இரவுகளில் தான்....

anusuya
பிப்ரவரி 17, 2018 08:19 பிப
இரவுகளில் தான்...
எனக்கான உலகம்
என் முன்
தன் கடையை
விரிக்கிறது

இரவுகளில் தான்..
எனக்குள் இருக்கும்
வாசகி,
உண்டதெல்லாம் செரித்து
பெருந்தீனி
தேடி அலைகிறாள்

இரவுகளில் தான்...
என் எழுத்துகள்
எனக்கே தெரியாமல்
சுவாசக் காற்று
பெற்று
வீரிட்டு அழுகின்றன

இரவுகளில் தான்..
என் கண்ணாடிக்கு
பின்னே,
நினைவாக துடிக்கும்
ஆர்வக்கோளாறான
என் கனவுகள்
ஆர்பாட்டம் செய்கின்றன

இரவுகளில் தான்...
எனக்கான அறிமுகம்
எனக்குள்ளே
நிகழ்கிறது

இதே.... இதே....
இரவுகளில் தான்.....

நான் அறிமுகங்களை
பாதியில் நிறுத்தி,

ஆர்ப்பாட்டங்களை அடக்கி,

எழுத்துகளின்
வாயை பொத்தி,

தீனி மூட்டையை
மூடி வைத்து,

உறக்கத்தை வற்புறுத்திக்
கொண்டிருக்கிறேன்....

நாளை பகலில்
ஆஜராகி தொலையும்
என் நடைமுறை
வாழ்க்கைக்காக!