நதிக்கரை ஞாபகங்கள்

kaaviyan
ஏப்ரல் 08, 2019 07:38 பிப
சுடுசோரும், கருவாடும், நெத்திலி மீன் குழம்பும்,
மச்சானுக்கு புடிக்குமுன்னு -
வக்கனையா பரிமாறி,
மென்னு முழுங்கி ஆரம்பிச்சேன்.......
 
பள்ளிக்கூட பீசுக்கட்ட-
தேதி பத்து ஆச்சுன்னு
தாமசு வாத்தியாரு
கடை தெருவுல சொன்னாவ....

 
கழுத்து வரை துக்கமது
தொண்டைய  அடைச்சாலும்
கடல் மாதா புண்ணியத்துல
சோத்துக்குத்தான் பஞ்சமில்லை...
 
கட்லா, ரோகு, வஞ்சரையின்னு
வகை வகையா புடுச்சாலும்
இடைத்தரகர் பகுடி போக- காசு
கிடைப்பதென்னவோ சொச்சமட்டுந்தானே ?
 
ஒசத்தி ரக மீனு வித்தா
எச்சு காசு வருமேன்னு
கிழாங்கு மீன தின்னுத்தின்னே
கால் வயிறு நப்பிக்கிறோம்....
 
கைக்கு எட்டியும் வாய்கெட்டாப்
பொழப்பெல்லாம் நம்மோடு
போகனுன்டி....
 
மீன் குடி இனமென்னும்
கீழ்த்தர பார்வையெல்லம்
மன்ணோடு மறையனுன்டி...

கடுகுமணி குண்டளவும்
சொத்து பத்து இல்லையினும்
பெத்தப்புள்ளையத்தான்‍
நல்லா  படிக்கத்தான் வச்சிடனும்...
 
புயல் சின்னம் அறிவிச்சு
மாதமும் கடந்தாச்சு
வெறுமையும் வறுமையும்
மாறி மாறி வதைக்கிறதே....
 
இடிச்சப்புளி ரசத்ததான்
கரைச்சு நானும் குடிக்கையிலே,
“கடலுக்கு போகலாமுன்னு உத்தரவு வந்துருச்சு”
மாரி அண்ணே ஓடி வந்து
நல்ல சேதி சொல்லிடுச்சே...
 
ஒன்னரை மாசமா
புளிய கரைச்ச வைத்துலத்தான்
ஒத்தையடி வார்த்தையால-சிறிசு
பாலத்தான் காச்சிடுச்சே....
 
வலையத்தான் எடுத்து வை
வகை வகையா புடுச்சு வாரேன்
மச்சினனை கூட்டி வாடி
கயிரத்தான் புடித்திடத்தான்
 
கிழக்குத்தெரு கிட்டு மச்சான்
மேட்டு வீடு மருத முத்து
பறந்தோடி வாங்க மக்கா
கடல் மாதா காத்திருக்கா....
 
அகண்டு பறந்து வலையத்தான் வீசிப்போடு ஐலசா....
நண்டு, இரால், சுறாவெல்லாம் மாட்டிடும்டா ஐலசா....
கஷ்டமெல்லாம் கரைந்தோடிட போட்டிடுடா ஐலசா....
ஐலசா.... ஐலசா..... ஐலசா.... ஐலசா.....

மீன் புடுச்சு சாயங்காலம் வந்துருவேன் ஐலசா....
கருப்பு ஜோடி வளையலத்தான் வாங்கிதாரேன் ஐலசா....
ஐலசா.... ஐலசா..... ஐலசா.... ஐலசா.....
 
எசக்கி பய
எசப்பாட்டு இதமாக பாடி வர,
அண்டை நாட்டு கடற்படைத்தான்
கருப்புக்கொடி காட்டியதே
 
பதினாரு மைல் கடக்கு
இங்க எதுக்கு தடையின்னு
மருத முத்து முழக்கமிட
எங்க நாட்டு எல்லையின்னு
பங்காலி கத கதக்க...
 
புடிச்சிருந்த மீனையெல்லாம்
கடக்குள்ள கொட்டி விட,
பாசத்துல பின்னி வச்ச
வலையத்தான் கிழித்து விட,
உரிமைக்கு குரல் கோடுக்க
முருகேறி போன மக்கா
மறுமுனையில துப்பாக்கி
மாரில் தான் பாஞ்சுடுச்சே !!!
 
பலக்கட்சி திமிங்கலமும்-அவை
குட்டியிட்ட பெரும்படையும்
ஆறுதல் கூறுறேனு
படமெடுத்து வந்தாக‌....
 
இரங்கல் கூட்டமென,
பண முதலைகள் வந்தாக,
மீன் வகை அத்துனையும்
வயிறார திண்ணாக.....
 
அஞ்சாறு மேசை தாண்டி
நொண்டி நொண்டி வந்ததடி
சர்க்கார் ‍‍‍நிவாரண உதவித்தொகை...
 
சண்டியர் கூட்டமெல்லாம்
தெருவெல்லாம் சுத்திடுமே,
ஒண்டியாய் நான் மட்டும்
நாதியற்று நின்றேனே...
 
கட்டுமரமாய் மீண்டு வந்த
உதவி தொகையினிலே,
காட்டுமரமாய் வளர்ந்தேனே
பிறர் உதவியில்லாமல்
 
வருடங்கள் இருபத்திரண்டு
வேகமாய் கடந்த பின்னும்
நெஞ்சில் சுமந்திருந்த வடு
இன்னும் மறையலையே....
 
கடல் தாண்டி
வெளிநாடு ‍‍சென்று விட்டு
நாடு வந்த பெத்த புள்ள
வயிறார சாப்பிடத்தான்
வஞ்சரைய எடுத்து வச்சேன்-ஆனா
பயபுள்ள கேட்டதெல்லாம்
சுடுசோரும் கருவாடும்
நெத்திலி மீன் குழம்பும்..........