கனவே கலையாதே...!

வினோத் கன்னியாகுமரி
டிசம்பர் 26, 2016 01:51 பிப

அவனது காலடிச் சுவடுகள் தேடி...

அவளின் அவனை கனவுக்குள் தொலைத்து

வெறுமையின் துணையில் விரக்தியின் அருகில்...

 

ஏதோ ஒரு நாளின் இரவுக்குள்

விழிமூடிய ஆழ்ந்த நித்திரையில்,

சாரல் மழையின் தாலாட்டில்

சில்லெனும் தென்றல் தழுவிய வேளையில்..

மனக்கதவில் அழைப்பு மணியோசை!

நித்திரையின் பிடியினூடே தாழ் திறந்தேன்

 

மனப்பறவை சிறகு விரித்தது

விழிகள் விரிய இமை கொட்டாது தரிசித்தேன்

ஆம்... என் துணையின் வருகை!

மணக்கோலம் புனைந்து தலைவனின் வருகை..

கண் சிமிட்டும் நேர‌த்தில் திருமாங்கல்யம்!!

சட்டென நோக்கிய தருணம்

புன்னகை பூத்து அருகிருந்தான் தலைவன்

 

கனவா? விழி கசக்கிக் கொண்டவளாய்

மீண்டும் திரும்பிப் பார்க்கிறேன்

மலரின் புன்னகை மனதைத் தொட்டது

வெட்கத்தில் நனைந்தது உயிர்!!!

 

ஆருயிர்க் கணவன்_ மனதில் செதுக்கிக் கொண்டவனாய்

கைகள் கோர்த்து ந‌டை பயின்றேன் வாழ்வின் படிக்கட்டுகளில்

தூக்கம் மறந்து அவன் விழிகள் படித்த நிமிடங்கள்..

தாயாக மடி சாய்த்து தாலாட்டிய நொடிகள்

அன்பே அவன் மொழியாக பரிவுடன் உரையாடல்கள்

முதன்முதலாய் என் மனதைப் படித்த ஒரே உறவாக...

 

என் மௌனங்களும் புரிந்து கொண்டவனாக

தனிமையை வலிகளை மறக்கச் செய்தவன்,

தொலைந்தவளாய் இருந்த என்னை மீட்டெடுக்க முயன்றவன்

விழநீர் சிந்துதல் அடியோடு வெறுத்தவன்,

என் கோபக் கணைகளை புன்னகையால் வென்றவன்

நீ நீயாக இருத்தலே பேரின்பம் _ பாடம் புகட்டியவன்...

 

காலடியில் வீழ்வது தேவையில்லை உயிரே!

சரிசமமாய் என்னோடு நில்லென்று உரைத்தவன்

பாதங்கள் பிடித்துவிட்டு நெஞ்சணைத்து துயில் கொள்ள

ந‌கங்கள் செதுக்கி ந‌கச்சாயம் பூசித்தர

என் அவா தடுக்காதே அன்பே என்றவன்...

 

ந‌ல்லது மட்டுமே உனக்கு ந‌டக்குமென

அடிக்கடி கூறி ஆறுதல் தந்தவன்

அன்பினில் முழுவதுமாய் மூழ்கி நின்றேன்

உயிரே அவனாக உணர்ந்து கொண்டேன்

வாழ்வு கொண்டேன் அவனுடன் இருபது நாட்கள்!

சிறிது சிறிதாக வாழ்வை நோக்கி அவனுடன்

பயணப்பட்டிருந்தேன் வெளிச்சம் நோக்கி

தொலைய வைத்தது என்னை மீண்டும் விதி!!!

 

கோர்த்து எழுதி மகிழ்ச்சியுற்றேன்

அவன் பெயருடன் என் பெயரும்..

மணிகள் சிதறுதல் போல

உறவே சிதறிவிட்டது சில மணித்துளிகளில்...

 

உடன்பாடில்லை பிரிதலில் அவனுக்கும் எனக்கும்

பிரிதலே விதியென விவாகரத்தினூடே...

புதைத்துக் கொண்டோம் எங்கள் மனதின் உணர்வுகள்

விதியென்றும் சூழ்நிலையென்றும் பிரிதலில் உறவு

விழித்துக் கொண்டது ஆழ்ந்த நித்திரை...

விலகிக்கொண்டது இணையான இமைகள்

கலைந்து போன கனவில் தொலைந்தது வாழ்வு!

 

யாருமற்றவளாய் ஏதும் அற்றவளாய்

தொடர்கிறது என் தனிமைப் பயணம்

என்னுடன் இருந்தாய் இத்தனை நாட்கள்

கைகோர்த்து உயிரான துணையாய்
 
ந‌ன்றிகள் ஓராயிரம்.....

 

எடுத்துச் சென்றுவிட்டாய் நீயே உன்னை

மனம் விட்டும் உயிர் விட்டும்...

மீண்டும் இனி ஒருபோதும் யாருக்காகவும்

திறக்கப் படாமல் அடைக்கப்பட்டது என் இதயக்கதவு

உயிர் இல்லை என்னிடம்_ இனி பாசமென்றும்

மகிழ்ச்சியான வாழ்க்கையென்றும் ஏதும் நுழைய

நிறைவுற்றது இன்றுடன் என் வாழ்வின் பயணக் குறிப்பு

இல்லை ஒரு பயணம் மீண்டும்...!

 

தேடுகிறேன் இரவிலும் பகலிலும் கலைந்த கனவை

விழிமூடி நித்திரை முயன்று தோற்றுப் போகிறேன்

முயற்சி செய்கிறேன் பொய்யாயேனும்

நின்னுடன் வாழ்வதாய் சந்தோசம் நிரப்பிக்கொள்ள...

என்றேனும் ஆழ்ந்த நித்திரை சாத்தியமாயின்

வாழவேண்டும் நின்னுடன் ஓராயிரம் ஜென்மங்கள்...!!!

 

கண் இமைக்கும் நேரத்தில்

என்னுள்ளே வந்து சென்ற

கனவே கலையாதே...!