பாண்டிச்சி நாவல் குறித்து

ஆய்க்குடியின் செல்வன்
வாழ்த்துக்கள் - Alli Fathima K (அல்லி பாத்திமா)

 ஒரு கையில் பேரக்குழந்தையும் மறுகையில் தனது முதல் படைப்பான “#பாண்டிச்சி” நாவலையும் பெருமையுடன் ஏந்தி நிற்கும் எனக்கு முன்னரே என்னைப் போலவே கேரளாவில் பிறந்து இன்றும் குமுளி அரசுப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றும் நூலாசிரியர் நாவலாசிரியர் கவிஞர் #அல்லி_பாத்திமா அவர்களுக்கு பொதிகையின் சாரலோடு எங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொள்கின்றேன்.

 ”பாண்டிச்சி” நாவல் முனைவர் மா. நயினார் அவர்களின் வாழ்த்துரையினோடும், அண்ணன் என அனைவரும் கொண்டாடும் ஆசான் அறிவுமதி அவர்களின் அணிந்துரையினோடும், நூலின் பின் முகப்பில் அண்ணன் கவிஞர் பழநிபாரதி அவர்களின் நூலைப்பற்றிய குறிப்பினில் “பச்சைப் பசும்வனம்.. பாண்டிச்சியின் மனம்... எது? இரண்டும் ஒன்றுக்குள் ஒன்றான பேரழகுதான் இந்தக் கதைவெளி என்பதாக இந்த நாவல் நமது கைகளுக்கு படைக்கபட்டிருக்கின்றது.

 நாம் படிக்கும், வாசிக்கும் அல்லது எழுதும் கதைகளில் எல்லாம் கதையின் ஒரு உருவமாக நம்மை பாவித்துக்கொள்வோம். அந்த உருவம் சிரிக்கும் பொழுதும், அழும் பொழுதும், கோவப்படும் பொழுதும் நாமும் விழி உயர்த்தியும், தாழ்த்தியும், கசிந்தும் பயணம் செய்வோம். செய்வோர்கள் இன்னும் இருக்கின்றோம். கவிதைகள் எனது பிரதான படைப்புகளாக இருந்தாலும் கதைகளின் மேல் இருக்கும் வாசிப்பனுபவமும் பற்றும் என்னை தேர்ந்த வாசகனாக வழிச்செய்கின்றது.

 நூலினை பெற்று எப்படியும் 25 நாட்களுக்கு மேல் இருக்கும் குடும்பத்தின் அடுத்த தலைமுறையின் புதுவரவின் களிப்பிலும், பயணத்தின் களைப்பினாலும் இன்று காலைதான் பாண்டிச்சியின் பொன்வளக்காட்டிலிருந்து மனமின்றி விடைபெற முடிந்தது.

 நாவலாசிரியர் அவர் சூழலை ஒட்டிய கதைகளில் மலைவாழ் மக்களின் வாழ்வியல் வியப்பை, வரலாற்றை, கதைகளை, காதலை, இசையை, மரபை, மனிதர்களை, சூழலை, காட்டை நேசித்தை அதன் மடியில் தவழ்ந்து நூலாக்கியிருக்கின்றார்.

 நூலின் கதைப்பற்றி பேசும் முன்னே நூலாக ஆனக் கதையினை பேசிக்கொண்டிருக்கலாம் போல. அவர்களின் வாயிலில் இருக்கும் அழைப்புமணி ஓசையைப் பற்றி நாவலில் வருமிடத்தினில் நான் ”இசை”யினில் ”மதி” கரைந்து போயிருந்தேன்.

 ”பாண்டிச்சி” முதுகுடி பொன்வளக்காடாக இயற்கையோடு சேர்ந்து மன்ணையும் காற்றையும் தெய்வமாக இயந்திரதனமானவர்களாகியவர்களாகிய நம்மில் இருந்து மன்னிக்கவும் அவர்களிலிருந்து நாம்தான் வந்துவிட்டோம். பெண்ணுக்கே அதிகாரம், மூடநம்பிக்கை என தெரியாமலே நாம் முடக்கிபோட்டதை இன்றும் தொடர்பவர்களாகவும் இன்னும் இன்னும் என வியப்பு நிறைந்த மக்களின், மனிதர்களின் வாழ்வியல் சார்ந்த நாவலில் தனது கற்பனை ஓட்டங்கள் சிலவற்றையும் இணைத்து தனது முதல் நாவலை நமது கைகளில் தவழவிட்டிருக்கின்றார்.

 திரட்டிய எல்லாவற்றையும் எழுதினால் ஆய்வு நூலாக ஆகிவிடுமோ என் எண்ணிய நாவலாசியர் கற்பனை ஓட்டத்திற்கு தேவையானவற்றை மட்டும் எழுதியிருப்பதாக நூலாசிரியர் உரையில் குறிப்பிட்டிருந்தாலும், நிச்சயம் இந்த நாவல் ஆய்வுக்கு உட்பட்டதே. உணர்ச்சிமிகுதியில் கருத்துகளை பகிர்ந்துகொள்ளவில்லை. உணர்ச்சிகளை உறுதிப்படுத்தவே கருத்துக்களை உளமார உரைக்கின்றேன்.

நாவல் எழுதுவதற்கு முன்பிருந்தே கவிதை எழுதும் முகம் கொண்ட அல்லி பாத்திமா அவர்களின் “பாண்டிச்சி” நாவலின் நடையினில் கவிதைச் சொற்களாக நிறைந்து நிற்கின்றன. நிறைய அடிக்கோடிட்டு வந்திருந்தாலும் ஓரு சிலவற்றை மட்டும் பதிவிடுகின்றேன்.

#1 “தாகம் கொண்டு தண்ணீர் தேடி அலைந்தவன் குளிரோடையைப் பாத்த நிறைவில் நின்றான்.”

#2 “அந்த அறையின் காற்று முழுவதையும் அவளே எடுத்துச் சென்றுவிட்டதைப் போல் ஒரு வெற்றிடம் நிரம்பியது.”

#3 “பாண்டிச்சியின் அவிழ்ந்த கூந்தல் ஒரு திரை போலவும் அதில் வரையப்பட்ட ஓவியம் போல் அவள் முகமும் ஜொலித்தது.”

மூங்கில் பூத்து நல்லது நடக்கும் என அவர்களின் நம்பிக்கை வெற்றிப்பெறட்டும். செல்வன் எனும் செல்வனாக ”பாண்டிச்சி” நாவல் நான்கு திசைகளிலும் காணும் ஒரு பொறியாளனாக என் கண்முன்னே நிகழ்ந்ததாக நினைவில் பதியப்பட்டிருக்கின்றன.
நாவலின் மூன்றாவது பகுதியில் வரும் “ நாம எல்லைப்பகுதியை நெருங்கிட்டோம்னு நெனைக்கிறேன்... கொஞ்சம் குளிர்காற்று அடிக்குது பார்.. கேரள மலைப்பகுதிகளில் இருந்து வரும் சுகமான குளிர் இது” இந்த வரிகள் நாங்கள் ஆய்க்குடியில் குளிர்ந்த காற்று வீசும் பொழுதுகளில் சொல்வதாகும்.

காதலைப்பற்றி நாவலாசிரியர் எண்ண ஓட்டமாக அழகாக புனைந்தது “மனிதனின் கால ஓட்டத்தில் காதல் ஒரு வழித்தடை, ஒழுங்காக ஓடும் வயதை இழுத்துப் போட்டு விழுங்கும் பெரும் சுழி, வாழ்க்கை முழுதும் ஒன்றாய்ப் பயணிக்க முடிந்தால் அதைப்போல இன்பம் எதிலும் கிடையாது. ஆனால் சேர முடியாமல் போனாலோ, அந்த வலியை எதனுடனும் ஒப்பிட முடியாது”.

சிறுகதைகளுக்கான நூற்றாண்டு கொண்டாட்டத்தில் “பாண்டிச்சி” நாவல் நிறைவான நிறைய கதைகளை என்னுள் விதைத்திருக்கின்றது என்றே சொல்லலாம். நாளை மகனுக்கு பெயரிடுகின்றோம் அவன் பாதங்கள் இந்த மண்ணையும் நேசிக்க கற்றுத்தர அல்லி பாத்திமா அவர்களின் நாவலில் இருந்து குட்டி குட்டிக் கதைகளை எடுத்து வைத்திருக்கின்றேன்.

உங்களின் அடுத்த படைப்பிற்கும் முதல் வாசகனாக ஆய்க்குடியின் செல்வனின் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் - அல்லி பாத்திமா

வெளியீடு : தமிழ் அலை
தொலைபேசி : 044 2434 0200
மின்னஞ்சல்: tamilalai@gmail.com