எட்டு வழிச்சாலை

முகில் நிலா
ஆகஸ்ட் 06, 2018 10:58 பிப
சேத்துப் பாதையில 
தார் ஊத்த வந்திங்களே 
சோத்துக்கு என்ன செய்ய 
சொல்லுங்க எசமாங்களே! 

வாழக்கன்னு வாங்கி நட 
வங்கியில கடன் வாங்கி 
வட்டிகூட கட்டலையே 
வாரிச்சுருட்டுன்னு
வவுத்துல அடிக்கிறீங்களே ! 

சோளப்பயிர் விளைய
வாங்கி வச்ச உரத்துக்கு 
தவணையின்னும் கொடுக்கலியே 
தகராறு செய்யுறேன்னு 
தள்ளி இழுத்துப் போறீங்களே! 

பொய்ச்ச மழை பேஞ்சிருச்சி 
தென்னை குலை தள்ளிருச்சி 
அடகுவச்ச தாலிக்கொடி 
 மீப்பேன்னு நம்பினேனே 
நெனப்புல தார் ஊத்திப் போறீங்களே! 

தொப்புள் கொடி உறவாட்டம் 
தொடர்ந்து வரும் பந்தத்தே 
லத்தி வச்சி அத்தெரிய 
அய்யா  கார் ஏறி வந்தீங்களா? 

காராம் பசுவு மேஞ்ச நிலம் 
வேர்வை பட்டே விளைஞ்ச நிலம் 
பத்து தலக்கட்டா காப்பாத்தி வச்ச நிலம் 
இல்லேனு சொல்லுறீங்க
கழுத்தப் புடிச்சுத் தள்ளுறீங்க ! 

ஏரோட்டும் நிலமெல்லாம் 
தார் ஊத்தும்  எசமானே 
ஏழை சனங்க எங்க 
வவுத்துல அடிச்ச காசு  
உங்க பசிக்கு உணவாகுமா? 
 தின்னக் குடல் இடம்தருமா? 

-முகில் நிலா தமிழ்