பரஸ்பர பிரிவு

சுரேஸ்
ஆகஸ்ட் 24, 2018 07:02 பிப
Let’s breakup

என்னவென்றே சொல்லாமல் திடீரென நம் காதலை விட்டுவிட்டு பரஸ்பரமாக பிரிந்து விடுவோம் என்றாய்…
என்னால் உன்னைப்போல அப்படி ஏதும் சொல்லமுடியவில்லை
அப்படி சொல்லிட எனக்கு எந்த காரணமும் சிக்கவில்லை
நீ என்னை ஏன் விட்டு சென்றாய் என்பதற்க்கு…
உன்னைப்போல என்னால் அவ்வளவு எளிதாக பிரிந்து செல்ல இயலவில்லை நம் காதலை…
இயல்பாக அனுதினமும் என்னை எழுப்பும் உன் குறுஞ்செய்தி இப்பொழுது இல்லாமல் போகும் போதும்
என்னை தினமும் நீ சந்திக்க காத்திருக்கும் இடத்தை நான் இப்பொழுது கடந்து செல்லும் போதும்
யாராவது உன் பெயரை யதார்த்தமாக உச்சரிக்கும் போதும்
நீ கொடுத்த பரிசுப்பொருளை யதார்த்தமாக பார்க்க முற்படும் போதும்
நாம் முதன்முதலாக ஒன்றாக சேர்ந்து பயணித்த நாளின் பேருந்து பயணச்சீட்டு முதல் பல பொருட்களை சேமித்து வைத்த நான் இன்று என் கண்ணில் அது படும்போதும்
உனக்கு பிடிக்கும் என்று கடலைமுட்டாயை வாங்கியபின்பு அதை உனக்கு சொல்ல என் அலைபேசியை எடுத்து சொல்ல முடியாமல் நான் தவிக்கும் போதும்
சோர்வாக நான் இருப்பது தெரிந்தால், எளிதாக இயல்பு நிலைக்கு மாற்றிடும் நீ இப்போது இல்லாமல் தீண்டப்படாத பெண் போல செய்வதறியாமல் தனிமையில் நான் இருக்கும்போதும்
நீ முதன்முதலில் மஞ்சள்சட்டையில் உன் காதலை சொல்லாமல் சிக்கித்தவித்து திணறிய நாட்களை என் நாட்காட்டி ஞாபகப்படுத்திய போதும்
எப்போதும் பேருந்தில் இடப்பக்கம் உட்கார சொல்லும் உன்னை காயப்படுத்திட வலப்பக்கமே அமர்ந்து சென்று பின் உன் கோபத்தை சமாதானப்படுத்த நான் விழைந்த போதும், இப்போது தானாகவே இடப்பக்கம் அமர்ந்து உன் நினைவிகள் என்னை குத்திக்கிளிக்கும் போதும்
காதலர்தினத்தை உலகமே சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் உணர்ச்சிகளற்ற ஜடமாய் அலுவலகத்திலிருந்து என் வீட்டிற்க்கு பேருந்தில் நசிங்கியும், கசங்கியும் நான் சென்றுகொண்டிருக்கும் போதும்
பலமுறை நம்மை நனைத்த கடற்கரை என்னை மட்டும் நனைத்து உன் ஞாபகங்களை உணர்த்திய போதும், யாருக்கும் தெறியாமல் உன் நினைவுகளை கடல் நீரில் கரைக்க நான் முற்பட்டு தோற்ற போதும்
இன்று ஏதோ ஒரு விசேசமான நாள் என்னவென்று யோசித்து பின் இன்று உன் அம்மா அப்பாவின் திருமண நாள் என்பதை சற்று ஞாபகப்படுத்தி, கடந்தமுறை நடந்த விழாவைப்பற்றி நீ இரவு இரண்டு மணிவரை விவரித்த நிமிடங்களை நினைத்துப்பார்க்கும் வேளையிலும்
அப்படி நாமும் நம் திருமண நாட்களையும் விசேசமாக கொண்டாட வேண்டும் என நீ என்னிடம் கண்டிப்புடன் சொல்லிய நாழிகை இப்பொழுது என்னை தீண்டிய போதும்
உனக்குப்பிடித்த மீன்குழம்பை நான் மட்டும் தனிமையில் சுவைக்கும் போது, உன் நினைவு என்னை ஆட்கொண்டு என் கண்ணீரை வெளியேற்றிய தருணம் யாரும் பார்த்திராது, காரம் கொஞ்சம் அதிகம் எனக்கூறி கண்ணீரைத்தொடைக்காமல் நான் எழுந்து வந்தபோதும்
எப்படி நான் சொல்வேன் உன்னை பிரிந்து செல்வேன் என்று
கடந்து சென்ற நாட்கள் என்னை ஆசுவாசப்படுத்தி
என்னை நானே தேற்றி எனக்கு நானே ஆறுதல் தந்து
நீ இல்லாத தனிமையை மெல்ல கடந்து செல்ல எத்தணிக்கும் போதும்
உன் குறுஞ்செய்தி இல்லாத விடியலை ஏற்றுக்கொள்ள நான் பழகிக்கொண்ட போதும்
வெளியில் தனியாகப்போய் பழகியிருக்கும் போதும்
தனிமையில் என் உணவை நானே வாங்கி சுவைக்க மாறிய போதும்
சிறந்த தேனீர் என் நீ சொன்ன கடையில் அதை நான் மட்டும் தனியாக சுவைக்க பழகிய பின்னும்
நாம் சந்தித்துப்பழகிய இடங்களை பார்த்து வேகமாக கடந்து செல்ல மனசு சொன்ன போதும் இயல்பாய் அங்கு சற்று அமர்ந்து பின் எழுந்து சென்ற போதும்
நாம் ஒன்றாக கேட்டு ரசித்த பாடல்களை நான் தனியாக ரசிக்க பழகிக்கொண்ட போதும்
உன்னை சந்திக்காமல் உன்னிடம் பேசாமல் இருந்து இப்போது நாட்கள் மாதங்களாக காலம் கடந்து சென்ற பின்னும் இயல்பாய் என்னை நான் நகர்த்திக்கொள்ளும் போது
இன்னும் இதுபோல பலமுறை நான் எனக்குள்ளே தோற்று அழுது புரண்டு பின் என்னை நானே தேற்றிய போதும்
உன் ஞாபகங்களால் எனக்குள்ளே நான் என்னை பலமுறை உடைத்து நொருக்கிய பின்னும் என் வாழ்க்கை உன்னோடு முடிந்துபோக வில்லை என எனக்கு தோன்றியபோதும்
முற்றிலுமாக உன்னை என்னிடமிருந்து பிரித்து வெளியில் நான் எறிந்து செல்ல தைரியம் நான் அடைந்த பிறகு
அப்போது வந்து நானும் உன்னிடம் சொல்வேன்
முற்றிலுமாக உன்னிடமிருந்து என்னை பிரித்து செல்கின்றேன் என
Let’s breakup

என்னை உன்னிடமிருந்து பிரித்து கொள்ள முடியும்
என்ற நம்பிக்கை எனக்கு பிறந்தபோது
ச. சுரேஸ்குமார்