மனித உறவுகள் - இன்று

சுவின்
ஜனவரி 14, 2018 02:15 பிப
                                                                மனித உறவுகள் - இன்று

                                      “அழிந்து போகும் பொருளல்ல உறவு – மாறாக
                                          அழியாமல் வாழ்வுக்கு புத்துயிர் ஊட்டுவது”

உறவு என்ற சொல்லுக்கு தமிழில் பல பொருள்கள் உள்ளன. அவைகளாவன: சுற்றம், நட்பு, விருப்பம், பொருத்தம் மற்றும் அடைதல். ஓர் வார்த்தைக்கு ஆங்கிலத்தில் மட்டும் பல பொருளல்ல மாறாக தமிழிலும் உள்ளன. இவற்றில் சுற்றம் மற்றும் நட்பு ஆகியவற்றை நாம் அறிந்ததே, இவற்றில் புனிதமானதாக நான் கருதுவது நட்பு. ஆனால் இன்றைய காலத்தில் இதுவும் மாசு படிந்துதான் காணப்படுகிறது.

உறவுமுறைகள் என்று நாம் சொல்லும்போது, மனிதனோடு நாம் கொள்ளும் உறவை மட்டுமே எண்ணுவோம். ஆனால், என்னுடைய பார்வையில் உறவு முறையை நாம் நான்கு விதங்களில் காணலாம்,

மனிதன்; மனிதனோடும்
மனிதன் இறைவனோடும்
மனிதன் இயற்கையோடும்
மனிதன் தன்னோடும்

இந்த நான்கு வகையான உறவை எவராவது வாழ முடியுமா? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. ஏனென்றால் இன்றைய சூழ்நிலையில் இவைகள் முற்றிலும் மறக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் உள்ளன. எவ்வாறு இவைகள் அழிக்கப்படுகின்றன? என்ற கேள்வி எழலாம். அதற்கான விடைகள் பல உள்ளன. அவைகளாவன; கொலை, கொள்ளை, மானபங்கம், சுரண்டல், விபச்சாரம், லஞ்சம் வாங்குதல், கேலி செய்தல் மற்றும் பலவற்றை சொல்லிக்கொண்டே இருக்கலாம். இவ்வகையான செயல்கள் அரங்கேறும் போது இந்த நான்கு வகையான உறவுகளும் அழிக்கப்படுகின்றன. ஆனால் இவைகளை அகற்ற நாம் எந்த நடவடிக்கையாவது எடுத்துள்ளோமா? அல்லது எடுக்கப்பட்ட (அ) எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறோமா? அவ்வாறு ஒத்துழைப்பு கொடுத்தால் முழுமையாகக் கொடுக்கிறோமா?. இதுபோன்ற பல கேள்விகள் என் மனதை வாட்டுகின்றன. மேலும் அனைவருக்கும் இதே கேள்விகள் இருக்கும் என நம்புகிறேன்.

இந்த நவீன காலத்தில் பெரும்பாலும் மனித உறவுகள் சிதைந்தே காணப்படுகின்றன. அன்றைய காலத்தில் உறவுக்கும் மனித மாண்புக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் நம் மண்ணை ஆண்டபோது பல நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். அதாவது, நல்லதொரு நிர்வாக அமைப்பு, தொடர்வண்டிகள் போக்குவரத்து, கல்விநிலையங்கள் போன்ற பல சிறப்பான, நமக்கு இன்றும் பயனளிக்கக்கூடிய திட்டங்களை தந்தது அந்நியர்களே. அவர்களுடைய செயல்பாடுகள் முரட்டுத்தனமாக இருந்தாலும் மனித மாண்பையும், மனித உறவுகளையும் பேணி வளர்த்தனர். ஆனால் மனித உறவிலும், மனித மாண்பிலும் சிறந்து விளங்கிய நம்நாடு அடிமட்டத்தை தொடும் நிலையில் உள்ளன. சுயநலத்துடன், தான் மட்டும் வாழ வேண்டுமென்றும், தனக்கு மட்டுமே பெயரும் புகழும் கிடைக்க வேண்டுமென்றும் பலநற்செயல்களை செய்யும் பல பண முதலாளிகளே நம் தேசத்தில் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக செய்தித்தாள்களை புரட்டிப்பார்க்கும்போது விஜய் மல்லையா என்ற தொழிலதிபரைப் பற்றி செய்தி இடம் பெற்றது. அவருடைய தில்லு முல்லுகள் அனைத்தும் வெளிவந்தன. ஆனால் என்ன செய்ய முடிந்தது? ஒன்றுமில்லை. ஆனால் ஒரு விவசாயியோ (அல்லது) சிறுதொழில் வியாபாரியோ கடன் வாங்கி ஒரு மாதம் வட்டிக் கட்டவில்லை என்றாலும் பலவிதமான துன்பங்களுக்கு ஆளாகி தற்கொலை செய்யும் அளவுக்கு உள்ளாக்குக்கின்றனர். இத்தகைய நிலையிலேயே மனித உறவுகள் காணப்படுகின்றன. அதாவது பணக்காரன் தவறு செய்தால் மன்னிப்பு, ஆனால் ஏழை தவறு செய்தால் மரணம் இத்தகைய நிலைகள்தான் காணப்படுகிறது இன்றைய சமுதாயத்தில்.

இந்தளவுக்கு எதிர்மறையோடுக்கூடிய கருத்தை மட்டுமே பதிவு செய்கிறீர்களே, அப்படியெனில் இன்றைய சமுதாயத்தில் மனித உறவுகளே இல்லையா? என்ற கேள்வி எழலாம். இருக்கிறது, ஆனால் அது மட்டுமே பேசப்படும் போது, சிதைந்து போன மாண்பையும், உறவையும் பற்றிய செய்தி அறியப்படாத உண்மையாக மாறிவிடும்.
நான் தொடக்கத்திலே கூறிய நான்கு வகையான உறவுகளையும் வாழ்ந்துக் காட்டியவர்தான் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து. மேலும் சிலரை குறிப்பிட முடியும்; புனித பிரான்சிஸ் அசிசி மற்றும் மற்ற புனிதர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள், நமது திருத்தந்தை பிரான்சிஸ் இன்னும் பலர் உள்ளனர்.
இப்படிப்பட்ட உறவு சிதைவுக்கு மிக முக்கியக் காரணம் தன்னோடு உறவு இல்லாததுதான். ஏனென்றால் அதுதான் அடித்தளம். எனவே முதலில் அவற்றை வளர்க்க நாம் முயல வேண்டும். பின்புதான் மனிதன் மனிதனோடும், மனிதன் இறைவனோடும் மற்றும் மனிதன் இயற்கையோடும் உள்ள உறவுகள் அனைத்தும் வளர்ச்சி பெறும்.
நாம் நம்மை நேசித்து, அன்பு செய்து வாழும்போதுதான் பிறரோடு உள்ள உறவை வளர்க்க வேண்டும். இவ்வாறுதான் ஒவ்வொன்றாக நம்மால் அனைத்த வகையான உறவையும் வளர்க்கலாம். எனவே தன்னோடு உறவு என்ற அடித்தளத்தை நட்டு மனித உறவுகளை வளர்ப்போம்.
உன்னை அன்புசெய் 
பிறரை அன்புசெய் 
உறவை வளர்த்துக்கொள்

                                                                                                                                                   ம.மரிய சுவின்.