கார்த்திகை மலர்களே வணங்குகிறோம்!

பூங்கோதை செல்வன்
November 27, 2016 10:37 முப
கார்த்திகையின் கனல்பூக்களே
விடுதலையின் வித்துக்களே
ஆர்த்தெழும் உணர்வலைக்குள்
ஆழ்த்திவிட்ட வேங்கைகளே
சாற்றுகிறேன் பாமாலை
சாவை வென்ற நாயகரே

தேடியும்மை விழிசோர
தெம்பிழந்து மனம் சோர
கூடிழந்த பறவைகளாய்
குடிபெயர்ந்து வாழ்ந்தபோதும்
கூடியும்மை தொழுதிடுவோம்
குலவீரக் கொழுந்துகளே

கார்மேகம் கனிந்ததென்றல்
கண்பறிக்கும் வேகமின்னல்
போரிசைக்கும் இடிமுழக்கம்
பொழிகின்ற பூமழையும்
சீறும்  சுழல்காற்றும் உம்மை 
சிந்தனைக்குள் நினைவுறுத்தும்

ஈழத்தின் யாவுமாகி 
இதயத்தின் நாளமாகி
காலத்தின் தடயமாகி-ஈழ
கனவுதந்து சென்றவரே
நாயகரே உறங்கிடுங்கள்
நனவாகும் உம்கனவு 

நாளையொரு நாடுகாண்போம்
நல்லதொரு அரசமைப்போம்
கோழைகளாய் ஓயாமல்
கொள்கையோடு உழைத்திடுவோம்
வேங்கையர் உம்பாதங்களில்
வெற்றியினை படைத்திடுவோம்
அதுவரை
ஏற்றுகிறோம் நெய்விளக்கு
உறங்கிடுவீர் அமைதிகொள்வீர்!