உலக அழிவின் சில அறிகுறிகள்

பிறைநேசன்
ஜனவரி 06, 2017 09:45 முப
கி.பி. 2000ல் உலகம் அழியும் என்றார்கள். அழியவில்லை. பின் கி.பி. 2012ல் உலகம் அழியும் என்றார்கள். அதுவும் நடக்கவில்லை. அதனால் உலகம் அழியவே அழியாது என்று அர்த்தமல்ல. உலகம் மொத்தமாக ஒரே நேரத்தில் அழிவதற்கு பதிலாக கொஞ்சம் கொஞ்சமாக அழியலாம்.

ஏற்கனவே மனிதன் நெருப்பைத் தவிர மற்ற பஞ்ச பூதங்கள் அனைத்தையும் மாசுபடுத்திவிட்டான். அவை கொஞ்சம் கொஞ்சமாக மனிதனை அழிக்க ஆரம்பித்துவிட்டன. இவற்றோடு மனிதனின் மனம், மற்றும் புத்தியும் தவறான பாதையிலேயே செல்கின்றன.

உலகில் நடப்பவற்றை நன்றாக கவனித்துப் பார்த்தால் ஒன்று விளங்கும். மனிதன் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதை விடுத்து ஆடம்பரத்தை, பகட்டை வெளிப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறான்.

மனிதனுக்கு சக மனிதர்களை கவனிக்க நேரமில்லை. உலகத்தை கவனிக்க நேரமில்லை. சமூகத்தை பற்றி எந்த அக்கறையுமில்லை. எந்த நேரமும் பணம், பதவியின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறான். வீடு, வாகனம் வாங்குவதிலேயே பொழுதைக் கழிக்கிறான். இல்லையெனில் அறிவை வளர்க்கிறேன் என்ற பெயரில் செய்தித்தாள் படிக்கிறான். அதிலே மட்டும் என்ன இருக்கிறது?. அடுத்தவரின் அந்தரங்கத்தை தவிர வேறு எதையும் பத்திரிக்கைகள் எழுதுவதில்லை. அதை அறிந்துகொள்வதிலேதான் வாசகனும் கவனம் செலுத்துகிறான். எவ்வளவு முட்டாள்தனம்.

உலகம் அழியும் காலத்தில் கோயில்களின் எண்ணிக்கை அதிகமாகும், ஆனால் பக்தி குறையும். தாய்மார்கள் செயற்கையாக கருத்தரிப்பார்கள், பிரசவிப்பார்கள். மனிதன் செயற்கையாக உணவுப்பொருட்களை தயாரிப்பான் என்கிறது வேதம்.

இவையனைத்தும் இன்று நடந்துகொண்டிருக்கின்றன. சோதனைக்குழாய் குழந்தை, சிசேரியன், செயற்கை அரிசி, செயற்கை முட்டை, மரபணு மாற்ற காய்கறிகள், விலங்குகள் என அனைத்துமே இந்த ரகம் தான். ஊசி மூலம் மருந்தை செலுத்தி நாற்பது நாட்களில் குஞ்சைக் கோழியாக்குகிறான். இதன் மூலம் சிறுவர் சிறுமிரே இன்று பெரியவராகின்றனர்.

அறம் போதிக்கப்பட்ட பின்னரே விஞ்ஞானம் போதிக்கப்பட வேண்டும். ஆனால் இன்று மனிதன் விஞ்ஞானத்தை போதிப்பதிலேயே கவனத்தை செலுத்துகிறான். இன்றைய குழந்தை இரண்டு வயதாகும் முன்பே நன்றாக பேசக்கற்றுக் கொண்டு விடுகிறது என்பது சந்தோஷப்பட வேண்டிய விசயமல்ல. அது வருத்தப்பட வேண்டிய விஷயம். குழந்தை தனது குழந்தைத்தனத்திலிருந்து விலகிவிட்டது.  அதுவும் தந்திரமாகிவிட்டது. இன்றைய குழந்தையை தெய்வம் என்று கூறமுடியாது.

வெளியிலிருக்கும் விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் சீக்கிரமாக ஈடுபடுத்தப்படும் குழந்தை தன்னுடைய தெய்வீகத்தன்மையை இழந்துவிடுகிறது. ஏனெனில் மனிதன் தெரிந்து கொண்ட விஷயங்கள் அத்தனை அழகானவை அல்ல. உயர்ந்தவையும் அல்ல. மேலும் அதிக விஷயங்கள் பொய்யானவை. இன்றைக்கு சீக்கிரத்திலேயே பள்ளிக்கு அனுப்பப்படும் குழந்தை இயற்கையான அறிந்து கொள்ளுதலை விடுத்து பொய்களைக் கற்றுக்கொள்வதில் சீக்கிரம் தேறிவிடுகிறது. இப்படி எத்தனயோ விஷயங்களை உலக அழிந்துகொண்டிருப்பதற்கு ஆதாரமாகக் கூறலாம்.