தமிழும் , பாரதியும்

anusuya
ஜனவரி 15, 2017 09:34 முப
தமிழில் பாரதியும் , பாரதியின் தமிழும் எப்போதுமே அழகு . எனக்குத் தெரிந்த உலகின் மிக அழகான இரு பெயர்கள் தமிழும் , பாரதியும் தான் . இந்த அழகான பெயர்கள் தான் என் கதையின் இரு குட்டி மனிதர்களுக்கும் .

என் கதையின் இந்த சுட்டிகளை நீங்கள் நன்றாக அறீவீர்கள் . தமிழும் , பாரதியும் உங்களுக்கு மிகவும் பரீட்சயமானவர்கள் தான் . இந்த சிறு மனிதர்கள் யாரென்று ஞாபகம் வருகிறதா ?

ஆம் , ஆம் அவர்கள் .. அவர்களே தான் . அதே... அதே ... அழுக்குச் சட்டைக்கு சொந்தக்காரர்கள் . அந்த செம்பட்டை முடி , கருத்த தேகம் , நலிந்த உடல்வாகு ... இவர்களுக்கே உரியது தான் . 'அக்கா பசிக்குதுக்கா காசு கொடுக்கா' என்ற பரிதாபத்திற்குரிய பாடலின் இசையமைப்பாளர்கள்... இவர்கள் தான் . உங்கள் விரைவான பயணங்களில் , சில வினாடி நிறுத்தங்களில் உங்களிடம் யாசகம் கேட்டு நீளும் கரங்கள் ... இவர்களுடையது தான் .

இந்த சின்ன சிறார்களின் பசி போக்க தான் சிக்னல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன போலும் . இவர்களின் பசி போக்க காரணமாகும் போது , சிக்னல்களின் சிவப்பு விளக்குகள் புனிதம் பெறுகின்றன .

ஆம் , தமிழும் , பாரதியும் அந்த ரோட்டோரத்தில் தான் வசிக்கிறார்கள் . ரோட்டோரத்து குழந்தைகள் பெயரா தமிழும் , பாரதியும் என கேட்கிறீர்களா ? இருந்துவிட்டு போகட்டுமே ... தமிழும் , பாரதியும் கோபப்படவா போகிறார்கள் ?

தமிழை விட பாரதி சற்று சிறியவன் . இருவரும் அக்கா தம்பியாக கூட இருக்கலாம் . தமிழின் கை பிடித்துக்கொண்டோ , தமிழின் பின்னால் ஓடிக் கொண்டோ பாரதி மக்களிடம் காசு கேட்பது வழக்கம் . சில நல்ல மனங்களால் ஒரு நாளில் , ஒரு வேளையாவது இவர்களிடமிருந்து பசி தாற்காலிக விடை பெறும். அவர்கள் அடித்துக் கொள்வார்கள் . சண்டை போட்டுக் கொள்வார்கள் . ஆனாலும் , சேர்ந்தே இருப்பார்கள் .

கொஞ்ச ஆளில்லாத இவர்களின் மழலைகளை கேட்க , இரவு நேரங்களில் ஈரக் காற்று எங்கிருந்தாலும் ஓடி வந்து இவர்கள் தேகங்களில்
தங்கிக் கொள்ளும் . இவர்கள் உடலில் அமர்ந்து தான் , கொசுக்கள் தங்கள் அடுத்த நாளைக்கான திட்டங்களை அமைக்கின்றன .

ஒரு நாள் , அந்த துணிக்கடையில் நல்ல கொழுக் - மொழுக் அமுல் பேபி ஒன்றிடம் எல்லோரும் கொஞ்சிக் கொண்டிருப்பதையும் , முத்தம் கேட்டுக் கொண்டிருப்பதையும் , முத்தம் கொடுத்து கொண்டிருப்பதையும் வாசலில் நின்றவாறே பாரதி பார்த்தான் . தன் கன்னத்தை வலது கையால் மெல்ல தடவினாள் . பின் ,அங்கிருந்து நகன்றான் .

தனக்காகவும் , தன்னை நம்பியிருக்கும் கொசுக்களுக்காகவும் கிடைத்தை உண்டனர் இருவரும் . அந்த மௌனத்தை கலைத்துக் கொண்டு
பாரதி தமிழிடம் கேட்டான் ," நம்ம கிட்ட ஏன் யாரும் முத்தம் கேட்க மாட்டைக்காங்க ".
டக்கென்று தமிழ் சொன்னாள் , " ஏனா நம்ம பிச்சைக்காரங்க ".

"அதனால ..." முத்தம் படாத இடத்தில் கண்ணீர் வடிய கேட்டான் பாரதி.

" அதனால ... ஒண்ணுமில்ல . சரி , நான் கேட்கிறேன் . எனக்கு ஒரு முத்தம் தாயேன் ". என்றாள் தமிழ் . கேட்டது தான் தாமதம் . தமிழை கட்டி அணைத்து முத்தமிட்டான் பாரதி. பாரதியை முத்தமிட்டாள் தமிழ் .

சில நிமிட மௌனங்களுக்குப் பிறகு , பாரதியிடம் தமிழ் கேட்டாள் , "ஓய் , நாம ஸ்கூலுக்கு போலாமா " ?
" அங்க இருக்குறவுங்க நமக்கு கேட்டவுடனே காசு தருவாங்களா" ? இது பாரதியின் கேள்வி . "
" இல்ல .. நாம படிக்கலாமா " ? இது தமிழ் .
" படிக்கவா .. எதுக்கு"? இது பாரதியின் சந்தேகம் .
" நாம இன்னைக்கு காலையில அந்த பழக்கட கிட்ட பிச்சை எடுத்துட்டு இருந்தோம்ல . அப்ப ஒரு ஆச்சி ஒரு சின்ன பையன் கிட்ட சொன்னாங்கள்ல நல்ல படிக்கணும் . நல்ல படிச்சா வேலை கிடைக்கும் . வேலை கிடைச்சா காசு கிடைக்கும் . அப்புறம் என்ன வேணாம் வாங்கலாம் . நம்மளும் படிச்சி , வேலைக்கு போயி , காசு கிடைச்சா ஒரு அம்மா அப்பா வாங்களாம்ல . அம்மா , அப்பா இருந்ததா மிட்டாய் கிடைக்கும் . சாப்பாடு கிடைக்கும். கலர் கலரா சட்ட கிடைக்கும் . முத்தம் கூட
கிடைக்கும் . " இது தமிழின் பதில் .

" முத்தமுமா " ? இது பாரதியின் ஆசை கேள்வி .

" ஆமா . உனக்கொரு அம்மா அப்பா , எனக்கொரு அம்மா அப்பா. நமக்கு தனியா வீடு கூட கிடைக்கும் ", தமிழின் எதிர் காலக் கணக்கு .

" நீ வேற வீட்டில , நான் வேற வீட்டிலையா ? அப்ப எனக்கு அம்மா அப்பாவே வேணாம் " , இது பாரதியின் கோபம் .

" சரி . அப்ப நாம ரெண்டு பேரும் ஒரே ஒரு அம்மா அப்பாவை வாங்கலாம் . ரெண்டு பேரும் ஒரே வீட்டில இருக்கலாம். சரியா? " இது தமிழ் .

அசடு கலந்த புன்னகையோடு 'சரி' என்றான் தமிழ் .

ஸ்கூல் பற்றிய சிந்தனைகளோடும் , அம்மா அப்பா பற்றிய கனவுகளோடும் பசி ஆக்கிரமித்திருந்த இடங்களை சந்தோசம் நிரப்ப , அன்றிரவு கண் அயர்ந்தன அந்த மலர்கள் .