ஒரு நண்பன் வேண்டும்

முகில் நிலா
ஆகஸ்ட் 08, 2018 11:03 பிப
எப்போதும்
விரல் பிடித்தபடி
என்னை வழிநடத்த !

என் சோகங்களுக்கு
மடி தந்து
தலை வருட!

என் முகம்
பார்த்து மட்டுமே
பேசிச் சிரிக்க!

தெரியாமல் என்
கால் இடறிவிழுந்தாலும்
பதறி வந்து தோள்கொடுக்க!

முடியாத நேரத்தில்
முகம் வருடி
உச்சியில் முத்தமிட!

எங்கு சென்றாலும்
எவர் இருந்தாலும்
என் தோழி இவளென
கர்வமாய்ச் சுற்றித்திரிய!

ஆடை நகர்ந்தாலும்
தயக்கமின்றி
சீர்படுத்தச் சொல்ல!

கண்களைத் தாண்டி
நம்பிக்கை என்னும் வேரை
மனதுவரை துளிர்விடச்செய்ய!

கூச்சமேதும் இல்லாமல்
நெருங்கி நின்று
புகைப்படமெடுக்க!

நடுநிசியானாலும்
குரல் நடுக்கமின்றி
நட்பாய்ப் பேசிட!

யாவற்றுக்கும் மேலாய்
காதலென்றும் காமமென்றும்
பிதற்றாத அன்பினை

வாழ்நாள் முழுக்க
அள்ளித் தந்திட
ஒரு நண்பன் வேண்டுமெனக்கு !

-முகில் நிலா தமிழ்