கடவுள் தெரிகிறார் - 1

பிறைநேசன்
May 25, 2018 08:14 முப
எல்லாவற்றுக்கும் ஆதிமூலம், பரம்பொருள் ஒன்றுதான். அதுவே கடவுள், பரமாத்மா என்று மனிதன் அழைக்கிறான். அந்த ஒன்றிலிருந்தே அனைத்தும் உருவாகின என்று பரம சத்தியத்தை தன் அனுபவத்தில் உணர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.
 
ஆனால் பரம்பொருளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யாமல் இருக்கும் மனிதர்கள் மதத்தையும், ஏசு, கிருஷ்ணர், முகமது போன்ற வழிகாட்டிகளின் பெயரைச் சொல்லி ஏய்க்கும் மதவாதிகளையும் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கின்றனர்.
 
“பரம்பொருள் இருப்பதை நிரூபித்துக் காட்டுங்கள்” என்று கேட்கும் விஞ்ஞான மூடர்கள் எல்லா காலத்திலும் இருக்கிறார்கள். இவர்கள் பரம்பொருளை ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தை போல வெட்டவெளிச்சமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.
 
ஆனால் விஞ்ஞானத்தில் கூட மனிதன் முழுமனதுடன் தேடும் பொழுது பரம்பொருள் கிடைக்கிறது. ஆம் தேடியவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.
 
“என்னிலிருந்தே அனைத்தும் உருவாகியுள்ளன” என்று கீதையில் கண்ணன் கூறுகிறான். ஆனால் இக்கூற்று தர்க்க வழியில் செல்லும் சதாரண இதயத்திற்கு புரிவதில்லை.
 
கார்பன் என்கிற தனிமத்தின் வெவ்வேறு இயற்கை அமைப்புகள் தான் கரியும், வைரமும் என்கிற இயற்பியல் கொள்கையை அந்த மனித மனம் புரிந்துகொள்கிறது. ஏனெனில் இங்கே தர்க்கம் இருக்கிறது. நிரூபணம் இருக்கிறது.
 
சுத்தமான தண்ணீரில் ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் இருக்கின்றன. கடினமான பாறையில் கால்சியமும், சிலிக்கானும் இருக்கின்றன. அடுப்புக் கரியில் கார்பன் மட்டுமே இருக்கிறது. ஆபரணங்களில் தங்கமோ, வெள்ளியோ இருக்கிறது. ஆனால் இவை அனைத்திலும் புரோட்டான், எலெக்ட்ரான், நியூட்ரான் என்ற அடிப்படை மூலக்கூறுகள் இருக்கின்றன.
 
மனிதன் பார்க்கும் பொருட்கள் அனைத்திலும் இருக்கும் இந்த அடிப்படை மூலக்கூறுகளே வெவ்வேறு விகிதாச்சாரத்தில் இருக்கின்றன என்று வேதியியல் ஒத்துக்கொள்கிறது.
 
ஒருவேளை புரோட்டானும், எலெக்ட்ரானும் ஒரு பகவத்கீதையை எழுதினால் கூட “என்னிலிருந்தே உலகில் உள்ள ஜடப்பொருட்கள் அனைத்தும் உருவாகியிருக்கின்றன. நானே அனைத்தும்” என்றுதான் எழுதியிருக்கும். அதன் அர்த்தம் அறிவியல் அறியாத பாமரனுக்கு விளங்காது. படித்தவனுக்கே விளங்கும்.
 
அதாவது ஒரு புரோட்டான், ஒரு எலக்ட்ரான் இருக்கும் அணுதான் ஹைட்ரஜன். அதே ஹைட்ரஜன் அணுவின் கருவில் இன்னொரு புரோட்டானையும், சுற்றுப்பாதையில் இன்னொரு எலக்ட்ரானையும் சேர்த்தால் அந்த ஹைட்ரஜன் ஹீலியமாக மாறுகிறது.
 
இதைப் புரிந்து கொள்ளும் மனிதனுக்கு தனிமங்களுக்கு இடையிலான பேதம் சற்றே குறைந்தது போலத் தோன்றுகிறது. அனைத்துமே அடிப்படை மூலக்கூறுகளால்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது என்ற உண்மை விளங்குகிறது.
“த்ரை குண்யா விஷயா வேதா
நிஷ்த்ரை குண்யோ பவார்ஜுனா”
என்ற கீதை வரிகளின் விளக்கம் புரிந்து விடுகிறது.
 
கீதையின் படி சத்வ, ரஜோ, தமோ என்ற முக்குணங்களாலேயே உயிர்கள் அனைத்தின் சுபாவமும் வெளிப்படுகின்றன.
 
ஆனால் இங்கே புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் என்ற மூன்று அடிப்படை மூலக்கூறுகளாலேயே உலகிலுள்ள பொருட்கள் அனைத்தும் உருவாகியுள்ளன.
 
(தெரிவார்...)