இறந்து போன எதிர்காலம்!

வினோத் கன்னியாகுமரி
டிசம்பர் 14, 2016 07:25 பிப
மனம் சொல்கிறது.. சத்தியமாக நீயில்லாமல் வாழ முடியாதென‌ 
பிரிந்து விடாதே என்னை விட்டு ஒரு நொடி கூட‌
நீயின்றி நானா? நீயின்றி எவ்வாறு நான் வாழ?
தினம் உன்னைப் பார்க்காமல் உன் கைப்பிடிக்குள் வசிக்காமல்
காதோரம் உன் மூச்சுக்காற்றின் தாலாட்டு இல்லாமல்
எப்படி இனி நான் வாழ?
உன் நெஞ்ச பஞ்சணை சாய்ந்து கொள்ளாமல்
எதற்கு இனி இரவு?
உன்னால் என்னை போர்த்திக்கொள்ளாமல்
எதற்கு இனி துயில்?
உன் எச்சில் குழைத்த அமுதம் இன்றி
எதற்கு இனி உணவு?
எவ்வாறு உரைப்பேன் உன்னிடம்..
நீயின்றி நானில்லையென ஒரு நிலையடைந்ததை
எப்படி மெய்யுரைக்க என் உயிரே நீதானென்று..
நீயே என் இதயமாய் நீயே என் சுவாசமாய்
நீயே என் உயிருமானாய்...
எதிர் நோக்கிய அத்தனை குணங்களும் உன்னிடமிருந்தும்
என்வாழ்வின் துணையாகாததேனோ??
உன்னை விலக்கி மாற்றான் கைகோர்த்தலே
இறைவனின் நீதிமன்றம் எனக்களித்த தண்டனையா?
பாசமென்னும் ஒன்றை கேட்டதால்
பொய் வாழ்க்கையெனும் ஆயுள் தண்டனையா?
தூக்கிலிடு இறைவா இல்லை மரண தண்டனை கொடு எனக்கு
தவறென்ன செய்தேன் நான்..
ஆயுள் கைதியென அணுவணுவாய் மரணம் சுவைக்க?
பணமென்றும் பொன்னென்றும் அலைபவரை விடுதலை செய்து
அன்பைக் கேட்ட என்னை தண்டித்தது ஏனோ?
பெண் ஜென்மம் வேண்டாமென கல்லாய் பிறந்திருப்பேன்
முடிவு இதுவென அன்றே உரைத்திருந்தால்..
ஆயுள் சிறையினில் வற்றாத விழியருவியோடு காற்றே உணவாக‌
இறந்துபோன என் எதிர்காலம்..!!!