விலைமகள்

முகில் நிலா
ஆகஸ்ட் 08, 2018 09:00 பிப
பெண்ணினமே நானும் !
அச்சம்,மடம்,
நாணமெல்லாம்
எமக்கு இருப்பதில்லை!

சூடும் மல்லிகை உமக்கு மணக்கலாம்
எமக்கது சதைஅழுகும் வாசனை!
உரசுவதும் தொடுவதும் உமக்கின்பமளிக்கலாம்
எமக்கது எரிச்சலூட்டும் அருவறுப்பு!

கிளர்ச்சி அடைய உமக்கென் உடல்தோற்றம் போதுமானதாய்!
எமக்கு ஆறுதலாய் தலைசாய்த்து
அன்போடு தரும் முத்தம் தேவையானதாய்!

முக்காடிட்டபடி முழுஇரவில் எம் கதவுதட்டும் உம்மைப்போல்
நாம் பகலிலும் கூட
நல்லவளாய் வேடம் தரிப்பதில்லை!

அதீத உச்சம் உமக்கு ஆனந்தமாகலாம்
தரப்போகும் பணமே எமக்கானந்தம் !
அழகியென சுற்றிவந்த எவருமறியார்
எம் தோல்கூட ஓர்நாள் சீல்பிடிக்குமென!

போகட்டும் எம்மரணம் நாமே முடிவுசெய்தோம்
இறந்தபின் தூக்கிப் போட
எவருமே வரமாட்டீர்கள் என்பதுவும்
அறிந்தேயிருப்பதனால்

எப்போதும் உம்மோடு எமக்கு ப்ரியமேதும் வளர்வதில்லை
பிடித்தமாய் எவரையும்
உறவாய் கொள்வதுமில்லை!

இரவெல்லாம் எம் மடிகிடந்த
நீரேதான்
பகலில் எனை பரிகாசம்
செய்கிறீர்
உம் பத்தினி மனைவியிடம்
வேசி இவளென !

எம்மிடம் வந்தவனே
இராமன் நீயென்றாள்
நான் வேசி எப்படியாவேன் ?
எனக்கேட்கத்தான் நினைத்தேன்!

பெற்ற பணம் உருத்த
வாய்மூடி மெளனிக்கிறேன்!