மனிதப் பார்வையில் பாவத்தினால் இழப்பு யாருக்கு???

சுவின்
October 05, 2018 02:30 பிப
மனிதப் பார்வையில் பாவத்தினால் இழப்பு யாருக்கு???

பாவம் என்பது மாற்ற இயலா, மன்னிக்க இயலா, மறக்க இயலா குற்றமே என மானிட சமுதாயம் எண்ணுகிறது. மேலும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது நாம்; அல்ல மாறாக கடவுளே என்ற சிந்தனையில் உள்ளனர். ஏன் இவ்வாறு சொல்கிறேன் என்றால், சற்று கவனமாக கவனிக்கவும்: நாம் ஒரு தவற்றை செய்கிறோம், பின்பு அத்தவற்றிற்கு நாமேதான் காரணம் என்பதை அறிந்தவுடன் சம்பந்தப்பட்ட நபரிடம் மன்னிப்பு கேட்கவும், அவரோடு உள்ள உறவை புதுப்பித்துக் கொள்ளவும் ஒருநாளல்ல மாறாக பல நாள்களானாலும் காத்திருப்போம். ஆனால் பாவத்தை பொறுத்தவரையில் (அல்லது) இறைவனின் மீதுள்ள நம்பிக்கை அடிப்படையில் பார்க்கும்போது நமக்காக ஒவ்வொரு விநாடியும், ஒவ்வொரு நிமிடமும் என் மகள் (அல்லது) மகன் மனம் திருந்தி என்னிடம் வரமாட்டார்களா என ஏங்கிக் கொண்டு காத்திருக்கிறார் இறைவன். 
பாவம் செய்தது யார்? நாமா? (அ) கடவுளா?. நமக்கு ஒரு துன்பம் வந்தால் உடனே கடவுளைத் தேடுவோம், எதற்காக சுகம் பெறவும், பெற்றப்பின் கடவுள் யாரோ? ஆப்படி ஒருவர் இருக்கிறாரா! ஏன்ற சிந்தனையில் வாழ்கிறோம். ஒருவேளை அத்துன்பம் உடனே குணமாகவில்லையென்றால் அப்போது தெரியும் தவறு செய்தது யாரென்று. அது வேறு யாருமில்லை இறைவன்தான். அந்த நேரத்தில் அவர் கேட்கின்ற அமுத வாhத்தைகளோ பல, அதுதான் துன்பத்தை கொடுத்தது கடவுள், நோயினை கொடுத்தது கடவுள், இழப்பை கொடுத்தது கடவுள் என சொல்லிக் கொண்டே செல்வோம். இப்படி இவற்றையெல்லாம் கடவுள்தான் தருகிறாரென்றால் ஏன் இன்பத்தையும், நலத்தையும், வசதியையும், உறவையும், கல்வியையும், பெருஞ்செல்வமான குழந்தைகளையும், வாழ்க்கையையும், உறவிடத்தையும், உணவையும், காற்றையும், நீரையும், நிலபபுலன்களையும் இன்னும் பலவற்றை தர வேண்டும். இவைகள் இருக்கும்போது கடவுள் உனக்கு யாரோ? ஆனால் வாழ்க்கையின் சிறுபகுதிகளான துன்பம், நோய், இழப்பு வந்தால் மட்டும் மறைந்த இறைவன் வெளிச்சத்திற்கு வருகிறார்;. தகுதியற்ற, அவருடைய காலடி தூசிக்குகூட ஒப்பிட முடியாத நம்முடைய கண்ணுக்கும், வார்த்தைக்கும், எண்ணத்திற்கும் தெரிகிறார். 
இறைவன், தானே நேரடியாக வந்து உதவுவதல்ல மாறாக நம்மைப் போல மானிட சமுதாயம் அதாவது அனைத்தும் இறைவன் கையில் என்று தங்களுடைய வாழ்வை ஒப்படைத்தவர்கள் (குருக்கள் மற்றும் கன்னியர்கள் அல்லாதவர்களும் இக்கூற்றுக்கு உட்பட்டவர்கள்), மேலும் சிந்தையில் கூட பிறருக்கு நினையாதவர்கள் இப்படிப்பட்ட சான்றோர்கள் வழியாகவே நமக்கு நன்மைகளை செய்கிறார். ஆனால் நாம் உறவு வேண்டாம், உதவி வேண்டாம் எனக்கு எல்லாம் தெரியும் என வாழ்கிறோம், வாழ்ந்தப்பின் வருந்துகிறோம், வருந்தியப்பின் சாகிறோம். ஆனால் ஒன்று மட்டும் உறுதி இறைத் திருவுளம் இல்லையெனில் ஒரு விநாடிக்கூட உயிர் வாழ முடியாது. பாவத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது கடவுளல்ல மாறாக நாமே, ஆனால் நம்முடைய சிந்தனையைப் பொறுத்தவரை பாவத்தினால் வருந்துவது கடவுள் என்று. 
பாவத்தை ஓர் அழுகிய பழத்திற்கு ஒப்பிடலாம். ஏனென்றால் ஒரு அழுகிய நிலையில் உள்ள எந்தவொரு பழமானாலும் மற்ற எல்லா பழங்களையும் அழுக வைத்து தேவையற்றதாக மாற்றிவிடும். அதுபோல ஒரு பாவமானது பல பாவத்தை ஈன்றெடுத்து மனித வாழ்வையே சீரழித்து விடுகிறது. ஏவ்வாறெனில் ஒரு பண்பான தாழ்வு மனப்பான்மையை எடுத்துக்கொள்வோம். இது எந்தளவு மனித வாழ்வை ஒரு கொடிய பாதையில் வழிநடத்துகிறது என்பதை நாம் அறிய வேண்டும். இந்த தாழ்வு மனப்பான்மையானது தன்னால் பலவற்றை செய்ய முடியாது என்ற நிலையாகும்ஃ சிந்தனையாகும். இதனால் பிறரது வாழ்வையும், முன்னேற்றத்தையும் கண்டு பொறாமைக் கொள்ளும் நிலையாகும். இந்த பொறாமைதான் பின்பு மிகப்பெரிய கொடிய செயல்களை பிறருக்கெதிராக செய்ய வைக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது உறவுநிலைகள்தான் என்றால் அது மிகையாகாது. இத்தகைய நிலையைதான் பாவம் உண்டாக்குகிறது. 
பாவத்தினால் நாம் இழப்பது, “கடவுளோடு உள்ள உறவு, தன்னோடு உள்ள உறவு, பிறரோடு உள்ள உறவு, இயற்கையோடு உள்ள உறவு. மேலும் இன்பம், நல்வாழ்வு, நிம்மதி, தூக்கம், வசதி, செல்வஙகள் இன்னும் பலவும் உள்ளன.” ஆனால் அந்தோ பரிதாபம்! ஏனென்றால் இத்தகைய இழப்புகளையெல்லாம் அறியா மனிதர்களாக நாம் இவ்வையகத்தில் பவனி வருகிறோம். எனவே பாவம் என்பது கடவுளுக்கெதிரான குற்றம் மட்டுமல்ல மாறாக நமக்கும், பிறருக்கும், இயற்கைக்கும் எதிரான குற்றம் என்பதை உணர்வோம், தெளிவுப் பெற்று பாவத்தை வெல்லுவோம், இணைவோம் அனைவரில்........!
பாவமே உன் கொடுக்கு எங்கே? அது என் காலடிக்கு கீழே என்போம். இறைவா!

பாவத்தினால் இழந்தோம் பலவற்றை
பாவத்தை இழந்தோம்      பெற்றோம் பலவற்றை
 
பாவமே உன் முடிவுத் தொடரும்..
ம.மரிய சுவின்