசபை தர்க்க நிகழ்வுகளைப் புரிந்துகொள்வதில் சிரமம் அதிகமிருந்தது. ஒவ்வொரு பகுதிகளையும் கடந்து செல்லும் போதும், மறுவாசிப்பு அவசியம் என்பதைத் தெளிவாக உணர்ந்தேன்.
 
எனது வாசிப்பில் அதிக நாட்கள் எடுத்துக்கொண்ட நாவல் இதுவாகத் தானிருக்கும். நூற்றிற்கும் மேற்பட்ட கதைமாந்தர்களை உள்ளடக்கியது, அதில் வந்து செல்லும் சில கதைமாந்தர்களின் பயணம் நம்மில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயப்பாடு இல்லை.
 
நமக்கு அதிகம் பரிட்சயமில்லாத புதிய சொற்கள் புத்தகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. இவை தமிழ்ச் சொற்களா அல்லது சமஸ்கிருதச் சொற்களா என்பதில் குழப்பமே மிஞ்சுகிறது. அதே சமயம் ஆசிரியரின் நுண்ணிய விவரிப்புகளையும், வர்ணனைகளையும் கற்பனை செய்து கொள்வதிலேயே அதிக நேரம் செலவானது. அவற்றின் முழுமையான விவரிப்பை இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது.
 
வாசிப்பிற்குப் பின் இணையத்தில் உலவும் போது, விஷ்ணுபுர நாவலை படிக்கத் தொடங்குவது எப்படி என்பதை ஜெ.மோ பின்வரும் இணைப்பில் தொகுத்துள்ளார். 
 
 
வாசிப்பு அனுபவத்தில் ஒரு பகுதியை மட்டுமே இங்கு தொகுத்துள்ளேன். மீண்டுமொரு முறை இன்னும் சற்று கவனமாக வாசித்து, எண்ணவோட்டங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.