ஐ லவ் யூ டா... - 1

பிறைநேசன்
May 27, 2018 10:59 முப
“அம்மா” என்று அலறியபடியே உட்கார்ந்துவிட்டான் வேலப்பன். அவனால் அந்த போலீஸ்காரரின் நான்காவது அடியைத் தாங்கமுடியவில்லை. அவன் என்ன இப்படி அடிவாங்கியே பழகிப்போனவனா? இப்போதுதானே போலீஸின் அடியைப் பார்க்கிறான்.
 
அதுவரை போலீஸ் ஸ்டேசனையும் ஒரு முறை பார்த்துவிட்டுத்தான் வரலாமே, ஒரு முறை ஜெயிலுக்குத்தான் போய் வரலாமே என்று நினைத்திருந்தவனுக்கு இப்போது அந்த நினைப்பு வரவில்லை. இனி வரவும் வராது.
 
அந்தப்போலீஸ்காரருக்கும் அடிக்கவேண்டும் என்று உள்ளூர எண்ணம் இல்லைதான். குடும்பப் பிரச்சனைக்குத்தானே வேலப்பனையும், அவன் மைத்துனன் முத்துவையும் உட்காரவைத்திருக்கிறோம். அவர்கள் என்றைக்கு வேண்டுமானாலும் சேர்ந்து கொள்வார்கள். நாம் எதற்கு அதிலே இடையில் செல்ல வேண்டும் என்றுதான் எண்ணியிருந்தார்கள்.
 
ஆனால் இடையில் வேலப்பன் மனைவி செல்வி நிறைமாத கர்ப்பிணியாக அங்கே வந்து அழுது முறையிட்டு சென்றாளே, அந்த நிகழ்வுதான் அங்கிருந்தவர்களை வேலப்பனையும் முத்துவையும் அடிக்க தூண்டிவிட்டது.
 
குடும்பத்தில் அன்பு இருக்கவேண்டும். அகங்காரம் இருக்ககூடாது. ஒருவேளை அகங்காரம் இருந்தாலும் உன்னுடைய அகங்காரம் பெரியதா? என்னுடைய அகங்காரம் பெரியதா? என்று அவர்களே முடிவெடுத்துக் கொள்ள வேண்டும். போலீஸ் ஸ்டேசனுக்குப் போனால் அவன் தன்னுடைய அகங்காரம்தான் பெரியது என்று காட்ட முற்படுவான். இதுதான் இங்கேயும் நடக்கிறது. 
 
வேலப்பன், முத்து கூறியதை காதுகொடுத்து கேட்கக் கூட இல்லை அந்த போலீஸ்காரர். ஆனால் தன்னுடைய கேள்விகளுக்கு அவர்கள் இருவரும் கண்டிப்பாக பதிலளிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறான். ஆனால் இதையெல்லாம் அவனே செய்கிறானா இல்லை வேலப்பன் மாமனார் கோதண்டம் கொடுத்த பணம் செய்கிறதா என்று தெரியவில்லை. ஒருவேளை பணம் அதனுடைய அகங்காரத்தை காட்டுகிறது போலும்.
 
வேலப்பன் மனைவி செல்வியின் அண்ணன்தான் இந்த முத்து. வேலப்பனின் இரண்டாவது தங்கை ராணியை திருமணம் செய்திருக்கிறான். வேலப்பனுடைய திருமணத்திற்குப் பிறகு வேலப்பனின் இரண்டாவது தங்கை ராணிக்கும், செல்வியின் அண்ணன் முத்துவுக்கும் காதல். பிறகு அவர்களுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. 
 
முந்திய நாள் செல்வி செய்த ஒரு முட்டாள்தனமான காரியம் இப்படி இரண்டு குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேசன் வரை கூட்டி வந்து விட்டது. செல்விக்கும், வேலப்பனுக்கும் புருஷன் பொண்டாட்டி சண்டை வந்தபோது அதை அவள் உடனே தன் தகப்பனான கோதண்டத்திடம் சொல்லி அழுகிறாள். 
 
தகப்பன் தன் பிள்ளையை பாலூட்டி, சோறூட்டி வளர்த்திருக்கிறான் அல்லவா? மகளின் அழுகையை பார்த்ததும் மருமகன் மீது கோபம் வருகிறது. இதை கணவன் மனைவி சண்டைதானே, தானாக சரியாகி விடும் என்று அவர் விட்டிருந்தால் பிரச்சனை இருக்காது. ஆனால் அவர் அதிலே மூக்கை நுழைத்துவிட்டார்.
 
மூக்கையும் தவறான பாதையில் நுழைத்துவிட்டார். ஆமாம் தன் மருமகன் வேலப்பனிடம் சண்டைக்கு போவதற்குப் பதிலாக சம்பந்தி மாசிலாமணியிடம் சண்டைக்குப் போய்விட்டார். மாசிலாமணியோ கணவனை இழந்த விதவைத் தாயார். பக்கத்து வீட்டுக்காரர்களும் அவளுக்கு துணை நிற்பவர்கள் அல்லர்.
 
தன் மனைவியை விட்டு என்னென்ன வகையில் மாசிலாமணியை அர்ச்சனை செய்ய முடியுமோ அப்படிபட்ட கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்து விட்டார். அடிக்கவும் முற்பட்டார். விஷயம் கைகலப்பாக மாறிவிட்டது.
 
அவர்களைத் தடுக்க மாசிலாமணி எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாகிப்போனது. கோதண்டம் மற்றும் அவர் மனைவியின் உக்கிரத்தை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தூக்கு போடுவதற்கு சுருக்கு கூட போடத்தெரியாத அவளுக்கு வீட்டின் மூலையிலே உட்கார்ந்து அழுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
 
விசயத்தைக் கேள்விப்பட்ட வேலப்பனுக்குப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஒருபுறம் மனைவி மீது கோபம். அவளால் தானே இத்தனையும் விளைகிறது. மறுபுறம் மாமனார் மீது வெறி. 
 
என்னதான் மகள் மீது பாசம் இருந்தாலும் அதற்காக ஆண் துணை இல்லாமல் இருக்கும் ஒரு வயதான பெண்ணைத் தாக்கவருவது எந்த விதத்தில் நியாயம்? ஆனால் கோதண்டமும் ஒன்றும் முட்டாள் அல்ல. தான் தாக்கினால் ஏதாவது பிரச்சனை வரும் என்று தெரிந்தே தன் மனைவி லக்குமியைக் கூட்டி வந்துவிட்டார். லக்குமி மாசிலாமணியைத் தாக்கும்போது வேடிக்கை பார்க்கும் அவர், மாசிலாமணி லக்குமியை தாக்க வரும்போது வந்து காப்பாற்றுகிறார். என்ன ஒரு யுத்த தந்திரம்.
 
அவர் தாக்கவே இல்லை என்றாலும் அவர் தாக்கியதாகவே எடுத்துக் கொள்கிறான் வேலப்பன். தன் மீது பழிவராமல் இருக்க ஒரு யுத்த தந்திரத்தை கையாண்டார் கோதண்டம். ஆனால் அதே மாதிரியான வேரொரு தந்திரத்தை தன் மருமகனும் கையாளக்கூடுமே என்று யோசிக்க மறந்துவிட்டார். இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர். விடாக்கண்டனும் கொடாக்கண்டனும் தான்.
 
பொதுவாக எந்த மனிதனும் தன் தாய் மீது தொடுக்கப்படும் தாக்குதலை பொறுத்துக் கொள்ளமாட்டான். எந்த வம்புச் சண்டைக்கும் போகாதவன் என்றாலும் வேலப்பனும் மகன் அல்லவா?. இந்தத் தாக்குதலுக்கு நாம் நியாயம் கேட்கவில்லை என்றால் ஒன்றரை வயதுவரை தான் குடித்த தாய்ப்பாலுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுமே? அதை எப்படி அனுமதிப்பது?
 
முதல் குழந்தைக்குப் பின் ஆறு ஆண்டுகளாக குழந்தையில்லாமல் தவம் செய்து பெற்ற குழந்தை என்று தன்னைத் தாய் ஒவ்வொரு முறையும் கூறுவாளே. அந்தத் தாயின் தவம் வீணாகி விடுமே.
 
முப்பது வயதுக்குள், புத்தரையும் கிருஷ்ணரையும் திருவள்ளுவரையும் பட்டினத்தாரையும் சிவவாக்கியரையும் படித்த, எந்தக் கஷ்டத்திற்கும் கலங்காமல் நிற்கும் வேலப்பன், மாசிலாமணி அழநேரும் போதெல்லாம் தானும் அழுதுவிடுகிறானே அந்த அழுகையெல்லாம் நடிப்பாகி விடுமே.
 
இவ்வாறாக பலவாறு யோசித்த வேலப்பன், தன் மாமனுக்கு எதிராக யுத்தம் செய்யத் தயாரானான்.
(தொடரும்...)