விழித்தெழட்டும் வீரமகள்!

வேதாந்த கவியோகி நாகசுந்தரம்
*விழித்தெழட்டும் வீரமகள்!*

அடிமைத்தனம் செய்வார்,
ஆண்களே உயர்வென்பார்,
துடியிடை என்று சொல்வார்,
ஆண்டாள் அன்றே சொல்லிவிட்டாள்
தூங்காதே இனி நீயும் என!
தூக்கமதை தூரவிட்டு
விழித்தெழட்டும் வீரமகள்!

கண்ணை சிறிதசைத்தால்
காதலர் காமுறுவர்
பெண்வேறு கிடைத்துவிட்டால்
பேதையுனை மறந்திடுவார்!
கோதை அன்றே சொல்லிவிட்டாள்
தூங்காதே நீயும் என!
தூக்கமதை தூரவிட்டு
விழித்தெழட்டும் வீரமகள்!

கறிகாய் வெட்டி நீயும்
பரிமாறி யெதெலாம் போதும்
வெளிவேலை எனக்கென்று
விண்ணிலே நீ பறப்பாய்!
விண்ணகரக் பெண் கோதை
வைகுந்தம் நமக்கென்று
வகுத்து விட்டாள் அன்றைக்கே
தூங்காதே இனி நீயும் என!
தூக்கமதை தூரவிட்டு
விழித்தெழட்டும் வீரமகள்!

அவதாரம் எடுத்தாலும்
அக்னியிலே புகு என்பார்
அவரையும் புக வைக்க
அவசரச் சட்டம் வேண்டும்!
தூக்கமதை தூரவிட்டு
விழித்தெழட்டும் வீரமகள்!

சூடிகொடுத்தைதான் 
சூட நீ வேண்டுமென்று
சூத்திரம் செய்து விட்டாள்
சுடர்கொடியும் அன்றைக்கே
தூங்காதே இனி நீயும் என!
தூக்கமதை தூரவிட்டு
விழித்தெழட்டும் வீரமகள்!

இன்றைக்கு மட்டுமல்ல
என்றைக்கும் உன் தினம்தான்
கொன்றைவார் சடையன் அன்றே
கொடுத்து விட்டான் பாதியுடல்!
இயந்திரமாய் இருக்காதே
எதற்கென கணை தொடுப்பாய்!
விழித்துக்கொள் என்றே
வேய்குழலி சொல்லி விட்டாள்!
தூக்கமதை தூரவிட்டு
விழித்தெழட்டும் வீரமகள்!

வேதம் உனக்கில்லையென
வேதாந்தம் தானுரைப்பார்!
பேதமது போய்விடட்டும்!
வேதம் உரைப்பதற்கு,
வாயொன்றே போதுமென
பாக்கள் ஓதிடுவாய்!
பாலும் நெய்யும் வேண்டா,
பார்த்த சாரதியின் பக்தை
சொன்னதைப் போல்
பரவசம் எய்திடுவாய்,
தூங்காதே இனி நீயும்!
தூக்கமதை தூரவிட்டு
விழித்தெழட்டும் வீரமகள்!

விடுதலை வேண்டுமென
வீரமாய் முழங்கி நின்ற
பாரதியின் புதுமையே!
பாரதியின் கவிதைக்கு
பரங்கியர்கள் 
பயந்தோடிவிட்டார்! உண்மை!
பாரதத்தின் மக்களுமா
பாக்களதை மறந்துவிட்டார்?
தூக்கமதை தூரவிட்டு
விழித்தெழட்டும் வீரமகள்!