பசி

முகில் நிலா
ஆகஸ்ட் 07, 2018 10:01 முப
நா வறண்டு
நடை தளர்ந்து
உடல் சுருண்டு 
நடைபாதையில் 
கிடக்கிறேன்! 

தட்டை ஏந்தவில்லை
என் தன்மானத்தை ஏந்தினேன் 
தரங்கெட்ட வார்த்தையில் 
தள்ளிப் போ எனச் சொன்ன
தனவந்தனுக்கு தெரியுமா ? 

என் வயிற்றின் கொடும்பசி! 

எச்சில் இலைகளுக்கு 
நாய்களோடு கடும்போட்டி 
ஈமொய்த்ததென்றாலும் 
இல்லை அறுவருப்பு ! 

காது அடைக்க 
கை நடுங்க 
கண் இருள 
கையேந்தும் என் கனவுகள் 
முழுதும் சோற்றுப் பருக்கைகளே! 

ஓட்டுப் போடும் உரிமை உண்டு 
ஒட்டுப் போட்ட துணியுண்டு 
நடைபாதை வீடுண்டு 
நானும் மனிதனென சொல்லிக்கொள்ள 
மனதுக்குள் கலக்கம் தோண்றுவதுண்டு! 

வயோதிகம் நோயென்றாள் 
வறுமையும் கொடியநோய் 
வயிற்றுப் பசி தீர்க்க 
வழியற்ற ஓர் நாளில் 
பிணமாகக்கூடும் 
விலகி நடந்து போகாதீர்கள் 
பசிக்கலாம் அப்போதும் என்வயிறு 
உணவிட்டுப் போங்கள் 

உயரற்ற என் உடல்மீதும்! 

-முகில் நிலா தமிழ்