ஆதிரை அழகா

செ. சக்கரவர்த்தி
ஜனவரி 05, 2017 04:06 பிப
ஆதிரை அழகா - உன்
அன்பொன்று போதும்
என் மனமறிந்தவன் நீயே
அறிந்தும் மறந்ததுமேனோ
இரந்துண்ணும் வாழ்வை
ஏற்றவன் நீயே - உன்னிடம்
இரக்கின்ற என்னை
நீயும் துறந்திடலாமோ

கர்மத்தின் வினையா? - இல்லை
காலத்தின் பிழையா?
வருந்திடும் வாழ்வை
விரும்பியேற்றதும் நானோ?
வலியவன் நீயே - இந்த
எளியவன் மறந்தாயோ?

உனைத்தேடி எந்நாளும்
திசைகள் தொலைத்தவன் நானே
உன்னோடு இருப்பேனென்று
என்றும் சொன்னவன் நீயே
இன்றெனை தனியில் விட்டாயே
நீ வரும்நாள் எந்நாளோ?

வசந்தத்தின் வாழ்வை
உனை வேண்டிடவில்லை
வரும்நாட்கள் எந்நாளும்
வாழ்வை பயனுள்ளதாக்கு
உன் அன்பினை தந்து
அருள் நீ ஆதிரை அழகா