என்னைக் கொஞ்சம் திட்டுகிறேன்

பிறைநேசன்
ஜனவரி 13, 2017 04:42 பிப
பெருநகரில் வாழும் உனக்கு காலையில் எழுந்து, குளித்து கிளம்பி சாப்பாட்டை முடித்துவிட்டு அலுவலகம் செல்ல பத்து மணி ஆகிவிடுகிறது. பின் அலுவலகத்தில் இருந்து வேலையை முடித்துவிட்டு நெரிசலில் வீடு வந்து சேர மணி எட்டு ஆகி விடுகிறது. சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் டிவி பின் தூக்கம். வரும்போதும் போகும்போதும் பஸ்ஸில் கொஞ்சம் பாட்டு இல்லையெனில் ஃபேஸ்புக், வாட்ஸப். மீண்டும் மறுநாள் அதே போல்தான். ஞாயிறு விடுமுறையில் ரொம்ப நேரம் தூங்குகிறாய். ஒரு படம் பார்க்கிறாய். இதைத்தான் வாழ்க்கை என்கிறாய்.
நீ பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அவை தரும் சம்பளத்தில் கிடைக்கும் சொகுசுக்கும், அதனால் சமூகத்தில் கிடைக்கும் மரியாதைக்கும் உன்னையும் உனது சுதந்திரத்தையும் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டாய்.

உன்னைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பது உனது தொழிலைத் தவிர வேறொன்றுமில்லை. இல்லையெனில் “உனக்கு வேலை போய்விட்டது” என்று கூறப்படும் சமயத்தில் நீ ஏன் பெரும் கவலை கொள்கிறாய்?.

பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டம், மேற்பட்டம் என நீ வாங்கிய எதுவும் உன்னை சுதந்திர மனிதனாக்கவில்லை. மேலும் மேலும் அடிமையாக்கியிருக்கின்றன. இந்த பத்தியை படிக்கும் போது மட்டும் நீ கொஞ்சம் சந்தோஷம் கொள்கிறாய். ஏனெனில் மேற்கண்ட பத்திகள் அனைத்தும் உன்னை குறை கூறுகின்றன. இந்த பத்தி மட்டும் உன்னை குறை கூறாமல் சமூகத்தையும் கல்விமுறையையும் குறை கூறுகிறது. ஆனால் அந்த சந்தோஷம் முட்டாள்தனமானது.

தொழிலும், சாப்பாடும், உறக்கமும் தான் வாழ்க்கை என்றால் மனிதனுக்கு மிருகத்தை விட வித்தியாசம் அதிகமில்லை. அவை சாப்பிடுகின்றன. உறங்குகின்றன. நீ வேலை மட்டும் கூடுதலாக செய்கிறாய். சாப்பாடு இலவசமாக கிடைக்குமென்றால் அதுவும் செய்யமாட்டாய்.

பண்ணை அடிமை முறைக்கும் தற்போது நீ கூலிக்கு மாரடிக்கும் நிலைக்கும் வித்தியாசம் அதிகமில்லை. பண்ணை அடிமை முறையில் உறைவிடம் உணவு முதலியவற்றை அவர்கள் தேர்வு செய்தார்கள். இப்போது அவற்றை நீயே தேர்வு செய்து கொள்கிறாய். பண்ணை அடிமை முறையில் நீ மொத்தமாக விலை கொடுத்து வாங்கப்பட்டாய். இப்போது மாதாமாதம் விலை கொடுத்து வாங்கப்படுகிறாய். அதற்கு அவர்கள் கொடுக்கும் விலைதான் சம்பளம்.

எட்டு மணி நேர வேலைக்காக ஏன் மொத்த வாழ்வையும் கழித்துக் கொண்டிருக்கிறாய்.?. உனது வாழ்வை வீணாக்காத வேறொரு வேலையை தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனம். அதற்கு நீ இந்த வேலையை விட வேண்டும். இந்த வேலையை விட வேண்டுமெனில் உனக்கு புத்திசாலித்தனமும், உன்னையே நம்பும் தன்னம்பிக்கையும் இருக்க வேண்டும்.

எங்கே வாழ்க்கை என்பது உனக்கு நிச்சயமாகத் தெரியாது. ஆனால் நீ இப்போது வாழ்வது வாழ்க்கையல்ல. அது வேறு எங்கேயோ இருக்கிறது.