விடியலை நோக்கி

anusuya
ஜனவரி 06, 2017 08:17 பிப
ஒவ்வொரு நாளும்
சூரியன் உதிக்கிறது
எங்கள் வாழ்வில் மட்டும்
இருள் அப்படியே இருக்கிறது .

பகலும் , இரவும்
இருளும் , விடியலும்
எங்கள் வாழ்வில்
எந்த மாற்றத்தையும்
கொண்டு வந்ததில்லை

நாங்கள்
'சர்வதேச நாடோடிகள் '
தினமும்
அலைந்து திரிகிறோம்

ஒவ்வொரு நாட்டின்
எல்லையிலும்
கையேந்தி யாசகம்
கேட்டு நிற்கிறோம்

புலம்பலும் , கண்ணீரும் தான்
தேசமே இல்லாத எங்களின்
தேசிய கீதங்கள்

கெஞ்சுவதும் இறைஞ்சுவதுமே
எங்கள் பாவனைகள்

நாங்கள்
வாழ்வின் தேவைகளுக்காக
அல்ல ;
வாழ்க்கைக்காகவே
போராடிக் கொண்டிருக்கிறோம்

'ஏமாற்றம் ' மட்டுமே
எங்களின் எல்லா
பிரயாசங்களுக்கும் கிடைத்த
'வெற்றி '

தங்கள் உடம்பில்
காயங்களுக்கு மருந்திடும்போது
எங்கள் குழந்தைகள்
கணக்கு பாடத்தை
கற்றுக் கொள்கின்றன

கருகிப்போன தங்கள்
முகத்தைப் பார்க்கும்போது
வேதியலின் வீரியத்தை
விளங்கிக் கொள்கின்றன

பீரங்கிகளின் சத்தத்தில்
எங்கள் குழந்தைகள்
'டெசிபல்' பற்றி
தெரிந்துக் கொள்கின்றன

பூமி எங்கும்
அலைந்து
எங்கள் குழந்தைகள்
பூகோளவியலைப்
புரிந்துக் கொள்கின்றன

விடைகளே இல்லாத
வினாக்கள்
எங்கள் வாழ்க்கை

வெட்ட வெளியில்
படுத்திருக்கிறோம்

பறவைகளைப் பார்க்கும்போது
பொறாமையாக இருக்கிறது

கண் சிமிட்டும்
நட்சத்திரங்களைப்
பார்க்கும் போது
எங்கள் குழந்தைகள்
என்றோ சிரித்தது
ஞாபகம் வருகிறது

இன்றோ ,
கருப்பு நிறத்தில்
நீளமான யாதொன்றும்
'துப்பாக்கி' என
மிரண்டு நிற்கின்றன
எங்கள் செல்ல மழலைகள்

எங்களால் முடிந்ததெல்லாம்
அவர்களை அனைத்துக்கொண்டு
அழுவது மட்டுமே

இராணுவ வீரர்களே !
ஏன் தோட்டாக்களை
செலவு செய்கிறீர்கள் ?
பசி மட்டுமே போதும்
எங்களை சாகடிக்க

வாழ்வின் விளிம்பில்
எங்கள் நியாயமான
ஆசைகள் கூட
பேராசைகளாக தெரிகின்றன

எங்கள் பேராசைகள் எல்லாம்,

அகதிகளும் மனிதர்கள்
வாழ்வுரிமை அவர்களுக்கும்
உரியது என்பதை
என்றோ ஒரு நாள்
ஒட்டு மொத்த
மனிதக் குலமும்
புரிந்துக் கொள்ளாதா ?

யுத்தங்களெல்லாம் முடிவுற்று
எங்கள் சொந்த தேசம்
எங்களுக்கே திரும்பக்
கிடைக்காதா ? என்பதே

கடவுளே !
எங்கள் பிராத்தனை
ஒன்று தான்!

எங்கள் குழந்தைகளின்
வாழ்க்கையாவது
அமையட்டுமே
'விடியலை நோக்கி '!