உங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது? (2/2) - தமிழ் வாழவும் தமிழர் தமிழராக வாழவும் ஒரு முழுமையான செயல்திட்டம்

இ.பு.ஞானப்பிரகாசன்
November 28, 2018 07:24 பிப
தன் முன் பாதியில் தமிழர் வாழ்வில் தமிழின் பயன்பாடு எந்த அளவுக்குப் பின்தள்ளப்பட்டிருக்கிறது என்பதை உரிய காரண ஏரணங்களோடு (reasons & logic) பார்த்தோம். இப்பகுதியில், அதைச் சரி செய்ய - தமிழர் வாழ்வில் தமிழை முதன்மை பெறச் செய்ய - தமிழின் எதிர்காலத்தை உறுதி செய்ய, தமிழர் தமிழராக வாழ என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு முழுமையான செயல்திட்டமாகவே பார்க்கலாம்.
 
நான்கு காரணங்கள், நாலாவிதமான வழிமுறைகள்

தமிழர் வாழ்வில் தாய்மொழிக்கான இடம் உறுதிப்படுத்தப்பட வேண்டுமானால், தாய்மொழியைப் பயன்படுத்துவதில் நமக்கு இருக்கும் அக்கறையின்மைக்குக் காரணம் என்ன என்பதை முதலில் ஆராய வேண்டும்! அவற்றைக் களைந்தாலே தமிழ்ப் பயன்பாடு தானாகப் பெருகும்.

இதற்கு மொத்தம் நான்கு காரணங்கள் இருக்கலாம்.
 
     ✖ தாய்மொழியைப் பயன்படுத்துவதில் கூச்சம்
     ✖ ஆங்கிலம் இருக்கத் தமிழை எதற்காக நாட வேண்டும் என்னும் போக்கு
     ✖ தமிழ் மொழியின் சிறப்பு உயர்வு முதலானவற்றை அறியாமை
     ✖ தமிழில்லாத சூழலில் வளர்தல்

இந்தக் காரணிகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே ஆராய்ந்து இவற்றைக் களைவதற்கான வழிகளைப் பார்ப்போம்.