யாதுமாகி நின்றாய்

anusuya
மார்ச் 07, 2018 02:49 பிப
நான் ...
இந்தச் சமூகத்தில்
ஓர் அங்கம்

இச் சமூகம் ,
என் பிறப்புச்
செய்திக் கேட்டு
பெண்ணா? எனக்
குறைபடும்
பின் ,
'எல்லாக் குழந்தையும்
ஒன்று தான் ' என
அழகாய்ச் சமாளிக்கும்

மென்மை , பொறுமை
அடக்கம் . நாணம்
மட்டுமே என்
குணங்கள் என
நிர்ணயம் செய்யும்

பொதுவான ஒழுக்கத்தை
பெண் என்பதால்
எனக்கு மட்டுமே
போதிக்கும்

எழுதப்படாத பல
சட்டங்களை
நான் 'பெண்'
என்பதால்
என் மீது
திணிக்கும்

என் உடைகள் மீது
என் அனுமதியின்றி
ஒரு கூட்டம்
வழக்காடு மன்றம்
நடத்தும்

சாலையோரத்தில் ,
மது மயக்கத்தில்
ஆபாசமாக
விழுந்துக்கிடக்கும்
ஆசாமியை
கொஞ்சமும் பாராது
மூஞ்சைத் திருப்பிக்கொண்டு
போகும் பெண்ணின்
போர்த்தியிருக்கும் உடைகளுக்குள்
மறைந்திருக்கும் பாகங்களை
தேடி அலைந்து
கண்டுபிடித்து
குறை பேசி
மகிழும் ஒரு கூட்டம்

என் சுதந்திரத்திற்கு
கடிவாளம்
கொண்டு வரும்
சுயக் கட்டுப்பாடற்ற
சுதந்திரத்தோடு திரியும்
ஒரு கூட்டம்

என் எல்லாக்
கேள்விகளுக்கும்
'பெண் பிள்ளை
அமைதியாய் இரு '
என்ற ஒற்றைப்
பதிலை நல்கும்

எனக்குச் சொந்தமில்லாத
என் அழகை
கவிதைகளில் வடிக்கும்

எனக்கான என் உரிமையை
நான் எடுத்துக்கொள்ளும்போது
போராட்டம் நடத்தும்

நான் என்
சுயத்தை வெளிபடுத்த
ஒவ்வொரு முறை
எத்தணிக்கும் போதும்
'என் வீட்டு மகாலக்ஷ்மி
நீ ' என
முட்டுக்கட்டை போடும்

என் வாழ்க்கை
வட்டத்தின் விட்டத்தை
தான் தீர்மானிக்கும்

என் மண வாழ்வை
நான் தேர்ந்தெடுக்க
வரதட்சணை என்ற பெயரில்
அசிங்கமாய்
அதிகாரப் பிச்சைக்
கேட்டு நிற்கும்

இங்கே,
சுதந்திரம் இருக்கிறது
சட்டப் புத்தகத்தில் மட்டும் !

இங்கே ,
பெண்களுக்காக
ஆண்கள் கட்டும்
கோவில்களில் ,
தங்கள் அம்மாக்களுக்கு
மட்டுமே கருவறை !

ஓ ! என் அன்புச் சமூகமே !

நாங்கள் முட்டாள்கள் அல்ல!
நீ பாதுகாப்பளிபதாய்
நினைத்து இன்னும்
எங்களை
சிறைப்படுத்த முடியாது !

நாங்கள் எதிர்பார்ப்பது
குட முழுக்கு
விழாக்களை அல்ல
குறைந்தப் பட்ச
மரியாதையை !

மகளிர் தினத்தன்று
'என் வாழ்வில்
யாதுமாகி நின்றாள்
பெண் ' என
நீ நீட்டும்
பூங்கொத்துக்களை விட
எங்கள் வாழ்வில்
நீ யாராக இருந்தாய்
என யோசித்துப் பார்
போதும் ...!