அருஞ்சொற்பொருள்

சுரேஷ்.G.N
November 30, 2016 09:15 பிப
“ ப்ரியா, நான் கிளம்புறேன். ஒன் ஹவர் பர்மிசன் போட்ருக்கேன்.” என்ற அர்ச்சனா, கைப்பையை எடுத்து கொண்டு கிளம்பினாள்.
“என்னடி இவ்வளவு சீக்கிரம். வண்டி வேற சர்வீஸ் விட்ருக்கிற. எப்படி போவ?” என்றாள், ப்ரியா.
ப்ரியா அர்ச்சனாவின் பக்கத்து வீட்டு தோழி. இருவரும் ஒரே இடத்தில் பணி புரிபவர்கள்.
அர்ச்சனா, “நீ ஆபீஸ் முடிஞ்சதும், பாரிஸ்டா வந்து என்னை பிக் அப் பண்ணிக்க.” என்றாள்.
“பாரிஸ்டாவா? யாராவது வராங்களாடி” ஆவலுடன் கேட்டாள், ப்ரியா.
சிறிது மௌனத்திற்குப் பிறகு
“ம்ம்,…. யுவராஜ்” என்றாள், அர்ச்சனா.
“யுவி?..... உங்க அப்பாக்கு தெரியுமா?”.ப்ரியா ஆச்சர்யமானாள்.
“ம்ஹூம்”
“நானும் வேணா வரட்டுமா?”
“இல்ல நான் பாத்துக்குறேன். நீ ஆபீஸ் முடிஞ்சதும் வந்துரு.” என்றவள். ஏதோ யோசித்த படி நின்றாள்.
“ரிலாக்ஸ்ஸாப் போடி. ஏன் இவ்வளவு டென்சன். ஃப்ரீயா இரு” அறிவுறுத்தினாள், ப்ரியா.
தலையை ஒரு சிலுப்பு சிலுப்பிய அர்ச்சனா, “ஓகே, நான் கிளம்பறேன்.” என்று திரும்பி நடந்தாள்.
“அர்ச்சனா, ஒரு நிமிஷம். எதாவது ப்ராப்ளம்ன்னா ஃபோன் பண்ணுப்பா” என்றாள் ப்ரியா.

‘பாரிஸ்டா’ காபி ஷாப்பில். யுவராஜ் அமர்ந்திருக்கும் இடத்தின், எதிரே அமர்ந்தாள், அர்ச்சனா.
“எப்டி இருக்கே” என்றான், யுவராஜ்.
“இனிமேதான் நல்லா இருப்பேன்” என, முகத்தை திருப்பினாள் அர்ச்சனா.
“ம்ம்…. ஒகே, இந்தா வீட்டு கீ” மேஜை மீது வைத்தான்.
“காலி பண்ணீட்டேனு கேள்விப் பட்டேன்” என்றாள்; அர்ச்சனா.
“நீ இன்னும், என்னென்னமோ கேள்விப் பட்டிருப்ப. அதெல்லாம் உண்மையானு தெரிஞ்சுக்க உன்னால முடியல. அத விடு, வீட்ல இருக்குற திங்ஸ் எல்லாம் உனக்கு உங்க அப்பா கொடுத்தது. அதெல்லாம் எடுத்துட்டு, காலி பண்ணிக் குடுத்தீங்கன்னா, ஹவுஸ் அக்ரிமெண்ட் க்லோஸ் பண்ணிப் பணத்தை வாங்கிருவேன். உன் ஜுவல்சைல்லாம்த் திருப்பித் தந்துருவேன்.”
“இதுக்குதான் வரசொன்னியா”
"பின்ன என்ன கன்வின்ஸ்ப் பண்றதுக்கா வர சொன்னேன்”
“(திமிரு இன்னும் அப்படியே இருக்கு)” மனதில் நினைத்தாள்.
“ஆரம்பத்துல கன்வின்ஸ் பண்ணலாம்னு வந்தப்ப எல்லாம் என்னன்னு கூடக் கேட்காமப் போயிட்ட.
அடுத்த மாசம் எப்படியும் டிவோர்ஸே வந்துரும்.”
மௌனமாய் முறைத்து கொண்டே இருந்தாள், அர்ச்சனா.
“பிரச்சனையப்ப நான் விட்ட வார்த்தைக்கே, இன்னும் உனக்கும், உங்க அப்பாவுக்கும், அர்த்தம் புரியல. இதுல இப்ப எதாவதுப் பேசி…..” என அவன் சொல்லி கொண்டு இருக்கும் போதே,
“உன்னோட வார்த்தைக்கு, தமிழ்லத் தனியா க்ளாசரி வச்சுருக்காங்களா?” என்றாள், திமிறாக.
அவன், புன்னகைத்தான்.
“சரி, ஓகே என்ன சாப்பிட்ற” என்றான்.
“எனக்கு வேணும்கிறத என்னால வாங்கிக்க முடியும்.”
“கடைசியா உன்கூட ஒரு காபியாவது சாப்பிடலாம்னுதான்….”
“ஏன்? சாகப்போறியா?”
“இந்த உலகத்துல நீ மட்டும்தான் எனக்குப் பொண்டாட்டியா இருக்க முடியும்னா? சாகலாம், தப்பில்லை”
“(நீயெல்லாம் செத்தாலும் திருந்தமாட்டடா, உடம்பெல்லாம் திமிரு.)” மனதினில் நினைத்தாளவள்.
“திமிருன்னுதான நெனைக்கிற, கூடப் பொறந்தது. அது எப்படிப் போகும்.”
“உன் காசுல காபி சாப்டுறதும் வெசம் சாப்டுறதும் ஒன்னுதான்.
“அப்ப, நீ எனக்கு வாங்கிக் குடு நான் சாப்பிடுறேன்.”
அவளே இருவருக்கும் காப்பி ஆர்டர் செய்தாள்.
காப்பியைக் குடித்து கொண்டே “தேங்க்ஸ், வரமாட்டேன்னு நெனைச்சேன்.” என்றான், யுவராஜ்.
“நான் வந்தது, எங்க அப்பாக்கு தெரியாது. கோர்ட்ல சொல்லும் போது அங்க வந்து கொடுத்தாப் போதும்.” என்று கீயை அவனிடமே தள்ளி வைத்தாள்.
சிரித்தான்.
“என்ன டீஸ் பண்ட்றியா?” என்று முறைத்தாள்.
“இல்ல,,,, இப்டீ மத்தவங்க என்ன சொல்லுவாங்கன்னுப் பாத்துப் பாத்துதான், கன்வின்ஸ்க்கு கூட ஆரம்பத்துல யோசிக்காம விட்டுட்டு, இன்னைக்கு என் வாழ்க்கையை டிவோர்ஸ் வரைக்கும் கொண்டு வந்துட்டேன்.”
“திமிருக்கு வெலை கொடுக்கணும்.”
“யேன் திமிறுக்கு எனக்கு டிவர்ஸ் ஓகே. உனக்கு ?”
பட்டென “என்ன? கன்வின்ஸ்தான் போல………………. ஜென்மத்துக்கும்...” என தொடர்ந்த அர்ச்சனாவை, கையால் மறித்து
“நிறுத்துரியா, இது ஒரு பிரச்சனைனு நாம கோர்ட் வரைக்கும் போனதே தப்பு,…………..இத ஜென்மத்துக்கும் வேற இழுக்குறியா?. என்றான், யுவராஜ்.
மேலும் தொடர்ந்து “அப்படி என்னடி தப்புப் பண்ணேன்.
உன்னை அடிச்சேன்…. அவ்வளவுதான்.
அதுக்கு உங்க அப்பா, யேன் ஆபிஸ் வரைக்கும் வந்து அவமான படுத்துனாரு. அப்ப கூட, ‘வாங்க வீட்டுக்கு போய் பேசலாம்’னு தான் கூப்பிட்டேன். ஆனா அவரு கேட்கல. பிரச்சனைப் பண்ணனும்னே நின்னாரு. வேற வழியில்லாம,
‘உங்க பொண்ணு எப்பப் பாத்தாலும் சண்டை வரும் போதெல்லாம், அவ கல்யாணத்துக்கு முன்னாடிப் பழகுனப் பையனைப் பத்தியேப் பேசுறா, அன்னைக்கு, ‘இப்ப ஒரு ஃபோன் பண்ணாப் போதும். அவன் இப்பவே வந்து என்னை கூட்டீட்டுப் போயிடுவான்’னு சொல்றா…..
கேட்டுட்டுக் கைத் தட்ட சொல்றீங்களா?’ன்னுக் கேட்டேன்.
அவர் நம்பல, கைய ஓங்கீட்டு வந்துட்டாரு. நெலமைய சமாளிக்கக் கஷ்டமாயிடுச்சு. உங்க அப்பாவோட ஃப்ரண்டு எப்படியோ அவர ஆஃப் பண்ணாரு. முடிஞ்சுருச்சுன்னு நெனச்சேன்.
என் கோ ஸ்டாஃப் கிட்ட, உங்க அப்பா நம்பலைங்கறதுக்காக, ‘அவ பேசுறத வேணா, இனி வீடியோ எடுத்துக் காட்டறேன். பாத்துக்க சொல்லுங்க’ ன்னு சொல்லீட்டிருந்தேன். அது உங்க அப்பா காதுல என்னன்னு விழுந்த்துச்சோ.
‘என்னடா வீடியோ காட்டுவ? என்ன வீடியோ காட்டுவ?’ன்னு மரியாதையில்லாம, அசிங்கப் படுத்தீட்டாரு.
நானும் ஆத்திரத்துல, ‘எல்லா வீடியோவும்தான்யா’ னு, டென்சன்லக் கத்தீட்டேன். அப்பறம், அவரு ஸ்டேசன் அது இதுன்னாரு. ஆஃபீஸ்ல எல்லாரும் பேசி ஒருவழியா அனுப்பீட்டாங்க.
ரொம்ப அப்சட் ஆகி, ஆபீஸ்க்கு லீவு சொல்லீட்டு, நேரா பார்ருக்குப் போயிட்டேன். அந்த நேரத்துல, நீ ஃபோன் பண்ணி, உங்கப்பா மாதிரியே, நான் சொன்னது அந்த வீடியோதான்னு நெனச்சுட்டு, ஸ்டேசன் கீஸன்னு கத்தவும், ட்ரின்க்க்ல வேற இருந்தேன். டென்சன்ல ‘ஆமாடி, இப்பவே நெட்ல விடுறேன் குடும்பத்தோட உக்காந்துப் பாருங்க’ன்னு சொன்னேன்.
ஸ்டேசனெல்லாம் போக மாட்டீங்கன்னு, தெரியும். ஆனா நோட்டீஸ் அனுப்புவீங்கன்னு எதிர் பாக்கல. நோட்டீஸப் பாத்ததும், கோவம் வந்துருச்சு. யேன் மேல என்ன தப்பு. பாத்தரலான்னுதான் திமிருல, கேஸ் அட்டன்ட் பன்னுனேன். கொஞ்ச நாள்ல தப்புன்னு தோணுச்சு. உங்கிட்டப் பேசலாம்னு வந்தப்ப எல்லாம்… திரும்பியேப் பாக்கல.” என புலம்பியவனிடம்
“அப்ப… நீ, எங்கப்பாவ, அன்னைக்கு அடிக்கக் கை ஓங்கீட்டு வந்ததா சொன்னாங்க?” சந்தேகமாய் கேட்டாள்.
“அப்படியா. எனக்குத் தெரியாதே.” என்று கிண்டலாய் சிரித்தான்.
வெடுக்கென்று மேஜை மீது வைத்திருந்த மொபைலை எடுத்து அவள் தந்தைக்கு அழைத்தாளவள்.
“அப்பா, அன்னைக்கு நீங்க யுவியப் பாக்க அவன் ஆஃபீஸ் போனப்ப என்ன நடந்தது. கரெக்டா சொல்லுங்க.” என வேகமாய் விசாரித்தாள்.
“இப்ப எதுக்குக் கேக்குற?” என்றார், புரியாமல்.
“சொல்ல்லுங்க என்ன நடந்துது” என்று கடிந்தாள்.
“எங்க இருக்க நீ???? யாரயாவது பாத்தியா?.”
“இப்ப சொல்றீங்களா? இல்லையா?”
“கூட ப்ரியா இல்லையா? இருந்தா குடு”
“ப்ச்…” எரிச்சலாய் இணைப்பை துண்டித்தாள், அர்ச்சனா.
சிறிது யோசித்தவள் அவளுடய அப்பாவின் நண்பர் எண்ணுக்கு அழைத்தாள்.
“அன்கிள் நான் அச்சு பேசுறேன்.” என்றாள்.
“ஆங். சொல்லு அச்சு, எப்டி இருக்க?”
“நல்லா இருக்கேன் அன்கிள், நீங்க?”
“நல்லா இருக்கேன், நல்லா இருக்கேன்.. என்னமா விசயம்”
“அன்கிள், அன்னைக்கு நீங்களும் அப்பாவும், யுவியை போயி அவன் ஆபீஸ்ல பாத்தப்ப, என்ன நடந்துதுன்னு கொஞ்சம் சொல்றீங்களா?”
“யேம்மா, இப்ப கேக்குற?”
“ப்ளீஸ் அன்கிள், சொல்லுங்க. அன்னைக்கு யுவி அப்பாவ உண்மையிலேயே அடிக்க வந்தானா?”
“ம்ம்…ம்ம். நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன். அப்பறம் கூப்பிடவா?”
“யேன் அன்கிள், அப்பாட்டக் கேக்கனுமா?
“இல்லைல்ல..” என அவர் தயங்கும் போதேக் குறுக்கிட்டாள், அர்ச்சனா.”
“சொல்லுங்க அன்கிள், இது என் வாழ்க்கை.”
“அது, அது வந்து மா, அவன் அடிக்க வரல. பட்,”
“ம். சொல்லுங்க ப்ளீஸ்”
“ அவன் உன்னை பத்தி தப்பா பேசுனான். அதனால உங்க அப்பாதான் அவனை அடிக்க போனான். நான் தடுத்துட்டேன்..”
“அப்படி என்ன பேசுனான் அன்கிள்?”
“அது, நீ யாரயோ மேரேஜுக்கு முன்னாடி லவ் பண்ணதாவும், அத அடிக்கடி நீ சண்டை வரும் போதெல்லாம் சொல்லி கம்பேர் பண்றதாவும் சொன்னான்.”
“அத அன்னைக்கு நீங்களும் அப்பாவும் எங்க கிட்ட சொல்லவே இல்ல?”
“நான் கூட உங்கிட்ட கேக்க சொல்லி உங்க அப்பாட்ட சொன்னேன். உங்க அப்பாதான், ‘என் பொண்ணப் பத்தி எனக்கு நல்லா தெரியுன்டா. அவ அப்டியெல்லாம் பண்ணீயிருக்க மாட்டா. இவன் ஆஃபீஸ் வரை நாம வந்துப் பிரச்சனைப் பண்ணுனதால, இவ்வளவு கேவலமாப் பேசுறான். இதப் பத்தி வீட்ல வாயே தெறக்க வேண்டான்‘ னு சொல்லிட்டான்.”
சிறிது மௌனம். பிறகு, அவரே மேலும் தொடர்ந்தார்.
“உன் மேல உங்கப்பாவுக்கு அவ்வளவு நம்பிக்கை. அது மட்டும் இல்லாம ‘யேன் அடிச்சேன்னு கேட்ட்துக்கே யேன் பொண்ணை அத்தனை பேரு முன்னாடி இவ்வளவுக் கேவலமாப் பேசுனவன். நாளைக்கு எதாவதுப் பண்ணீட்டு, இன்னும் தப்பா எதாவது சொல்லுவான். டைவர்ஸ் ஆனாலும் பரவாயில்ல. எனக்கு என் பொண்ணு உசுரோட இருந்தாப் போதும்.’னு நெனைச்சுதான் உங்க அப்பா, அந்தப் பிரச்சனையில, உன் புருசன்தான் அடிக்க வந்ததா, சொன்னான். நானும் உங்க அப்பா சொல்றது உண்மையா? இல்ல உன் புருஷன் சொல்றது உண்மையான்னு தெரியாம தலையிட முடியல.”
மீண்டும் மௌனம்.
அவரே மீண்டும் தொடர்ந்தார். “ என்ன, அர்ச்சனா?”
“……ஓகே …அன்கிள்….. அப்ப,.. யுவி அப்பாவ அடிக்க வரல?”
“ஆமா அச்சு. நீ ஒரு தடவை யுவராஜ் கிட்ட டிவர்ஸ்க்கு முன்னாடிப் பேசிப் பாருடா“
“ஓகே.. அன்கிள். தேன்க் யூ. நான் அப்பறம் கூப்பிடுறேன்.”
“ஓகே டா” என இருவரும் இணைப்பைத் துண்டித்தனர்.
அர்ச்சனா யுவராஜைப் பார்த்தவாரே. மொபைலை மேஜை மீது வைத்து விட்டுத் தலையைக் கோதினாள்.
குடித்தக் காப்பிக்கு பில் வந்தது.
யுவராஜே, பில்லுக்கு பணம் செலுத்தினான். அவள், அதை கவனித்தாலும் எதுவும் சொல்லவில்லை.
அவள் மொபைல் ஒலித்தது. யாரென்று பார்த்தாள். ப்ரியாதான்.
“சொல்லு ப்ரியா, கிளம்பிட்டீயா?”
“இன்னும் டென் மினிட்ஸ் ஆகும், அச்சு. உங்க அப்பா வேற கால் பண்ணுனாருடி, நான் எடுக்கல. திரும்பவும் பண்ணா நீ ரெஸ்ட் ரூம் போயிருக்குறதா சொல்லீடவா” என்றாள், ப்ரியா.
“இல்ல யுவி கூடதான், இருக்கேன்னு சொல்லு. … நான் அவருகிட்ட நெறைய பேசனும். வீட்டுக்கு போய்ப் பேசிக்குறேன்.” என்றாள் அர்ச்சனா, கோபத்துடன்.
யுவராஜ், அர்ச்சனாவையே பார்த்தான். அர்ச்சனா, “யுவி,… லீவ் மி ப்ளீஸ்… ப்ரியா வர்ர வரை, நான் கொஞ்சம் தனியா இருக்கனும்.” என்றாள்.
உடனே யுவராஜ், ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டான். “நான் வேணும்னா கொண்டு வந்து விடவா?.” என்றான்.
அவள் ஏதும் சொல்லாமல் அவனையேப் பார்த்தாள்.
“நீ முறைக்கிறியா இல்ல, இது என்ன ரியாக்சன்?”
மீண்டும் மௌனம்
“ஓகே, எப்ப வேணாலும் ஃபோன் பண்ணு. நான் பேசுவேன். இப்ப கிளம்புறேன்” என்றபடி கிளம்பினான்.
சிறிது நேரத்தில் ப்ரியா வந்ததும், இருவரும் கிளம்பி வீடு வந்தனர். வாசலில் ப்ரியா, அர்ச்சனாவை வண்டியிலிருந்து இறக்கி விடும் போதே வீட்டுக்குள் இருந்து,
“சாப்பாடுதான போடுற அவளுக்கு, வெக்கமே இல்லாம அவன் கூட காபி சாப்பிட போயிரூக்காளாமா, காபி” என கத்தி கொண்டிருந்தார், அர்ச்சனாவின் தந்தை நாகராஜ்.
“எதுக்கு டென்சனாகுறீங்க. வந்துட்டா அவ, நான் பேசுறேன்.” என அவர் மனைவி துர்கா அவரை சமாதானப் படுத்த முயன்றாள். “நீ ஒண்ணும் பேச வேண்டாம், வரட்டும்” என கடிந்தார் நாகராஜ்.
வாசலில், ப்ரியா “என்னடி உள்ள பாம்பு படமெடுத்து ஆடுது.” என்றாள், கிண்டலாக.
“ஒத வாங்கப் போற நீ, சரி வா காபி சாப்பிட்டுப் போ.” என்றாள், அர்ச்சனா.
மீண்டும் ப்ரியா, “எதுக்கு உள்ள வந்து, அனகோண்டா படம் பாக்கவா? அத, எங்க வீட்டு ஜன்னல் வழியாவே பாத்துக்கிறேன்.” என கிளம்பினாள்.
“வாய் ஓவர்டி உனக்கு” என்ற வாறே, வீட்டிற்குள் நுழைந்தாள்.
“எங்கடி போன” என்றாள் துர்கா.
அர்ச்சனா பதிலேதும் பேசாமல் அவளுடைய அறைக்குள் சென்றாள். சில நிமிடம் கழித்து வெளியே வந்தாள்.
யாரும் எதுவும் பேசவில்லை.
நாகராஜ், தொலைகாட்சியைப் பார்த்தவாறு சோபாவில் அமர்ந்திருந்தார். ஆனாலும், அவர் முகத்தில் விரக்தி இருந்தது. அவரையும் துர்கா சமையல் அறையில் வேலையாய் இருந்ததையும், கவனித்த அர்ச்சனா.
நாகராஜின் முன்னே வந்து நின்றாள்.
“ஏன்ப்பா, நீங்க எதாவது பேசுங்க?” என்றாள்.
“ நீ……. பேசனும்னுதான வந்திருக்க, நீ பேசு நாங்கக் கேட்டுக்கறோம்.” என்றார், நாகராஜ் கோபமாக.
அவரின் அருகில் போய் அமர்ந்தாள்.
“என் மேல கோபத்துல இருப்பீங்கன்னு தெரியும். நானும் உங்க மேல கோபத்தோடதான் இருந்தேன். யோசிச்சேன். கோபத்துல எவ்வளவுப் பிரச்சனைய உருவாக்கியிருக்கோம்னு. அதான் வரும் போதே. கோபத்தை தூக்கிப் போட்டுட்டு வந்துட்டேன்.
எனக்கு தெரியும் ப்பா, நீங்க என் மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்கன்னு” என்று சொல்லி கொண்டே அவரின் தோளில் தலை சாய்த்தாள்,
சில நொடிகள் ஓடின. பிறகு அர்ச்சனாவே தொடர்ந்தாள்.
“ நான் யுவி கூடவேப் போகட்டுமாப்பா?” என்றாள்.
சற்றே, அவளின் செய்கையில் நிலைகுலைந்தவர், “ க்கும் க்க்கும்” செருமிக்கொண்டே, “துர்கா…. தண்ணி குடுமா” என்றார்.
துர்கா, தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள்.
குடித்தவர், “ நீ, முடிவ கேட்குரியா? இல்ல முடிவெடுத்துட்டியா?” என்றார், சாந்தமாக.
“நான், நாகராஜ் பொண்ணு. உங்கள கேக்காம எதுவும் செய்ய மாட்டேன் ப்பா” என்றாள்.
“அப்ப முடிவ எடுத்துட்டுதான் பேசுவ.” என்றாள், அவள் அம்மா துர்கா.
உடனே அர்ச்சனா “என்னம்மா நீயும் புரிஞ்சுக்காம” என கெஞ்சும் விதமாய் கேட்டாள்.
“விடு துர்கா, இது நல்ல முடிவாதான் எனக்குப் படுது.” என்றார் நாகராஜ்.
அதை கேட்ட்தும் ‘இத இந்த மனுசந்தான் சொல்றாரா’ ன்னு இருவருக்கும் சந்தேகம். ஆனால்,
அர்ச்சனாவுக்கு, மனதின் ஓரத்தில், அவள் அவரிடத்தில் பேசிய விதத்தில், இளகுவார் என நம்பிக்கையிருந்தது.
“இவதான் ‘அவன் அடிச்சுட்டான், அவன் வேண்டான்’ னு வந்தா. பாத்துக்கிட்டோம்.
இப்ப அவன் கூட போனும்கிறா.”
சிறிது மௌனமானவர், “வாழ்க்கை புரிஞ்சுருக்கும். நான் செஞ்ச தப்பும் எனக்கு புரியுது.” என வருத்தமாய் கூற,
“இல்லப்பா, நீங்க, எங்க ஜென்ரேசன புரிஞ்சு நடந்துக்கனும்னு பாக்குறீங்க. ஆனா எங்க காலம் செம ஸ்பீட் . அதான் உங்களால எங்களையும் புரிஞ்சுக்க முடியல, எங்க ப்ராப்ளத்தையும் சால்வ் பண்ண முடியல. இதுல உங்க தப்பு எதுவும் இல்லப்பா. நீங்க மத்த அப்பா மாதிரி என்கிட்ட நடந்துக்கல. அதுவே எனக்கு போதும்ப்பா” என்றாள் அர்ச்சனா.
அவளின் தலையை வருடியபடி, “சரி, நாளைக்கே யுவராஜ்கிட்ட போய் பேசுறேன். என்றார் நாகராஜ்.
“இல்லப்பா நீங்க வக்கீல்கிட்ட பேசுங்க, அவன்கிட்ட நான் பேசிக்கிறேன்.” என புன்னகைத்தாள்.
“மொதல்ல ‘அவன் இவன்’னு பேசுறத நிறுத்துடீ” என கண்டித்தாள் துர்கா.
“அப்ப நீ மட்டும், எங்கப்பாவ அவர் இல்லாதப்ப அடிக்கடி, ‘அவன், இவன்’னு கூப்பிடுற ” என துர்காவை, நாகராஜிடம் சிக்க வைத்தாள் அர்ச்சனா.
“அடி………. போட்டு குடுக்குறியாடி,” என, செல்லமாய் அடிக்க வந்தாள், துர்கா.
நாகராஜ், புன்னகைத்துக் கொண்டே, ஒரு கையால் மகளை, அணைத்து கொண்டு, மறு கையால், துர்காவை விலக்கி விட்டு, “யேன் பொண்ணுடி” என்றார்.
“ம்ம்” என்று கூறி அப்பாவின் மார்பில், புதைந்து கொண்டாள், அர்ச்சனா.