கல்லறையில் ஓர் காதல் பயணம்_பாகம்1(திகில் தொடர்)

கார்த்திகா    பாண்டியன்
பிப்ரவரி 02, 2019 11:02 முப
 எப்போதும் நெரிசலாக இருக்கும் அந்த இரயில் நிலையம் இன்று சற்று இடைவெளியுடன் காணப்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்தவன் கைகடிகாரத்தை நோக்கத் தொடங்கினான். நேரம் 5 மணி 40 நிமிடங்கள். சற்றும் கண் இமைக்காமல் இரயில் வரும் திசை நோக்கி பார்த்துக்கொண்டிருந்த வருணின் மனதில் ஏதேதோ எண்ணங்கள் அலைகளாக சீரிப் பாய்ந்து கொண்டிருந்தன.

சற்று நேரத்தில் இரயில் நெருங்கும் சத்தம் செவிகளை துளைத்தன. பெட்டிகளுடன் ஆயத்தமானான் வருண். ஒரு வழியாக இரயிலில் ஏறியவன் தன் இருக்கையை தேடிக் கொண்டிருந்தான். இருக்கை எண் 127 AC கம்பார்ட்மெண்டில் ஜன்னலோரமாய் அமைந்திருந்தது. உடைமைகளை பத்திரப்படுத்திவிட்டு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தான். கடந்த கால நினைவுகள் அவனை கசக்கி பிழியத் தொடங்கின. கண்களில் கனவுகளுடன் கல்லூரிச் சாலையில் கால் பதித்த காலங்கள் கண் முன் வந்து போய்க்கொண்டிருந்தன.

(MSC _ கம்ப்யூட்டர் சயின்ஸ்) பட்டதாரியான வருண் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் சிப்காட் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் லீடராக பணிபுரிகிறான். நல்ல வேலை, சொந்த வீடு, நல்ல சம்பளம் என வாழ்க்கை தரம் முற்றிலும் மாறியது அரசு பள்ளியில் பயின்ற அவனது அயராத உழைப்பினால். ஒரு காலத்தில் ஒரு வாய் சோற்றுக்கு திண்டாடிய அவனின் தற்போதைய மாத வருமானம் 1 ,70000 . நீண்ட நாட்களுக்கு பின்பு நீங்கா நினைவுகளுடன் தன் கல்லூரி நோக்கி பயணம் செய்கிறான். களைப்புகள் சூழ்ந்ததால் கண நேரத்தில் கண் அயர்ந்தான்.

நேரம் இரவு 10 மணி இருக்கும் யாரோ தட்டி எழுப்பியது போன்ற உணர்வு கண் விழித்தவன் இறங்க வேண்டிய இடம் வந்ததை உணர்ந்து கொண்டான். பெட்டிகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். இரயில் நிலையத்தை விட்டு வெளியேறியவன் தன் கல்லூரிக்குச் செல்லும் பிரதான பேருந்துகளை எதிர்நோக்கி காத்திருந்தான். 10 நிமிடங்களுக்கு பின்னர் அம்மார்க்கத்தில் செல்லும் பேருந்து ஒன்று நிறுத்தத்தின் முன் நின்றது. மீண்டும் ஜன்னலோர இருக்கையை தேர்வு செய்தவன் நடத்துனரிடம் சீட்டை பெற்றுக் கொண்டு பயணத்தை தொடர்ந்தான். பற்பல சிந்தனைகள் மனதை துளைத்துக் கொண்டிருக்க உணர்வுகளால் உதடுகள் பூட்டப்பட்டிருந்தன.

கனவுகளில் மிதந்தவன் கடைசியில் வந்து சேர்ந்து விட்டான் கல்லூரி சாலைக்கு. நேரம் 12 மணி 7 நிமிடங்கள் ஆயின. பிரதான நுழைவு வாயில் பூட்டப்பட்டிருந்தது. ஊரின் ஒதுக்கு புறமாக அமைந்த கல்லூரி ஒதுக்கப்பட்ட மாளிகை போல் காட்சி அளித்தது. கடந்த காலப் பயணங்கள் கண்களை ஊடுருவ எவரையும் அழைக்க மனமில்லாமல் நீண்ட நேரமாய் வாயில் முன் நின்று கொண்டிருந்தான். இருட்டில் எவரோ அழைக்கும் சத்தம் கேட்டு உற்று நோக்கினான் டார்ச் லைட்டின் ஒளி விழிகளை துளைக்க சற்று நேரத்தில் வாயில் திறக்கப்பட்டது. நடுத்தர வயதுள்ள ஒருவர் வாயில் முன் வந்து நின்றார். பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டான் வருண். பார்த்தவுடன் நலம் விசாரிக்கத் தொடங்கினர் அந்த நபர். எதுவும் அறியாமல் முழித்தவனிடம் என்ன தம்பி என்ன மறந்துட்டீங்களா? நான் தான் வாட்ச் மேன் ஆரோக்கியசாமி என தன்னை தானே அறிமுகப் படுத்தியவனிடம் பேச்சை தொடர்ந்தான் வருண். சற்று நேரம் இருவரும் பேசிக் கொண்டே விடுதியை அடைந்தனர்.

முன்னாள் மாணவர்களுக்கான விழா என்பதால் விடுதியில் உள்ள அனைத்து அறைகளும் ஏற்கனவே பிறரால் தேர்வு செய்யப்பட்டிருந்தன. விடுதியை அடைந்த அவன் வாட்ச் மேனை வழியனுப்பி விட்டு வார்டானிடம் பேசத் தொடங்கினான். அறைகள் அனைத்தும் நிரம்பி விட்ட காரணத்தால் முதலில் வெளியில் சென்று தங்குமாறு அறிவுறுத்தப் பட்டன். மீண்டும் பெட்டியை எடுத்துக் கொண்டு வாயில் நோக்கி மெல்ல நகரத் தொடங்கினான். சுற்றிலும் மயான அமைதி எதிரில் நிற்பவர் முகம் கூட தெரியா வண்ணம் கும்மிருட்டு சூழ்ந்திருக்க நடையை தொடர்ந்தான். பாதி தூரம் சென்ற பிறகு யாரோ அழைக்கும் ஓசை திரும்பி பார்த்த அவன் வார்டன் தன்னை நோக்கி விரைவதை அறிந்து அங்கேயே நின்றான். வார்டன் அவனை அடைந்தவுடன் sir இப்போதைக்கு ஒரு ரூம் மட்டும் freeya இருக்கு நீங்க விருப்பப்பட்டா அங்க தங்கிக்கலாம் என்று கூறியவனிடம் சட்டென்று தலையசைத்து சம்மதம் தெரிவித்தவன் அவரை பின்தொடர்ந்தான். பணம் செலுத்திய ரசீதுடன் அறையின் சாவியை வாங்கிக் கொண்டு விடுதியின் மேல் தளம் நோக்கி நகர்ந்தவன் சாவியில் பொறிக்கப் பட்டிருந்த அறை எண்ணை ஆராய்ந்து பார்த்தான். அளிக்கப்பட்ட அறை எண் 127 மேல் தளத்தின் கீழ் விளிம்பில் இருந்தது. அறையை திறந்து உள்ளே நுழைந்தவன் மீது ஒட்டடையில் உள்ள எட்டுக்கால் பூச்சி தவழ்ந்தது பதறாமல் உதறி தள்ளிவிட்டு புறம் சென்றவன் பெட்டியை மேசை மீது வைத்து விட்டு பூட்டப்பட்டிருந்த ஜன்னல்களை திறந்தான். அறை முழுவதுமாக சுத்தம் செய்யப்படாமல் இருந்தது.

காற்றின் சலசலப்புகள் செவியை பிழிய இமைகள் மூடி சுவற்றில் சாய்ந்து கொண்டிருந்தான். சில வினாடிகள் கழித்து எவரோ அழைக்கும் ஓசை செவியை அடைய பூட்டுப் போட்டிருந்த இமைகள் சட்டென திறந்து கொண்டன. குரல் வந்த திசை நோக்கி மெதுவாய் திரும்பினான் வருண்.
 
_ பயணங்கள் ஓய்வதில்லை
காத்திருங்கள் அடுத்த பதிவில் தொடர்கிறேன்.