உன்னிடத்தில் மட்டுமாவது!

முகில் நிலா
டிசம்பர் 25, 2016 10:43 பிப

முட்டை ஓடு
தாண்டி வெளிவந்த
பறவையின் ஆனந்தம்
உன்னோடான அன்பை
வெளிக்காட்டியபோது!

சட்டென இமயம் தொட்ட
பாதமாய் உன்னோடு
பேசிய கணங்களில்
வெற்றியின் உச்சம் 
கண்டேன்!

சட்டென  மின்னிய
வானவில்லாய்
அடைமழை தந்துபின்
அகன்று போனாய்!

எனக்குத் தெரியாமலில்லை
அன்பென்றதன் பின்
ஆயிரம் எதிர்பார்ப்புகள்
ஒழிந்து கிடக்கும் தான்.!

என்னுள்ளும் ஏக்கங்கள் உண்டு
சில தேடல்கள் உண்டு
எல்லைகடந்த அன்பும் உண்டு

ஆனால் உன்னிடத்தில்
எனக்கென்ன தேவையென
தேடிச் சலித்தும் ஒன்றுமேயில்லை!

எல்லாவற்றிலுமிருந்து 
வேறுபடுகிறது
உன்மீதான அன்பு

எதுவும் வேண்டாம் அக்கா
உன்னை  நேசிக்க மட்டும்
அனுமதி கொடுத்துவிடு

அன்பை அன்பாய்  மட்டும்
காட்டிவிட்டு வாழ்ந்திட
உன்னிடத்தில் மட்டுமாவது!