கடவுள் தெரிகிறார் - 3

பிறைநேசன்
May 31, 2018 09:31 பிப
“நானே அனைத்துமாக இருக்கிறேன். எனது முடியையும், அடியையும் பிரம்மா விஷ்ணுவாலும் கூட கண்டடைய முடியாது” என்று சிவன் காட்டியதாக திருவண்ணாமலையைப் பற்றிய கதை சொல்கிறது.

“ருத்திரர்களில் நான் சங்கரன்”. சிவபெருமானும் எனக்கு கட்டுப்பட்டவர் என்பது போல போதிக்கிறது வைணவக்கதைகள். இவையனைத்தும் இடைச்செருகலாக இருக்க வேண்டும் அல்லது இவற்றின் உள்ளார்ந்த அர்த்தம் சைவர்களும் வைணவர்களும் புரிந்து கொண்டிருப்பதை போலல்லாமல் வேறொன்றாக இருக்கவேண்டும்.

ஆதிகாலத்தில் இருந்தே இக்கதைகளையெல்லாம் சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்பது போன்ற சண்டைகளுக்கு மட்டுமே பக்தர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

ஓரணுவில் புரோட்டான் பெரியது என்றோ, எலக்ட்ரான் பெரியது என்றோ எவ்வாறு கூற முடியாதோ அப்படியே பிரம்மா, சிவன், மற்றும் விஷ்ணு அவதாரங்கள். அதே நேரம் இரண்டும் சமமென்றும் கூற முடியாது. இரண்டும் வேறு வேறானவை. அவ்வளவுதான்.

வேறு விதமாகச் சொல்ல வேண்டுமானால், ரோஜாவை விட தாமரையோ, தாமரையை விட ரோஜாவோ உயர்ந்தது என்றோ தாழ்ந்தது என்றோ பேதம் கற்பிக்க முடியாது. ரோஜா ரோஜாதான், தாமரை தாமரைதான்.

நம்முடைய பெரும்பாலான பிரச்சனைகள் பாகுபடுத்தி பார்ப்பதாலும், ஒப்பிட்டுப் பார்ப்பதாலும் உருவானவை. அவள் புருஷனைப் போல் நமது புருஷன் சம்பாதிக்க வில்லையே என்று இவள் நினைக்கிறாள். இவள் புருஷனை போல் நமது புருஷன் தைரிய சாலியாக இல்லையே என்று அவள் நினைக்கிறாள்.

பிரம்மா, சிவன், விஷ்ணு மூவரும் தனது வேலையை செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கிடையே சண்டை எதுவும் இல்லை.

யார் பெரியவர் என்று பக்தர்கள் போட்டுக்கொள்ளும் சண்டைகள் எல்லாம் அந்தந்த பக்தர்கள் தமது அகங்காரத்தை பூர்த்தி செய்து கொள்ள கடவுளைக் காரணம் காட்டிக் கொள்வதே ஆகும்.

ஒருவேளை அந்தச் சண்டைகளில் அந்தந்தக் கடவுள்களின் பங்கு உண்டுமானால் தன் பங்குக்கு பிரம்மா ஏன் சண்டைக்கு ஆட்களை அனுப்பவில்லை? எல்லாவற்றையும் படைக்கத் தெரிந்த அவருக்கு தனக்காக சண்டை போட சில பக்தர்களை படைக்க முடியாமலா போயிருக்கும்?

நல்லவேளையாக இந்த மதச்சண்டைகள் எல்லாம் எந்தத் தரப்பிலும் முழுவெற்றி பெறாமல் போய்விட்டது. இல்லையென்றால் தோற்றுப்போன மனிதர்களையும், அவர்களது தத்துவத்தையும் உலகில் இருந்து காணாமல் ஆக்கி இருப்பார்கள் வெற்றி பெற்ற பக்தர்கள். இருப்பினும் இந்தத் தத்துவங்கள் காணாமல் போவதால் கடவுளுக்கு ஏதும் நஷ்டமில்லைதான்.

நான் எல்லாத் தத்துவங்களும் எப்போதும் இருக்கவேண்டும். சண்டைகளும் எப்போதும் நடக்கவேண்டும் என்று சொல்ல வரவில்லை.

அவற்றை வைத்து சண்டைபோடுவது பக்தர்களின் முட்டாள்தனம், அகங்காரம்தான். சண்டைக்குக் காரணம் தத்துவங்களல்ல என்று கூறுகிறேன்.

சற்று யோசித்துப் பாருங்கள்.

ஒருவேளை பிரம்மாவின் வேலை இந்த உலகத்தில் நின்றுவிட்டது என்று வைத்துக் கொண்டால் என்னவாகும்?

எவருக்கும் குழந்தை பிறக்காது. சற்று முன்பு பிறந்த குழந்தைகளும் வளர்ந்து பெரியவனாகி நூறு ஆண்டுகளுக்குள் இறந்து விடும். அதன்பின் மனித இனமே இல்லாமல் போய்விடுமல்லவா?

நூறு ஆண்டுகள் ஏன்? பிரம்மாவின் வேலை நின்று விட்டால் தான் விதைகளே முளைக்காதே.. பிறகு எதைச் சாப்பிடுவது? உயிர்கள் அதிகபட்சம் ஓராண்டு கூட வாழமுடியாதே.

அதேபோல் அணுவில் புரோட்டானோ, எலக்ட்ரானோ இல்லாமல் போய்விட்டால் நேர்மின் சக்தியோ, எதிர்மின் சக்தியோ இல்லாமல் போய்விடுமல்லவா?
இதே கதை சிவன் மற்றும் விஷ்ணுவிற்கும் பொருந்துமல்லவா?
                                                                                                                                                      (தெரிவார்...)